Sunday, April 15, 2012

"காளத்தியான் என் கண்ணுளான் "


சிவபெருமான் எங்கே இருக்கிறான், அவனைக் கண்டவர்கள் யார், அவன் உருவம் எவ்வாறு இருக்கும் என்றெல்லாம் அடுக்கப்படும் கேள்விகளுக்குத் திருமுறைகள் விளக்கம் அளிக்கின்றன. அவன் இல்லாத இடமே இல்லை என்று சொன்னால் , புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் அநேகர். சில இடங்களையாவது அவர்களுக்குப் புரியும் வகையில் சுட்டிக்காட்டி, அவரவர் அனுபவத்தால் அவனருளைப் பெறுவதற்கு வழியைக் காட்டுகின்றன  இத் தெய்வப் பனுவல்கள்.

"உள்ளம்  பெருங்கோயில்" என்றார் திருமூலர். மனம் மாசற்றபோது அதில் மாதேவன் கோயில் கொள்கிறான். மெய் அடியார்கள் தம்  மனத்திலேயே கோயில் கட்டி வழிபாடு செய்வதை, திருநின்றவூர்ப் பூசலார் நாயனார் வரலாற்றால் அறிகிறோம். யார் தன்னை வஞ்சம் இன்றி நினைக்கிறார்களோ அவர்களது மனத்தில் சிவன் வீற்றிருக்கிறான். "நினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்" என்றார் அப்பரும்.

அடுத்ததாக, யோக நெறியில் அவனைக் காண்போர்கள், துவாதசாந்தத்தில் காண்பார்கள். தலையின் மேல் அவ்வாறு இருப்பதையும் அந்நெறியில் நிற்போர்கள் உணர முடியும். சீர்காழிப்  பெருமான் தனது உச்சியில் நிற்பார்  என்று ஞானசம்பந்தப் பிள்ளையார்  இதைத்தான் குறிப்பிட்டார். தலங்களுள் துவாதசாந்தத் தலம் என்று மதுரை குறிப்பிடப்படுகிறது.

இனி, அவன் உறைவிடமாக வாய் சொல்லப்படுகிறது. வாயிலிருந்துதானே அவன் புகழ் பேசும் வாக்கு வெளிப்படுகிறது?  அந்த வாக்கு சிவ வாக்காகவே ஆகிவிடுகிறது. "எனது உரை தனது உரை" என்பார் சம்பந்தர்.
இறைவன் எந்த இனத்தோடு ஒட்டி வாழ்பவன் தெரியுமா? தனது தொண்டர்களை இனமாகக் கொண்டு நீங்காது உறைந்து அருள் செய்கிறான். அவன் அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்பவன். யார்க்கும் தெரியாத தத்துவனாய் இருந்தபோதும், அடியார்களுக்கு அணியன்  ஆகி நிற்பவன். அதிலும் தன் அடி ஒன்றையே கதியாகக் கொண்டு தனக்கு முன்னர் பாடும் தொண்டர்க்கு எளியவன். அவர்களைத் துன்பக் கடலிலிருந்து கரை ஏற்றும் தோணி ஆகி விளங்குபவன். மிக்க அன்போடு அழும் தொண்டர்க்கு அமுதாகி அருள்பவன். பக்தர்க்கு என்றும் கண்ணிடை மணியாகி நிற்பவன்.
இமையவர்கள் இன்னமும் துதிக்க  நிற்பவன்  அப்பேரருளாளன் . அத்தேவர்களின் சிரத்தின் மீது இருக்கின்றான். அது மட்டுமா? ஏழு அண்டங்களையும் கடந்த கடவுளாக அவன் ஒருவனே விளங்குகின்றான். நிலங்களாகவும் கொன்றைப்பூவிடமும் மலை,காற்று, நெருப்பு ஆகிய வடிவிலும் விளங்கும் அஷ்ட மூர்த்தியும் அவனே. கயிலாய மலைச் சிகரத்தின் உச்சியிலும் , தக்ஷிண கைலாயமாகிய காளத்தியிலும் கோயில் கொண்டுள்ள இறைவன் என் கண்ணை விட்டு அகலாது விளங்குகின்றான் என்கிறார் அப்பர் பெருமான். இதோ அப்பாடல்:

 மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்
    வாயாரத் தன் அடியே பாடும் தொண்டர்
 இனத்தகத்தான் இமையவர் தம் சிரத்தின் மேலான்
   எழண்டத்தப்பாலான் இப்பால் செம்பொன்
 புனத்தகத்தான் நறும் கொன்றைப் போதினுள்ளான்
   பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான்
   காளத்தியான் அவன்  என் கண் உள்ளானே.

"என் கண் " என்பதற்கு " என்னிடத்தில்" என்றும்  "என்  கண்ணின் மணியாகி நீங்காது உறையும்" என்றும் இரு விதமாகப் பொருள் கொள்ளும்போது தெய்வீக மணம் ,இப்பாடலில் மேலோங்குவதைக் காணலாம்.