Friday, November 22, 2019

இல்லறமும் துறவறமும்

ஸன்னியாசம் அல்லது துறவறம் என்பதை மனிதனுக்கான நான்கு வரையறைகளுள் ஒன்றாக  வகுத்துக் காட்டினர் நம் பெரியவர்கள். மற்ற மூன்றாவன: பிரம்மச்சர்யம், க்ரஹஸ்தம், வானப்ப்ரஸ்தம் என்பனவாம். கல்வி கற்பதற்கு மட்டுமே அமைந்த பருவம் பிரம்மச்சர்யம் ஆகும். மணம் செய்து கொண்டு, பிரம்மச்சாரிகளுக்கும், ஸந்நியாசிகளுக்கும் ,பிற ஏழை எளியவர்களுக்கும் உணவிடுதல்,  க்ரஹஸ்தாச்ரமத்தில் உள்ள தம்பதியரின் கடமை. ஐம்பது வயது ஆனபிறகு , அத்தம்பதிகள், ஊரின் புறத்தே இருந்து கொண்டு வாழ்க்கையை நடத்துதல் வானப்ரஸ்தம் எனப்படும். அதற்குப்பிறகு இல்லறத்தையும் துறந்து வாழ்வதைத் துறவறம் என்பார்கள். இதனை மணம் செய்து கொள்ளாதவர்களும் நேரிடையாக ஏற்பதுண்டு.

துறவு ஏற்பதும் அறத்தைச் சார்ந்ததாகவே இருக்கவேண்டும் என்பதாலோ என்னவோ அதைத் துறவறம் என்று அழகாகப் பெயரிட்டுள்ளார்கள். இந்த விவேக நிலையை ஏற்றவர்கள் எப்போதும் ஈச்வர த்யானமும் , பூஜையும் , ஆத்மவிசாரமும், பிறர்க்குத் தர்ம உபதேசமும் செய்து கொண்டு இருப்பர். ஒரே இடத்தில் நிலைத்து இராமல், பலவிடங்களுக்கும் கால்நடையாகவே சென்று அங்குள்ள மக்களை நல்வழிப்படுத்துவர். யோகிகளுக்கெல்லாம் பரமயோகியாக விளங்கும் தக்ஷிணாமூர்த்தி , மௌன குருவாக இருந்ததுபோல, அதிகமாகப் பேசாமல்,  பக்தர்களிடம் தெய்வ நம்பிக்கையும் , தர்மத்தில் ஈடுபாடும் விளைவிக்கும் சம்பாஷனை மட்டுமே மேற்கொண்டவர்களாக சந்நியாசிகள்  காணப்பட வேண்டும். 

மண் ஓட்டையும் செம்பொன்னையும் ஒரே மாதிரி பாவிக்கும் பக்குவம் இவர்களிடம் காணப்பட வேண்டும். தனக்கென்று எந்த வசதியையும் எதிர்பார்க்காமல் துறவறத்தின் நோக்கம் ஒன்றையே கருத்தில் கொள்ள வேண்டும். எல்லோரையும் சமமாக நோக்கவேண்டும். வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்களாக இருந்துவிட்டால், உலகமே இவர்களை வணங்கும். உலகம் இவர்களிடம் சில குணாதசியங்களைக்  குறைந்த பட்சமாக எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஏனென்றால் இவர்கள் பிறருக்கு வழி காட்டவும், தான் முத்தி அடையவும் துறவு மேற்கொண்டவர்களாயிற்றே! எனவேதான் இவர்களது நியமங்கள் கடுமையாகக் காணப்படும்.  

காரில் நேராகக் கோயில் வாயிலில்வந்து இறங்குவதைப் பிறர் போல இவர்களும் மேற்கொள்வதை மக்கள் விரும்புவதில்லை. சாதாரண மனிதர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்கிறார்கள். பண்டைக்கால குருமார்கள் கால்நடையாகவே நாடு முழுதும் பயணம் மேற்கொண்டார்கள். அவ்வளவு ஏன், நாம் செய்த புண்ணியத்தால் அதுபோலவே இறுதிவரை இருந்த காஞ்சி முனிவரைத் தரிசித்திருக்கிறோமே ! சந்நியாசம் மேற்கொண்டவர்களுக்கு அடையாளம் காவி உடை மட்டுமல்ல. விபூதி- ருத்ராக்ஷம் தரிப்பதும்கூடத்தான். பூஜைக் காலங்களில் மட்டும் ருத்ராக்ஷம் அணிந்தால் போதாது. எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் ருத்ராக்ஷம் கண்டிப்பாக அணிந்து கொண்டு  வர வேண்டும்.  தவ ஒழுக்கம் என்பது சில மகான்களிடம் ஏராளமாகக் காணப்படும். அவர்களது முகத்தில் தவத்தின் வலிமை ஜொலிக்கக் காணலாம். 

சதாசிவப் பிரம்மேந்திரர் போன்ற மகான்கள், மனித சஞ்சாரம் இல்லாத இடங்களிலேயே தவ சீலர்களாக இருந்தது போல இன்றும் எங்கோ ஒரு கோடியில் அத்தகையவர்கள் இருக்கக்கூடும்.
சிலர் நினைக்கலாம், தவச்சீலர்களுக்கு மட்டுமே இறை அருள் எளிதில் கிட்டும் என்று.மற்றவர்கள் உலகியலில் சிக்கி இறைவனை அதிகமாக நினைக்காதது ஒன்றே இவ்வாறு நினைக்கத் தூண்டுகிறது. உண்மையில் பார்த்தால் ஏனையோரும் பக்தி செலுத்தினால் இறையருளைக் கண்டிப்பாகப் பெற முடியும். இப்படி வழி காட்டுகிறார் ஞான சம்பந்தர் தனது திருவாரூர்ப் பதிகத்தில்:

“  பிறவியால் வருவன கேடுள ஆதலால் நாளும்

   துறவியார்க்கல்லது துன்பம் நீங்காதெனத் தூங்கினாயே

   மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்தநீர் மல்கு சென்னி

   அறவன் ஆரூர்  தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் 
   
                                                                                                    நெஞ்சே”

ஏ நெஞ்சமே, பிறந்து விட்டாலே துன்பங்கள் நம்மைத் தொடர்கின்றன. துறவிகள் மட்டுமே துன்பமில்லாமல் இருக்கமுடியும் என்று ஒதுங்கி விட்டாயே! ஆனால் இப்போது நீ நல்ல வழியை நாடி விட்டாய். கங்கை தாங்கிய சடையுடைய திருவாரூர்ப் பெருமானைத் தொழுதுவிட்டால் அத்துன்பவினைகள் நமக்கும் நீங்குவது எளிதே ஆகும் என உணர்வாயாக. என்ன நேருமோ என்று அஞ்சி மயங்க வேண்டாம். இறைவனைத் தொழுது நாமும் உய்யலாம்  என்று இப்பாடல் மூலம் நமக்கு அடைக்கலம் அளிக்கிறார் சண்பை ஞான சம்பந்தர்.

இதிலிருந்து,  உண்மையாகவே துறவறம் பூண்டு, இறைவனை மட்டுமே நாடி இருப்போர்க்கு உய்வு கிடைக்கும் என்பதும், இல்லறத்தாரும் இறைவனை ஒருமுகத்தோடு நெக்குருகி நாள்தோறும் வழிபட்டால் உய்யலாம் என்பதும் ஒரு சேர அறியப்படுகிறது.