Sunday, January 13, 2019

எல்லாமே முடிந்துபோய் விட்டதா ?

மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தை சிவபெருமான் எழுதியது 
தெய்வமே மதுரையில் எழுந்தருளிச்  சங்கப் புலவராக வீற்றிருந்தபடியாலும், இடைக்காடர் என்ற புலவரது பிணக்குத் தீர்க்க அவரோடு வைகைக் கரைக்குச் சென்றபடியாலும், நாளும் தமிழ் கேட்கும் இச்சையால் திருஞானசம்பந்தருக்கும்  நாவுக்கரசருக்கும் நித்தல் படிக்காசு அளித்ததாலும் திருவாசகத்தைத் தானே தனது திருக்கரங்களால் எழுதியபடியாலும், தொண்டர்களது  பெருமையைப் பாடுவதற்காகச் சேக்கிழார் பெருமானுக்கு உலகெலாம் என்று அடி எடுத்துத் தந்ததாலும் ,இன்ன பிறவற்றாலும் இம் மொழியைத் தெய்வத் தமிழ் எனக் கூறுவது சாலப் பொருத்தமே . 

வேதம் பாடும் வாயால் தமிழில் பாடுக என்று சுந்தரருக்குக் கட்டளை இட்ட படியால் இரு மொழிகளும் இறைவனுக்கு இரு கண்கள் போல் விளங்குவன  . "  ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் " என்ற அப்பர் மொழி இதனை உறுதி செய்யும். 

தமிழ் மொழியே இறைவனது வடிவம் எனக் கொள்ள வேண்டும். சொல்லும் அதன் பொருளுமாய் விளங்குபவர்கள் உமா மகேசுவரர்கள். இம்மொழியைப் பேசும்போதும் எழுதும்போதும் இந்த எண்ணம் நம்மில் இருக்க வேண்டும். தமிழ் கேட்க வேண்டி வைகை மண் சுமந்து பாண்டியனது கோலால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனிப் புண்ணியனை நினையாது இம் மொழியைத் தனக்கு ஏற்றபடி எல்லாம்  மாற்றுபவர்களை என்னவென்று சொல்வது ? 

மொழியை சீர்திருத்தம் செய்கிறேன் என்கிறார்கள்.  வழக்கில் இல்லாத எழுத்துக்களை ஒதுக்கவும் நீக்கவும்,மாற்றவும் இவர்கள் தயங்குவதில்லை. ஆயுத எழுத்து அறவே பயன் படுத்தப்படுவதில்லை. ஔ  காரம்  இவர்களுக்கு வேப்பங்காய்.  அவ் என்றே எழுதுவர்.  ஐ  காரத்திற்கும் இதே நிலை ! அய்  என்றே எழுதுவார்கள் !  இதேபோல்  ண கரத்திலும் லகரத்திலும் மனம் போனபடி மாற்றங்கள். பாவம். பள்ளிக் குழந்தைகள் !!  போதாக்குறைக்கு  மை க்கும்  ஆபத்து வந்து விட்டது.  ம ய்  என்று எழுதிக் கொள்வோரும் உளர்.  இப்படியே போனால்  மை என்ற எழுத்தே காணாமல் போய் விடக்கூடும். இம்மாற்றங்களைச் செய்பவர்கள் தமிழைக் கசடறக் கற்ற அறிஞர் பெருமக்களா ? இல்லையே !  தமிழே மூச்சும் பேச்சுமாக இருந்தவர்கள் செய்யாததை இவர்கள் சுயநலத்துக்காகச்  செய்கிறார்கள் என்று  எவருமே குரல் எழுப்பவில்லையே  !! 

ஆங்கிலத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இங்கிலாந்து மக்கள் எழுதும் போதும் அமெரிக்கர்கள் எழுதும் போதும் இம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில வார்த்தைகளில் வரும் எழுத்துக்களைக் (Spelling)குறைத் தார்களே தவிர அந்த எழுத்துக்களை மொழியிலிருந்தே எடுத்து விடவில்லை. உதாரணமாக, centre என்று இங்கிலாந்திலும் center என்று அமெரிக்காவிலும் எழுதப்படுகிறது. அதே போல Sulphur என்று  இங்கிலாந்து  மக்களும், Sulfur என்று அமெரிக்கரும்  எழுதுவர்.  அவ்வளவுதான். ஒரேயடியாக எழுத்துக்களையே மொழியை விட்டு நீக்கி விடவில்லை. 

சைவ உலகிலோ நூலின் பெயரையே மாற்றி வருகின்றனர். திருஞானசம்பந்தர் தேவாரத்தைத் திருக்கடைக் காப்பு என்றும், சுந்தரர் தேவாரத்தைத் திருப்பாட்டு என்றும் மாற்றுகின்றனர். கேட்டால் அப்படித்தான் செய்வோம் என்கிறார் ஒரு பதிப்பாளர் இறுமாப்புடன். பெரிய புராணத்தை ஊன்றிக் கற்போருக்கு உண்மை விளங்கும். ஞான சம்பந்தர் தனது பதிகம் தோறும் பதிகப்பலன் கூறுவது வழக்கம். அவ்வாறு பலன் கூறும் கடைசிப் பாடலைக் காப்பாக அமைத்ததை " திருக்கடைக்காப்பு சாத்தி "   என்றே  தெய்வச் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுவார். மேலும் பல ஆதாரங்களைச் சுட்டிக் காட்டலாம். விரிக்கில் பெருகும் என எண்ணி  அன்பர்களது சிந்தைக்கே விடுகிறோம்.  திருமுறைக் காவலர், சித்தாந்த வித்தகர் என்றெல்லாம் பட்டம் பெற்றவர்களும், அப்பட்டங்களை வழங்கியவர்களும்  மௌனிகளாக இருப்பது  ஏன்  ?   கருத்து சுதந்திரம் சமய உலகத்தையும் விட்டு வைக்கவில்லை !  இமயங்கள் என்று சொல்லும்படித் திகழ்ந்த அறிஞர்களும் மடாதிபதிகளும் தற்போது இல்லை என்றே கொள்ள வேண்டி இருக்கிறது. 

மேற்படி ஆதங்கம்  தமிழ் கூறும் நல்லுலகில் கேட்காவிட்டாலும்  தமிழ் கேட்ட திருச் செவிகளை  நிச்சயமாகச் சென்று அடையும்  என்ற உறுதிப்பாட்டோடு ,  நாம் இன்றைய வழக்கில் பயன் படுத்தாமல் ஒதுக்கி விட்ட எத்தனையோ எழுத்துக்களில் ஒன்றான ஞி  என்ற எழுத்தை  சொல் வேந்தராகிய அப்பர் பெருமான் லாவகமாகக் கையாளும் பாடலைக் கீழே தந்து நிறைவு செய்வோமாக: 

செய்ஞ்ஞின்ற  நீல மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன் 
மைஞ்ஞின்ற  ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க 
நெய்ஞ்ஞின்று எரியும் விளக்கு ஒத்த  நீல மணி மிடற்றான் 
கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக்  கண் கொண்டு காண்பது என்னே 

என்ன எழுதினாலும்  பயன் விளையப் போவதில்லை    நான் என்ற ஆணவ மலமே  இந்நாளில் மேலோங்குவதால் எல்லாமே முடிந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.