Monday, November 13, 2017

அடியேன் உன் அடைக்கலம் மாணிக்க வாசகர்

Image result for manickavasagar images
மாணிக்க வாசகர் - இணைய தளப் படம் 

பிரிவு ஆற்றாமை என்பது தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் இடம் பெறுவதைக் காண்கிறோம். பெரும்பாலும் இச சொல்லை அகத் துறையை ஒட்டி வழங்குவதாவே நினைக்கிறோம். அதாவது தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமையை வெளிப் படுத்துவதாக மட்டும் தோன்றும். ஆனால் பக்தி இலக்கியங்களில் இதே வார்த்தையை இறைவனோடு இணைத்துப் பார்ப்பதையும் காண முடிகிறது.

அன்றாடம் கோயிலுக்குச் செல்பவர்கள், வெளியே வரும்போது பிரிவு ஆற்றாமையை உணர்கிறார்களா என்றால், மிகச் சிலரே அவ்வகையைச் சார்ந்தவர்கள் என்று சொல்ல முடியும். நமக்கு உயிர்க்கு உயிராக இருப்பவர்களையே நாம் தினமும் அதிக நேரம் எண்ணாத போது, இறைவனை சொற்ப நேரமே சிந்திக்கிறோம் என்பது உண்மை அல்லவா?.

அருளாளர்களோ இறைவனை ஒருகணமும் பிரிவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திருவாரூர்ப் பெருமானைப பிரிவதை  ஆற்றாத சுந்தரர், “ எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே” என்றும், “ ஆரூரானை மறக்கலும் ஆமே ? “ என்றும் பாடுகிறார்.

உண்மை அடியார்கள் இறைவனைப் பிரிவது என்பதையே அறிய மாட்டார்களாம். இப்படிச் சொல்கிறார் மாணிக்க வாசகர். ஏன் தெரியுமா? அவர்கள் அருளாகிய ஒப்பற்ற செல்வத்தைப் பெற்றவர்கள். அச்செல்வமோ அழியாத செல்வம். பெருமானது திருவடிகளை அன்றாடம் இடையறாது நினைத்தும் பூஜித்தும் பெறப்படுவது. சிந்திப்பவர்களுக்கு பழவினை தீர்த்து முத்தி கொடுப்பது அப்பாத மலர்கள் என்று அப்பர் பெருமான் திருவையாற்றுப் பதிகத்தில் குறிப்பிடுகிறார். ஆகவே, “ திருவே,என் செல்வமே” என்று அவர் போற்றுவதைப் பார்க்கிறோம். அதைத்தான் மணிவாசகரும்,
“பிரிவு அறியா அன்பர் நின் அருட்பெய் கழல் தாளிணைக்கீழ்
மறிவு அறியாச் செல்வம் வந்து பெற்றார் “  என்பார்.

இவ்வாறு கேள்விப்பட்டிருந்தும், பெருமானே, உன்னை வழிபடும் நெறியை நான் அறியவில்லை. உன்னையும் அறியமுடியவில்லை. அதற்கான மெய்ஞ்ஞான அறிவும் எனக்கு வாய்க்கப்பெறவில்லை. எல்லா உலகங்களையும் உடைய மூலாதார மூர்த்தியே, எனக்கு நின்னை அன்றி வேறு கதி இல்லை. நின் திருவடிகளே சரணென்று தஞ்சம் அடைந்தேன். இவ்வறிவற்றவனையும் கருணையினால் கலந்து ஆண்டு கொண்டு காத்தருளுவீராக.  உனது அடைக்கலம் என்று வந்தடைந்த இந்த எளியவனுக்கும் அருள் புரிந்து அடைக்கலம் தருவீராக என்று அகம் குழைந்து பாடுகின்றார் மாணிக்க வாசகப் பெருமான்.

“ உன்னை வந்திப்பதோர்
நெறி அறியேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும்
அறிவறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.”

திருவாசகத்தில் உள்ள அடைக்கலப்பத்தில் இடம்பெறும் இப்பாடலை இப்போது முழுவதும் காண்போம்:

 “பிரிவு அறியா அன்பர் நின் அருட்பெய் கழல் தாளிணைக்கீழ்
மறிவு அறியாச் செல்வம் வந்து பெற்றார்  உன்னை வந்திப்பதோர்
நெறி அறியேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும்
அறிவறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.”


இப்பிரிவு ஆற்றாமை உண்மை அடியவர்க்கே ஏற்படுவது என்பதை இதன் மூலம் அறியலாம். இந்நிலைக்கு உயருவது இப்பிறவியின் நோக்கம் என்பதையும் நாம் உணர முடிகிறது.  

Monday, October 23, 2017

சந்தத் தமிழ்

திருஞானசம்பந்தர்-சீர்காழி-இணையதளப் படம் 
திருஞானசம்பந்தரைப் போலவே தானும் சந்தத்தமிழ் பாடுமாறு அருளவேண்டும் என்று முருகப்பெருமானிடம் விண்ணப்பிக்கிறார் அருணகிரிநாதர். “ புமியதனில் ப்ரபுவான புகலியில் வித்தகர் போல அமிர்த கவித் தொடைபாட அடிமை தனக்கு அருள்வாயே” என்பது அவ்விண்ணப்பம். இங்கு “ புகலியில் வித்தகர் என்பது சம்பந்தரைக் குறிப்பது. புகலி என்பது சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களுள் ஒன்று. 

திருஞானசம்பந்தர் அருளிய ஞானப் பனுவல்கள் அனைத்தும் இயல்,இசை என்ற இரண்டும் விஞ்சுமளவில் அமைந்துள்ளதை வியக்காதவர் இலர். ஆனால் சம்பந்தரோ தனது வாக்கில் இருந்து பனுவல்களை வெளிப்படுத்துபவர் சிவபெருமானே என்பதை, “ எனது உரை தனது உரையாக”  எனப்பாடியதால் அறியலாம். மேலும், “ இயல் இசை எனும் பொருளின் திறமாம் “ என்று பாடியதால் அனைத்தும் சிவனருளே என்பதைத் தெளிவு படுத்தியுள்ளார் குருநாதர்.

சந்த அழகு ஒரு பக்கம் இருக்க, ஒரே எழுத்தைப் பாடலில் பல இடங்களில் வைத்து ஞானசம்பந்தப்பெருமான் பாடும்போது சிலிர்க்க வைப்பதாய் அமைந்துள்ளது. எடுத்துக் காட்டாக அவரது தேவூர்த் திருப்பதிகத்தை நோக்குவோம்:

முதல் பாடலிலேயே அழகுத் தமிழ் கொஞ்சுவதைக் காணலாம். இதில் டகரம் விரவி வருவதைப் பார்க்கலாம்.

காடு பயில் வீடு முடைஒடு கலன் மூடும் உடை 

  ஆடை புலித்தோல்  
                                        
தேடுபலி ஊண் அது உடை வேம் ; மிகு வேதியர் 
   
  திருந்து பதிதான்                                                       

நாகம் அது ஆ மஞ்ஞை பா அரி கோல்                      

  கை மறிப்ப நலமார்                                                

சேடு மிகு பேடை அன்னம் ஓடி மகிழ் மாம் மிடை                    

தேவூர் அதுவே.

திரண்ட பொருள்:
இறைவனுக்குக் காடே இருப்பிடமாவது. பிரமனது தலை ஓடே கையில் ஏந்தும் பாத்திரமாவது. புலித்தோலே ஆடையாக விளங்குவது. இப்படிப்பட்ட வேடம் பூண்ட பெருமான் அமரும் தேவூர் என்ற பதியில் மாடங்களும்,நாடக சாலைகளும், நான்மறை ஓதும் வேதியர்களின் இடங்களும்உள்ளன. சோலைகளைச் சார்ந்த இடங்களில் அன்னங்கள் ஓடி விளையாடுகின்றன. இப்படியாகப் பாடலில் வருணனை செல்கிறது. அதில் டகர எழுத்து எவ்வளவு நயமாகவும்,பொருள் சுவையை மிஞ்சுவதாகவும் அமைந்துள்ளது எனப் பாருங்கள்.மீண்டும் பாடலைப் படித்தால் இதன் அருமை விளங்கும்.

இதே பதிகத்தின் மற்றொரு பாடலில் ணகரம் விளையாடிவருவதைக் காணலாம்.

ண்ணம் முகில் அன்னஎழில் அண்ணலோடு சுண்ணம் 
  
    வண்ணம் மலர்மேல்                                               
ண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள் கண்ணவன்         

    நலங்கொள் பதிதான்                                                
ண்ண வனநுண்ணிடையின் எண்ணரிய அன்னநடை 

    இன்மொழியினார்                                                    
திண்ணவன மாளிகை செறிந்த இசை யாழ் மருவு                 
    
    தேவூர் அதுவே.  

மற்றோர் பாடலின் அழகும் அலாதியானது:

பொச்சம் அமர்பிச்சை பயில் அச்சமணும் எச்சமறு போதியருமாம்                                                                     மொச்சை பயில் இச்சை கடிபிச்சன் மிகு நச்சரவன்                      
மொச்ச நகர் தான்                                             

மைச்சில் முகில் வைச்ச பொழில் ......" 

என்று சகரத்தின் அழகை வெளிப்படுத்துவதாக உள்ளது. 
  
அருணகிரிக்கு அருளும் அழகன்-இணையதளப் படம் 
அருணகிரியாரது வேண்டுகோளும் நிறைவேறியது. பெருமான் மீது சந்தப்புகழ் பாடத் தொடங்கினார். விவரிக்கில் பெருகும் என்பதால் அவர்,   “ நாயக “ என்ற சொல்லைக் கொண்டு எப்படியெல்லாம் குமரவேளைத் துதிக்கிறார் என்பதை மட்டும் எடுத்துக் காட்டி நிறைவு செய்வோமாக.

“ .... குறிஞ்சி வாழும் மறவர் நாயக; ஆதிவிநாயகர் இளைய நாயக;          காவிரி வடி விநாயக ஆனை தன் நாயக; எங்கள் மானின் மகிழும் நாயக; தேவர்கள் நாயக;கவுரி நாயகனார் குரு நாயக வடிவதா மலை யாவையும் மேவிய பெருமாளே.” எனப் பாடுகின்றார்.

எவற்றைஎல்லாமோ வாயாரக் கொண்டாடி விருது வழங்கும் இந்நாளில் இது போன்ற அருளாளர்களது பாடல்கள்  கண்களுக்குத் தெரிவதில்லை.  கலியின் கொடுமையாகவும் இருக்கலாம். தமிழ் இதுபோன்ற தெய்வப் பனுவல்களில் மட்டுமே வாழ்கிறது என்பதை மட்டும் அறுதியிட்டுச் சொல்ல முடியும். அருமை உணர்ந்து ஓதுபவர்கள் பாக்கியசாலிகள்.

Tuesday, October 17, 2017

தன்னடைந்தார்க்கு இனியன்

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயம் 
தீபாவளி என்றவுடனேயே, சிறியவர்-பெரியவர் என்ற பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தந்துவிடுகிறது  சிந்தனைக்கும், கண்ணுக்கும் மட்டுமல்லாமல் நாவுக்கும் இனிப்பை, அதாவது தித்திப்பைத் தந்துவிடுகிறது. எத்தனையோ கவலைகள் இருந்தபோதிலும் அவற்றை மறந்து மக்கள் இந்தப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். சில வாரங்கள் முன்னரே அதைக் கொண்டாடுவதற்கான ஆயத்தங்கள் துவங்கி, தீபாவளித் திருநாளன்று இந்த உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் இந்த இனிமையும் மகிழ்ச்சியும் நிரந்தரமாக இருப்பதில்லை. பண்டிகை முடிந்தவுடன் அவை நம்மிடம் விடை பெற்றுக் கொள்கின்றன. 

நாக்கால் சுவைக்கப்பெற்றவை தொண்டைக்குள் இறங்கியவுடன் தித்திப்பும் கூடவே மறைந்து விடுகிறது. நிரந்தரமாகத்  தித்திப்பை எது நமக்குக் கொடுக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா? உலகியலில் பார்த்தால் இந்த இனிமையைத் தரவல்லவை ஏராளம் உண்டுதான். 
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் இனிமையைத் தரக்கூடும். 

கோடைக் காலங்களில் எத்தனை வகை வகையாக மாம்பழங்கள் விற்பனைக்கு வந்தாலும், அவற்றிலும் அதிக சுவையான வகையைக்  கூடுதல்  விலை கொடுத்தாவது வாங்கிச் சாப்பிடுகிறோம். மாங்கனியைச்  சுவைத்த மாத்திரத்தில் அதன் சுவையைப்  புகழ ஆரம்பித்து விடுகிறோம். அதை விட இனிய ஒன்று இல்லை என்று கூட சொல்கிறோம். 
பொங்கல் பண்டிகை வந்தால் கரும்பின் சுவையில் மெய் மறந்து போகிறோம். அதன் சாற்றிலும், ஆலையில் அதை இட்டு வெல்லக் கட்டிகளாக்கி சுவைப்பதில்தான் எத்தனை ஆனந்தம்! சிலர் நீண்ட குழலுடைய மங்கையர்களைக் கண்டு மயங்குவர். மற்றும் சிலர் அரசாங்க ஆதரவு கிடைத்தவுடன் மகிழ்ச்சிக் கடலில் மிதப்பார்கள். அம்முடிசூடிய மன்னர்களின் பார்வை நம் மேல் படாதா என்று ஏங்குவர். அப்பார்வை ஒன்றே நம் வாழ்க்கையை வளப்படுத்தி விடும் என்று நம்புவோரும் இருக்கிறார்கள்.  

அருளாளர்களோ  இறைவனது அருளே கரும்பாகவும், கனியாகவும், தேனாகவும் பாலாகவும் தித்திக்க வல்லது என்பார்கள். " தேனாய் இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்" எனப் பாடுகிறார் மாணிக்க வாசகர்.  கனியைச்  சுவை உடையது என்று நாம் சொல்கிறோம். ஆனால் அப்பர் பெருமானோ, " ஈசன் எனும் கனி இனிது " எனப் பாடுகிறார்.  ஏன் என்றால் பழமாகவும் பழத்தின் சுவையாகவும் பெருமான் விளங்குவதால்  " பழத்தினில் இன் சுவை" அந்தக் கனி தானே ! அதுவன்றோ  நெஞ்சைக் கனிய வைக்க வல்லது!  " நெஞ்சம் கனிய மாட்டேன், நின்னை உள் வைக்க மாட்டேன் "  என்று கரைந்து உருகுவார் அவர். மெய்ப்பொருளாகிய இறைவனை கனிக்கும் , பாலுக்கும், தேனுக்கும் உவமை கூற முடியுமா? எனவேதான் தனது ஞானம் உண்ட வாயால் சம்பந்தர், " தேனினும் இனியர்" என்று பெருமானை வருணிக்கிறார். 

இவ்வாறு ஆலைக் கரும்பின் சாற்றையும் , பாலில் திகழும் பைங்கனியாகவும் பரம்பொருளை உவமித்தாலும், உண்மையான இனிமை எதில் பெறப் படுகிறது என்பதைத்   திருமுறைகள் நமக்கு இனிதே  காட்டுகின்றன. இறைவனது அஞ்செழுத்தை உச்சரித்தால் அதுவே கரும்பின் சுவையை மிஞ்சுகிறது. அவனது திருநாமத்தை இராவணன் போற்றியதை  " ஆர்வமாக அழைத்தவன்" என்று வான்மியூர் ஈசனைப் பரவும்போது குறிப்பிடுகிறார்  திருநாவுக்கரசர். " சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என் உள்ளம் குளிருமே" என்பார் ஞான சம்பந்தர். " எட்டான மூர்த்தியை நினைந்தபோது அவர் நமக்கு இனியவாறே."  என்பது சுந்தரர் வாக்கு. 

இவ்வாறு உலகியலில் புலன்களுக்குத் தற்காலிகமாக  இனிமையத் தர வல்லவற்றைக் காட்டிலும்  நிரந்தரமாக இனிமையைத்தரவல்ல ஈசனை நாம் நாட வேண்டும். இதுவே நமக்காகத் திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமானிடம் அப்பர் சுவாமிகள் பாடிய அந்த அற்புதமான பாடல்.

கனியினும் கட்டி பட்ட கரும்பினும்                                                         
பனி மலர்க் குழல் பாவை நல்லாரினும் 
தனி முடி கவித்து ஆளும் அரசினும் 
இனியன் தன்  அடைந்தார்க்கு இடைமருதனே.   

Monday, October 2, 2017

என் தங்கம்

செல்லக் குழந்தையைக் கொஞ்சும்போது "  என் தங்கமே " என்று கொஞ்சுகிறோம். தங்கத்திற்கும் குழந்தைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் இப்படித் தான் கூப்பிடுகிறோம். ஒரு குழந்தை நிறத்தால் செக்கச்செவேல் என்று இருந்துவிட்டால், பவுனை வார்த்தாற்போல இருக்கிறது என்று சந்தோஷப்படுகிறோம். பொன்னன், பொன்னி என்ற பெயர்கள் கூட இந்த அன்பின் வெளிப்படையாகக் கூட இருக்கலாம். இதேபோல்மணி, மாணிக்கம்,முத்து போன்ற பெயர்களும் சுருக்கமாக அழைக்கப்பட்டவை ஆனாலும், இதுபோன்ற விலை உயர்ந்த பொருள்களை நினைவு படுத்துவதாக இருக்கின்றன.

பொன்னார் மேனியனாகத் திகழும் சிவபெருமானையும் அடியார்கள் இப்படித்தான் அன்போடும்,  மிகுந்த வாஞ்சையோடும் அழைப்பார்கள். ஊரின் பெயரையும் சுவாமியின் பெயரையும் இணைத்து ஸ்வர்ணபுரி என்றும், சுவர்ணபுரீசுவரர் என்றும் அழைப்பர். ஒரு  ஊரில் சுவாமிக்கு ரத்னபுரீசுவரர் என்றும், மற்றோர் ஊரில் நிர்மலமணீசுவரர் என்றும் பெயர்கள் இருக்கக் காண்கிறோம். அம்பிகையும் ஸ்வர்ணாம்பிகை , ஸ்வர்ண வல்லி என அழைக்கப்படுகிறாள். 

அப்பர் சுவாமிகளுக்கும் பரமேசுவரனை பொன் மயமாகவே அழைக்க ஆசை. அதிலும் வரிக்கு வரி அப்படிப் பொன்னாகவே பெருமானை அழைத்தால்  எப்படி இருக்கும்!  அந்த ஆசை அண்ணாமலையில் வெளிப்படுவதை இங்குக் காண்போம்: 

முதலாவதாகப்  பெருமானைப் பைம்பொனே  எனத் துதிக்கிறார்.  பச்சைப் பசும்பொன் அவன். சொக்கத்தங்கம் என்பார்களே அதுவும் அவனே. இந்தத் தங்கமே சொக்கன் தந்தது தானே. ஆகவே அதனைச் சொக்கத் தங்கம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கிறது. அது மட்டுமல்ல. பவளம் போல் மேனியனான ஈசுவரனை , பவளக் குன்றமாகவே காண்கிறார் அப்பர் பெருமான். திருமாற்பேறு  என்ற சிவத்தலத்திலும், பாடல் தோறும் பெருமானைச் செம்பவளக் குன்று என்று வருணிப்பதைக் காணலாம். எனவே, பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு பூசியவனாகக் காட்சியளிக்கும் பரமனைப்       " பரமனே, பால் வெண்ணீறா " என்று போற்றுகின்றார். 

உருக்கி வார்த்த செம் பொன்னைக் காணும் போது , செம்பொன் மேனியனாகிய சிவபிரானது நினைவு வரவேண்டுமல்லவா ?  உருக்கும்போது இளகிய பொன்னே, குளிர்ந்ததும் இறுகி விடுகிறது. ஆனால் பரம்பொருளாகிய இறைவன் இதனினும் மாறு பட்டவன். உருகி அழைக்கும்போது ஓடி வந்து துணை என நிற்பான். பொன்னைப் போல் மேனியனானாலும் இறுகி விடாமல் மென்மையான மலர்ப் பாதத்தைத் தந்தருளுகின்றான். அந்தத் திருவடியின் பெருமையை யாரால் வருணிக்க முடியும்? மழபாடியுள் மாணிக்கமெனத் திகழும் பெருமானை " மணியே"  : என்று அகம் குழைந்து அழைக்கிறார் அப்பர்.

பொன்னானது இயல்பாகவே அழகானது. காண்போரை வசீகரிக்க வல்லது. ஆனால் இந்தப் பொன்னோ பொன்னுக்கே அழகைக் கொடுக்க வல்லது. உண்மையில் பார்த்தால் அழகிய பொன் என்ற சொல் பெருமானுக்கே பொருத்தமாகத் தோன்றுகிறது. ஆதலால், " அம்  பொன்னே " என்றார். 
அண்ணாமலையில் அருவிகள் பாய்ந்து,திரண்டு ஓடி வரும் அழகைக் குறிப்பதாக " கொழித்து வீழும் அணி அண்ணாமலை உளானே " என்று சிறப்பித்தார். இதையே, பொன் கொழித்து வரும் அருவிகள் மலை மீதிருந்து வீழ்வதாகவும் சேர்த்துப் பொருள் கொள்ளலாம். 

முதலில் கூறியபடி, குழந்தையை நாம் " என் தங்கமே " என்று அழைப்பதுபோல், " என் பொன்னே " என்று அப்பர் சுவாமிகள் அழைப்பது இன்புறத்தக்கது. அண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பர் பெரியோர். அப்படி இருக்கும்போது அண்ணாமலையானை நாம் மறக்கலாகுமா? அவனைத் தவிர வேறு நினைவே இல்லை என்கிறார் திருநாவுக்கரசர். " என் பொன்னே உன்னை அல்லால் எது நான் நினைவு இலேனே " என்று பாடலை நிறைவு செய்கிறார். 

இவ்வாறு பரமேசுவரனை ஒரே பாடலில் , பைம்பொன், செம்பொன், அம்பொன், என்பொன் என்றெல்லாம் வருணிப்பதை வேறு எங்கும் காண்பது அரிது. அப்படிப்பட்ட  சிவ வடிவத்தை, அண்ணாமலையானை நாமும் தியானித்து இப்பாடலை மீண்டும் காண்போமாக:

பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால் வெண்ணீறா 

செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க 

அம்பொனே கொழித்துவீழும் அணி அண்ணாமலை உளானே 

என்பொனே உன்னையல்லால் ஏதுநான் நினைவிலேனே. 

Sunday, August 20, 2017

பஜனை ஒன்றே போதுமா ?

இந்த அவசர கால கட்டத்தில் யாரைக் கேட்டாலும் நேரம் இல்லை என்கிறார்கள். உண்மையாகவே இவர்களுக்கு நேரம் இல்லையா, அல்லது நேரம் இல்லாதது போலவும், மற்றவர் தங்களை அல்லும் பகலும் நேரம் போவது கூட தெரியாமல் உழைக்கிறார் என்று நினைக்க வேண்டும் என்பது போலவும் நடிக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த நிலையில் இதைச்செய்,அதைச் செய் என்று மற்றவர்களிடம் எப்படிச் சொல்ல முடியும்? அவற்றை ஏற்கும் மனப்பான்மையில் அவர்கள் இல்லையே !  சிலர் மட்டும், குறுக்கு வழி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். அதற்கு நேரம் இருக்கிறதா என்று பார்க்கிறேன். என்று சொல்கிறார்கள். 

உண்மையாகப் பார்த்தால் குறுக்கு வழி என்பதெல்லாம் நாமாக ஏற்படுத்திக் கொள்வதுதான். கலி யுகத்தில் இறைவன் நாமா ஒன்றே போதும். என்று ஒருவர் சொல்லுவார். அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, பாரம்பர்யமாக இருந்து வரும் பூஜை,ஆலய வழிபாடு ஆகியவற்றை ஒதுக்கி விடத் தீர்மானித்து விடுகிறார்கள். எந்தக் கோயிலுக்கு வேண்டுமானாலும் போகத் தயார், பிரச்னை தீர்வானால் போதும் என்று தயாராகிவிடுகிறார்கள். 

பஜனை மூலம் நாமாவளியைக் கேட்பதும் சொல்வதும் சாத்தியம் தான். மறுக்கவில்லை. ஆனால் நித்தியக் கடமைகளைப் புறக்கணித்து விட்டு  , பஜனை ஒன்றே போதும் என்று இருப்பவர்களுக்கு என்ன சொல்வது ? போதாக் குறைக்கு இவர்கள் சமயச் சின்னங்களான விபூதி,ருத்ராக்ஷம் ஆகியவற்றையும் தரிப்பதில்லை.அவற்றைப் போதிக்க வேண்டிய குரு பீடங்கள் அவற்றுக்கு முன் உதாரணங்களாகத் திகழ வேண்டும் அல்லவா? 

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இறைவன் கொடுத்த உடலின் ஒரு அங்கமே வாய். அதனைக் கொண்டு நல்லவற்றையே பேச வேண்டும், பிறரை ஏசுவதற்காகவோ, பிறர் மேல் புகார் சொல்வதற்காகவோ அதனைப் பயன் படுத்தாமல், இறைவன் நாமத்தைப் பேசவும்,அவன் புகழைப் பாடவும் அதனைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது ஆன்றோர் அறிவுரை. வாயிலுள்ள நாக்கு அவன் நாமத்தை மனம் மறக்கும் காலத்திலும் சொல்லும்படித்  தினந்தோறும் சொல்லிச் சொல்லிப் பழக வேண்டும் . அதைத்தான் ஞானசம்பந்தர், " நா நாளும் நவின்று ஏத்த"  என்றார். ஏதோ ஒரு நாள் பஜனை நடக்கும் காலத்தில் போய் நாமத்தைச்  சொல்லிவிட்டுக் கைகளைத் தட்டுவதோ,ஆடிப் பாடுவதோ போதாது. தமிழ்த் தாத்தா  டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்களின் பாட்டனார் தமது வீட்டுத் தோட்டத்தில் மலர்களைக் காலையில் கொய்யும் போது சிவநாமங்களைச் சொல்லிக் கொண்டே பறிப்பாராம். அதைக் கேட்டுக் கேட்டு இளமையிலேயே தனக்குச்  சிவபக்தி உண்டாயிற்று என்று குறிப்பிடுகிறார் ஐயர் அவர்கள். 

அடுத்தபடியாக, வாயை இறைவன் பெருமையை வாழ்த்தும்படித்  தூண்டுவது மனம். " சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் " என்கிறார் சேரமான் பெருமாள் நாயனார். திருவண்ணாமலையை நினைக்க முக்தி என்பார்கள். இப்படி ஒருக் கணமாவது அன்றாடம் நினைக்கத் தனியாக நேரம் வேண்டுமா? நேரம் இல்லை என்பவர்கள் பதில் சொல்லட்டும். 

நித்தலும் எம்பெருமானுடைய கோயிலுக்குச் சென்று தலையாரக் கும்பிடவேண்டும் என்கிறார் அப்பர் பெருமான். "தலையே நீ வணங்காய் " என்பது அவரது அருள் வாக்கு. அப்படித் தலை வணங்காதவர்கள் கண்ட கண்ட மானுடர்களுக்குத் தலை வணங்க  வேண்டி வரும். அதன் பலன் சிறிது  காலம் நன்மை விளைவது போலத் தோன்றினாலும், இறுதியில் வணங்கப்பட்டவர்களால் உதாசீனம் செய்யும் நிலைதான் வரும். ஆனால் தன்னைத்  தலையார வணங்கியவர்களை இறைவன் ஒருபோதும் கைவிட மாட்டான். 

நாமாகத் தான் நல்வழிக்குப் போவதில்லை. ஆனால் நல்   வழியில் நிற்பவர்களை அணுகினால் நமக்கும் நல்லறிவு வந்து உய்யலாம். அதற்கு நல்ல அடியார்களை நாடவேண்டும். நமக்கு நற்கதி கிட்டும் பக்குவம் வந்தவுடன் பெருமானே நல்ல அடியார்களை நமக்குக் காட்டுகின்றான். " இணங்கத் தன்  சீர் அடியார் கூட்டமும் வைத்து " என்கிறார் மாணிக்க வாசகர். 
இவ்வாறு அவனை வாழ்த்துவதற்காக வாயையும், நினைப்பதற்காக நெஞ்சத்தையும், யான் எனது என்பது மாண்டு அவனைத் தாழ்ந்து வணங்கத் தலையையும் தந்த ஒப்பற்ற தலைவனாகிய சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து நாள்தோறும் வணங்க வேண்டும். வணங்காதவர்கள் வினையின் வசப்பட்டவர்கள் ஆவார்கள் . பல காலம் யானும் நாட்களை வீணாக்கி விட்டேனே என்று பாடுகின்றார் திருநாவுக்கரசர் .

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் 
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே 
வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே.  

Friday, July 14, 2017

அடியார் செய்த அனாசாரம் பொறுத்தருளுவான்

திருநாவுக்கரசர் 
பக்தி மேலிடும்போது நிகழக்கூடியவை பல. வழக்கமான செயல் பாடுகளும் மாறக் கூடும். இன்ன செய்கிறோம் என்ற நினைப்பே சில சமயங்களில் இல்லாமல் போய் விடும். நியமங்களில்  மாற்றம் நேரிடுகிறது. தான் நினைப்பதே சரியானது  என்றும் பிறர்  செய்வது தவறு என்ற எண்ணமும் ஏற்படுகிறது. அடுத்தவர்களது செயல்களைக் குறை கூறத் தொடங்கி விடுகிறோம். ஆன்மீகம் என்கிற பள்ளியில் நாம் கற்றுக் கொண்டது சிறிதளவே ஆனாலும், எல்லாம் தெரிந்தவனைப் போல் பேச ஆரம்பித்து விடுகிறோம். கற்றுத் தெளிய வேண்டியவை கடலளவு இருக்குப்போது இப்படிப்பட்ட மமதை நமக்கு ஏற்பட்டு விடுகிறது. காலம் காலமாக இருந்து வரும் வழிபாட்டு முறைகளை சீர்திருத்தவும் தங்குவதில்லை. இவ்வளவுக்கும் காரணம், இறைவன் நமக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பதால் தான். 

உலகத்தில் குறையே இல்லாதவர் யாராவது உண்டா? இறைவன் ஒருவனே குறைவில்லாதவன். அப்படி இருக்கும் போது அடுத்தவர்களிடம் குறை இருப்பதாக நாம் ஏன் மிகைப் படுத்த வேண்டும்? எல்லாம் சிவன் செயல் என்று சொல்லத் தெரிந்த நாம் அதனைச் செயலில் காட்டுவதில்லை. இவ்வாறு இருந்தால் நாம் உய்வது எவ்வாறு? இறைவன் நம்மை ஏற்றுக் கொள்வானா? குணங்களை எல்லாம் கடந்த குணக் குன்றாகப் பெருமான் இருப்பதால் நமது குற்றங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு அருள் புரிகிறான் என்ற பக்குவம் நமக்கு வருவது எப்போது? 

நல்லனவும் தீயனவும் நமக்குக் காட்டி நமது வினைப் பயன்களுக்கேற்ப நமக்கு அருள் வழங்கும் கடவுளை நாம் தரிசிக்கும் போது தலை வணங்குகிறோம். சிரத்தின் மீது கைகளைக் கூப்புகிறோம். இவை இரண்டும் நமது ஆணவத்தை அகல்விக்கும் முதல் படிகள். அடுத்தபடியாக இறைவனைத் தரிசிக்கும்போது கண்கள் நீர் பெருக்கவேண்டும். மெய் சிலிர்க்க வேண்டும். இந்த நிலை என்று வருமோ அன்றுதான் நாம் பக்குவ நிலையை நோக்கி முதலாவது அடி எடுத்து வைத்திருப்பதாகக் கொள்ளலாம்.  ஒவ்வொருவரும் தம்மைத் தாமே சோதித்துப் பார்க்கும் எளிய வழி இது. 

திருமாற்பேறு என்னும் தலத்தின் மீது அப்பர் சுவாமிகள் பாடியருளிய பதிகப் பாடலை இப்போது பார்ப்போம்.  பெருமானது தன்னிகரற்ற பெருமையை முதலில் குறிப்பிடுகிறார் அப்பரடிகள். பிரளயம் ஏற்படும்போது கடல் பொங்குகிறது,மலைகள் நெருப்பை உமிழ்ந்து சாம்பலை அள்ளி வீசுகின்றன. அவ்வாறு நெருப்பும், நீறும்  (சாம்பலும்)ஆகி , அழித்தல் தொழிலை நடத்திய  பின்னர்,  கருணையினால் உலகத்து உயிர்களின் பிறப்புக்குச் சற்று ஓய்வு அளிக்கிறான் பரமன். மீண்டும் உலகைப்படைக்க வேண்டும் என்ற சங்கற்பத்தோடு,  கூற்றுவனாகி இருந்த நிலை மாறி, படைத்தலைப் புரிகிறான். பின்னர் உமையாள் ஓர் பாகனாகிறான். கூற்றும் (தருமதேவதை) , கோளும் (கிரகங்களும்) ஆகிறான். குணங்களுக்கோர் எல்லையாகித் தனது  அடியார்க்கு நல்ல குணங்களை அருள் செய்கிறான். பாடலின் ஆரம்பத்தில் நாம் காணும் செய்திகள் இவை:

நீறாகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி 
நினைவாகி நினைவினிய மலையான் மங்கை 
கூறாகிக் கூற்றாகிக் கோளும் ஆகிக் 
குணம் ஆகி ....

என்பன அவ்வுயரிய வரிகள். 

உயர்ந்த நிலையை அடைந்த அடியார்கள் தெய்வ சன்னதியில் ஆனந்தக் கண்ணீர் பெருக்குவார்கள். இறைவன் தரும் குணமாகிய வரத்தால் ஏற்படும் பக்குவம் அது. அப்போதுதான் நமக்கு ஆணவம் அடங்கி,நான்  குற்றமே பெரிதும் உடையவன் என்ற எண்ணம்  ஏற்படும். அப்படிப்பட்ட அடியார்களைத் தான், நாவுக்கரசர், " குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர் ஆறாத ஆனந்தத்து அடியார் " என்று சிறப்பித்துப் போற்றுகின்றார்.  இப்படித் தன்னையே சரண் என்று தன்னடியைச்  சேர்ந்த அடியார்கள் குற்றமே செய்தாலும் அதனைப் பொறுத்துக்  குணமாகக் கொள்வது இறைவனது கருணை. ஒருக்கால் சிறு பிழைகளை அவர்கள் செய்தாலும் அவர்களது அனாசாரத்தைப் பொறுத்து அவர்களை என்றும் பெருமான் கோபிக்க மாட்டான் என்று கூறி நமது சிந்தையைத் தெளிவிக்கிறார் ஞானாசிரியரான அப்பர் பெருமான். 

 குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர் 
 ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த 
அனாசாரம் பொறுத்தருளி அவர் மேல் என்றும் 
சீறாத பெருமானைத் திருமாற் பேற்று எம் 
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன் நானே.

இப்போது முழுப் பாடலையும் பார்ப்போம்:

நீறாகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி 
நினைவாகி நினைவினிய மலையான் மங்கை 
கூறாகிக் கூற்றாகிக் கோளும் ஆகிக் 
குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர் 
 ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த 
அனாசாரம் பொறுத்தருளி அவர் மேல் என்றும் 
சீறாத பெருமானைத் திருமாற் பேற்று எம் 
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன் நானே.

 செம்பவளக் குன்றாகிய குணக் குன்றைச்  சென்று வழிபட்டதால் நற்குணங்கள் வாய்க்கப்பெற்று உய்ந்தேன் என்று கொள்வது இன்னும் சிறப்பாகும். 

Friday, May 12, 2017

சொக்கர் துணை

உலகத்தில் தோன்றும் அனைத்து உயிர்களுக்கும் ஒவ்வொரு கால கட்டத்திலும் துணை தேவைப்படுகிறது.   ஆயுட்காலம் முழுவதும் வெவ்வேறு  துணையைச் சார்ந்தே வாழ வேண்டி இருக்கிறது. ஆனால் எந்தத் துணையும் நிரந்தரமாக இருப்பதில்லை. குறுகிய காலத்திற்குள் விலகிக் கொள்வதால் செயல்பாடுகள் யாவும் சுய நலத்தை மையப்படுத்தியே அமைந்து விடுகின்றன. இறைவன் மட்டுமே நிரந்தரத் துணையாக நிற்பவன். தோன்றாத் துணையாகக் காப்பவன். அதனால் தான் சிவபெருமானைத் " தனித்துணை" என்று குறிப்பிடுகிறார் மாணிக்க வாசகர். " என் துணைவனே" என்று பெருமானை அருளாளர்கள் அழைக்கிறார்கள்.

இன்பம் வரும்போது  எவரும் துணையை எண்ணிப்பார்ப்பதில்லை. தனது முயற்சியும் அயராத உழைப்புமே இன்பத்திற்குக் காரணம் என்று கூறிக் கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால் துன்பம் வந்து தொடந்தால் , கூட இருப்பவர்களும் விலகிக் கொள்வர்.  இறைவன் மட்டுமே அஞ்சேல் என்று அபயமளிப்பான் என்பதால், " கை தர வல்ல கடவுள்" என்பார் மணி வாசகர். 

தேவர்கள் சூர பதுமாதிகளிடம் துன்பப்பட்ட போதும், ஹிரண்யனை  வதம் செய்த நரசிம்மர்  உக்கிரத்தோடு எல்லா உலகங்களையும் கலக்கியபோதும் , பாற்கடலில் எழுந்த நஞ்சு அனைத்து உயிர்களையும் அழிக்க வந்தபோதும்  சிவபிரான் அனைவருக்கும் அபயம் தந்து ,கலங்காமல் காத்த புராண வரலாறுகள் உயிர்த் துணையாக இறைவன் நிற்பதை அறிவிக்கின்றன. 
                        
" கலங்கினேன், கண்ணின் நீரை மாற்றி " என்று இறைவனது பெருங்கருணை , திருவாசகத்தில் பேசப்படுகிறது. பிரளயம் வந்தபோதும் காக்கும் கருணை பற்றியே, பெருமானுக்குப் " பிரளய காலேசுவரர்" என்று பெண்ணாகடத்தில் திருநாமம் வழங்கப்படுகிறது. 

மூன்று ஆண்டில் சிவஞானம் பெற்றுத் திகழ்ந்த திருஞானசம்பந்தப் பெருமான் , பாண்டியனும் சமண் வசமாகிய செய்தியை  பாண்டிமாதேவியான மங்கையர்க்கரசியார் அனுப்பிய ஓலை மூலம் அறிந்து, அவரது அழைப்பை ஏற்றுப்  பாண்டியநாட்டிற்குச் சென்றார். அவரால் தங்கள் சமயத்திற்கு ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சிய சமணர்கள் அவர் தங்கியிருந்த மடத்திற்குத் தீ வைத்தார்கள். அதனைக் கண்ட ஞான சம்பந்தர், ஆலவாய்ப் பெருமான் மீது பதிகம் பாடினார். அதில், அடியார்களுக்கு இன்னல் வராமல் காக்க வேண்டியவராக, " அஞ்சல் என்று அருள் செய் "  என்று பாடினார். 

இது போன்ற குற்றங்கள் நேர்ந்தால் நாட்டை ஆளும் அரசனுக்கும் பொறுப்பு உண்டு. மேலும் அவனோ,  சமண் குருமார்களிடம் சார்ந்திருந்தான். அவனும் தண்டிக்கப்படவேண்டியவனே என்பதால், தீயானது பாண்டியனைப் பற்றட்டும் என்றார் காழிப் பிள்ளையார். அதே நேரத்தில் தீயானது பாண்டியனுக்கு ஆபத்து விளைவித்து விட்டால், சைவம் தழைக்க வேண்டித் தன்னை அழைத்த மங்கையர்க்கரசிக்குத தாங்க முடியாத துயரம் ஏற்பட்டு விடுமே. ஆகவே, " பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே " என்று பாடி, தீயானது பாண்டியனை மெல்லப்பற்றட்டும் என்றார். அப்பாடலில், ஆலவாய் ஈசன்  தன்னை அஞ்சல் என்று அருள் செய்ய வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.  

அஞ்சல் என்று அருள வேண்டிய பெருமான் அவ்வாறு அருளாதொழிந்தால் அஞ்சேல் என்பார் வேறு யார் உளர்? " என்னை அஞ்சல் என்று அருளாய், யார் எனக்கு உறவு" என்பார் சுந்தரர். மனம் துன்பப்படும்போதும், அடியார்களுக்குப் பலவிதமாகப் பெருமான் கூட இருந்து இன்றளவும் அருள் செய்கிறான். அதுவே, " யாம் இருக்கப் பயம் ஏன் " என்பதுபோல ஆறுதல் தருகிறது. இதனை அனுபவ வாயிலாக அடியார்கள் உணர்வார்கள். 

மனச் சோர்வுடன், திருமுறைப் புத்தகத்தை எடுத்து, நடுவே ஒரு பக்கத்தைப் புரட்டினால் , திருவேதிகுடிப் பெருமான் மீது திருஞான சம்பந்தர் பாடிய பதிகத்தில் வரும், " சொக்கர் துணை" என்று துவங்கும் பாடல் வந்தவுடன் மெய் சிலிர்க்கிறது. மதுரையம்பதியில் புண்ணிய மூர்த்தியாகப்  பெருந்தேவியுடன் வீற்றிருக்கும்  சோமசுந்தரக் கடவுளுக்கு அழகிய தமிழில் சொக்கன் என்ற பெயர் .அவன் தன்னிகரில்லாத பேரழகனாக விளங்குவதால் அவ்வாறு வழங்கப்பட்டது.. திக்கற்றவர்களுக்குச் சொக்கன் துணை அல்லவா?