Friday, July 14, 2017

அடியார் செய்த அனாசாரம் பொறுத்தருளுவான்

திருநாவுக்கரசர் 
பக்தி மேலிடும்போது நிகழக்கூடியவை பல. வழக்கமான செயல் பாடுகளும் மாறக் கூடும். இன்ன செய்கிறோம் என்ற நினைப்பே சில சமயங்களில் இல்லாமல் போய் விடும். நியமங்களில்  மாற்றம் நேரிடுகிறது. தான் நினைப்பதே சரியானது  என்றும் பிறர்  செய்வது தவறு என்ற எண்ணமும் ஏற்படுகிறது. அடுத்தவர்களது செயல்களைக் குறை கூறத் தொடங்கி விடுகிறோம். ஆன்மீகம் என்கிற பள்ளியில் நாம் கற்றுக் கொண்டது சிறிதளவே ஆனாலும், எல்லாம் தெரிந்தவனைப் போல் பேச ஆரம்பித்து விடுகிறோம். கற்றுத் தெளிய வேண்டியவை கடலளவு இருக்குப்போது இப்படிப்பட்ட மமதை நமக்கு ஏற்பட்டு விடுகிறது. காலம் காலமாக இருந்து வரும் வழிபாட்டு முறைகளை சீர்திருத்தவும் தங்குவதில்லை. இவ்வளவுக்கும் காரணம், இறைவன் நமக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பதால் தான். 

உலகத்தில் குறையே இல்லாதவர் யாராவது உண்டா? இறைவன் ஒருவனே குறைவில்லாதவன். அப்படி இருக்கும் போது அடுத்தவர்களிடம் குறை இருப்பதாக நாம் ஏன் மிகைப் படுத்த வேண்டும்? எல்லாம் சிவன் செயல் என்று சொல்லத் தெரிந்த நாம் அதனைச் செயலில் காட்டுவதில்லை. இவ்வாறு இருந்தால் நாம் உய்வது எவ்வாறு? இறைவன் நம்மை ஏற்றுக் கொள்வானா? குணங்களை எல்லாம் கடந்த குணக் குன்றாகப் பெருமான் இருப்பதால் நமது குற்றங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு அருள் புரிகிறான் என்ற பக்குவம் நமக்கு வருவது எப்போது? 

நல்லனவும் தீயனவும் நமக்குக் காட்டி நமது வினைப் பயன்களுக்கேற்ப நமக்கு அருள் வழங்கும் கடவுளை நாம் தரிசிக்கும் போது தலை வணங்குகிறோம். சிரத்தின் மீது கைகளைக் கூப்புகிறோம். இவை இரண்டும் நமது ஆணவத்தை அகல்விக்கும் முதல் படிகள். அடுத்தபடியாக இறைவனைத் தரிசிக்கும்போது கண்கள் நீர் பெருக்கவேண்டும். மெய் சிலிர்க்க வேண்டும். இந்த நிலை என்று வருமோ அன்றுதான் நாம் பக்குவ நிலையை நோக்கி முதலாவது அடி எடுத்து வைத்திருப்பதாகக் கொள்ளலாம்.  ஒவ்வொருவரும் தம்மைத் தாமே சோதித்துப் பார்க்கும் எளிய வழி இது. 

திருமாற்பேறு என்னும் தலத்தின் மீது அப்பர் சுவாமிகள் பாடியருளிய பதிகப் பாடலை இப்போது பார்ப்போம்.  பெருமானது தன்னிகரற்ற பெருமையை முதலில் குறிப்பிடுகிறார் அப்பரடிகள். பிரளயம் ஏற்படும்போது கடல் பொங்குகிறது,மலைகள் நெருப்பை உமிழ்ந்து சாம்பலை அள்ளி வீசுகின்றன. அவ்வாறு நெருப்பும், நீறும்  (சாம்பலும்)ஆகி , அழித்தல் தொழிலை நடத்திய  பின்னர்,  கருணையினால் உலகத்து உயிர்களின் பிறப்புக்குச் சற்று ஓய்வு அளிக்கிறான் பரமன். மீண்டும் உலகைப்படைக்க வேண்டும் என்ற சங்கற்பத்தோடு,  கூற்றுவனாகி இருந்த நிலை மாறி, படைத்தலைப் புரிகிறான். பின்னர் உமையாள் ஓர் பாகனாகிறான். கூற்றும் (தருமதேவதை) , கோளும் (கிரகங்களும்) ஆகிறான். குணங்களுக்கோர் எல்லையாகித் தனது  அடியார்க்கு நல்ல குணங்களை அருள் செய்கிறான். பாடலின் ஆரம்பத்தில் நாம் காணும் செய்திகள் இவை:

நீறாகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி 
நினைவாகி நினைவினிய மலையான் மங்கை 
கூறாகிக் கூற்றாகிக் கோளும் ஆகிக் 
குணம் ஆகி ....

என்பன அவ்வுயரிய வரிகள். 

உயர்ந்த நிலையை அடைந்த அடியார்கள் தெய்வ சன்னதியில் ஆனந்தக் கண்ணீர் பெருக்குவார்கள். இறைவன் தரும் குணமாகிய வரத்தால் ஏற்படும் பக்குவம் அது. அப்போதுதான் நமக்கு ஆணவம் அடங்கி,நான்  குற்றமே பெரிதும் உடையவன் என்ற எண்ணம்  ஏற்படும். அப்படிப்பட்ட அடியார்களைத் தான், நாவுக்கரசர், " குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர் ஆறாத ஆனந்தத்து அடியார் " என்று சிறப்பித்துப் போற்றுகின்றார்.  இப்படித் தன்னையே சரண் என்று தன்னடியைச்  சேர்ந்த அடியார்கள் குற்றமே செய்தாலும் அதனைப் பொறுத்துக்  குணமாகக் கொள்வது இறைவனது கருணை. ஒருக்கால் சிறு பிழைகளை அவர்கள் செய்தாலும் அவர்களது அனாசாரத்தைப் பொறுத்து அவர்களை என்றும் பெருமான் கோபிக்க மாட்டான் என்று கூறி நமது சிந்தையைத் தெளிவிக்கிறார் ஞானாசிரியரான அப்பர் பெருமான். 

 குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர் 
 ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த 
அனாசாரம் பொறுத்தருளி அவர் மேல் என்றும் 
சீறாத பெருமானைத் திருமாற் பேற்று எம் 
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன் நானே.

இப்போது முழுப் பாடலையும் பார்ப்போம்:

நீறாகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி 
நினைவாகி நினைவினிய மலையான் மங்கை 
கூறாகிக் கூற்றாகிக் கோளும் ஆகிக் 
குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர் 
 ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த 
அனாசாரம் பொறுத்தருளி அவர் மேல் என்றும் 
சீறாத பெருமானைத் திருமாற் பேற்று எம் 
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன் நானே.

 செம்பவளக் குன்றாகிய குணக் குன்றைச்  சென்று வழிபட்டதால் நற்குணங்கள் வாய்க்கப்பெற்று உய்ந்தேன் என்று கொள்வது இன்னும் சிறப்பாகும். 

1 comment: