Wednesday, December 28, 2011

ஒற்றியூர் உத்தமன்

உலகத்தில் நல்லனவும் கெட்டனவும் கலந்தே இருக்கக் காண்கிறோம். இவ்விரண்டையும் காட்டி அதில் நல்லதைப் பகுத்து அறிந்து எடுத்துக்கொள்ளும் ஆறாவது அறிவை இறைவன் மனித்தப் பிறவிக்கு அருட் கொடையாக வழங்கியிருக்கிறான். " நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்" என்று தேவாரமும் எடுத்துக்காட்டுகிறது. தீய காரியங்களில் ஈடுபடும்போது பாவ வினைகள் வந்து சேர்கின்றன. இப்பாவங்கள், தெரிந்தும்,தெரியாமலும் செய்யப்படுபவையே. கண், காது, மூக்கு,வாய், உடல் ஆகிய பஞ்ச இந்திரியங்களால் செய்யப்படுபவையே. இவை. மனத்தின் ஏவலால் செய்யப்படுவதாகக் கொள்ளலாம். அனுதினமும் இப்பாவ மூட்டையின் பாரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கண்ணால் பார்க்கப் படுவதை எல்லாம் அடைய ஆசைப்படுகிறோம். கேட்கக் கூசுபவைகளைக் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். வாயால் கூசாமல், பொய் சொல்கிறோம். பிறர் மீது அபாண்டமாகப் பழி சுமர்த்தத் துணிந்துவிட்டோம். பிறரை எசுகிறோம். இறைவனை வாழ்த்தவேண்டிய வாயால் மனிதர்களை வாழ்த்துகிறோம். இப்படி வாக்கினால் வரும் பாவத்தை, " உரையினால் வந்த பாவம்" என்று சம்பந்தர் தேவாரம் கோடிட்டுக் காட்டுகிறது. இந்திரிய வயம் இப்படி நாம் மயங்கிக் கிடப்பதாக மணிவாசகரும் குறிப்பிடுகிறார். இதிலிருந்து விடுபட முடியாமல் நாம் தள்ளாடுகிறோம்.மேன்மேலும் பல கஷ்டங்களை அனுபவிக்கிறோம். மீண்டும் பல பிறவிகள் எடுப்பதற்குத் தயாராக்கிக் கொள்கிறோம்.


சிலர் கேட்கலாம். " நாம் அவ்வப்போது செய்யும் பாவங்களை முடிந்தபோது கோவிலுக்குப் போவதாலும், பரிகாரங்கள் செய்து கொள்வதாலும் களைந்து கொள்ள முடியாதா?" என்று. அப்படியே இருந்தாலும் இது பாசிக் குளம் போலத்தான். பாசியை விலக்கி விட்டு ஸ்நானம் செய்தாலும் மீண்டும் தண்ணீரைப் பாசி மூடிவிடுவது போல நம் மனத்தைப் பாவ அழுக்குகள் மூடி விடுகின்றன. குளத்தைப் பாசி பிடிக்காமல் பார்த்துக் கொண்டால் எவ்வளவு நல்லதோ , அதே போல் மனத்தையும் பாவ அழுக்கு மூடாமல் தினந்தோறும் பார்த்துக்கொள்ள வேண்டும். என்றாவது ஒரு நாள் குளத்திலிருந்து பாசியை நீக்குவதுபோலத்தான், எப்போதாவது கோவிலுக்குப் போவதோ அல்லது, பரிகாரம் செய்து கொள்வதோ ஆகும். அதனால் தான், "நித்தலும் எம்பெருமானுடைய கோயில் புக்கு" என்று பாடினார் அப்பர் சுவாமிகள்.


பாவம் செய்வதையெல்லாம் செய்துவிட்டு, தினமும் கோயிலுக்குப் போவதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலத்தான். எங்கும் வியாபித்துள்ள இறைவனை ஏமாற்ற முடியாது. "அடிமையை அளப்பர் போலும்" என்று தேவாரம் சொல்வதைக் கவனிப்போம். பக்த்ர்களது பக்குவத்தை அளந்து அதற்கேற்றபடி அருளுபவன் இறைவன் ஆதலால் வஞ்சனையாலும், பரிகாரமாகக் கடவுளை விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைப்பதாலும் ஒருநாளும் தீய எண்ணம் நிறைவேறாது.


ஞானிகளைப் போல் பஞ்ச இந்திரியங்களை முழுவதும் வெல்ல நம்மால் முடியாவிட்டாலும். தெரிந்து (வேண்டுமென்றே) செய்யும் பாவங்களையாவது செய்யாமல் இருக்க வேண்டும். அதற்கு நம்மைப் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். நல்லவர்கள் நடுவில் நாம் இருந்தால் நாமும் நல்லவர்களாக முயற்சிப்போம் அவர்களோடு சேர்ந்து நல்லவற்றையே பார்ப்போம். நல்லவற்றையே கேட்போம். உடல் பெற்ற பயனாக நல்ல செயல்களையே செய்யத் தொடங்குவோம். "தொண்டரொடு கூட்டு கண்டாய்" என்று அபிராமிபட்டர் வேண்டுகிறார். ஆலயங்களைத் தரிசிப்பதும், வேள்விகள் நடக்கும் இடங்களுக்குச் செல்வதும் நம்மை நல்ல மார்க்கத்தில் செல்லத் துணை செய்யும். திருவொற்றியூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதிருத்ர மகா யக்ஞத்தை தரிசித்தபோது மந்திரங்களின் அதிர்வலைகள் நம்மைப் புனிதப்படுத்துவதை உணர முடிந்தது. காஞ்சி காமகோடி பீடத்தில் ஆயிரத்து எழுநூறுகளில் பீடாதிபதியாக இருந்த மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இங்கு இருப்பதால் இதனை இவ்விடத்தில் நடத்துகிறார்கள். காஞ்சிபுரத்திலிருந்து பெரியவர்களும் வந்திருந்து,யாக சாலையையும்,அதிஷ்டானத்தையும் தரிசித்துவிட்டுச் சென்றார்கள்.


நம்முடைய மனம் ஒரு தோணி போன்றது. அதைச் செலுத்துவதற்குப் புத்தியாகிய கோலைப் பயன் படுத்துகிறோம். நம்முடைய கோபமே அதில் ஏற்றப்படும் சரக்கு. இதில் கோப மூட்டையின் பாரம் அதிகரித்தாலோ , தோணி கவிழ்ந்துவிடும் ஆபத்து உண்டு. போதாக் குறைக்கு, மன்மதனாகிய பாறை அத்தோணியைத் தாக்கினாலோ அத்தோணி நடுக கடலில் கவிழ்ந்து விடும். அப்படிப்பட்ட நிலையிலாவது உன்னை நினைக்கும் வரம் எனக்கு அருளுவாயாக என்று அப்பர் பெருமான் திருவொற்றியூரில் இறைவனை வேண்டித் துதிக்கும் பாடல் இதோ:மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றிச்

சினம் எனும் சரக்கை ஏற்றிச் செறி கடல் ஓடும்போது

மனன் எனும் பாறை தாக்கி மறியும் போது அறிய ஒண்ணாது

உ(ன்)னை உ(ன்)னும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.இப்பாடலைப் பலர் நாள் தோறும் பாடி வருவது உண்டு. "துஞ்சும் போதாக வந்து துணை ஆகி அஞ்சல் என்று அருள வல்ல " ஒற்றியூர் உத்தமன் இப்படிப்பட்ட உயர்ந்த பிரார்த்தனைக்குச் செவிசாய்க்காமல் இருப்பானா?

Monday, November 7, 2011

அஞ்சேல் என்று அருள் செய்வான்

அமரர்களும் அறியாத அம்பிகைக்குச் சில சந்தர்ப்பங்களில் அச்சம் ஏற்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. அகில அண்டங்களுக்கும் அன்னையாய் அபயம் அளிப்பவளுக்கு அஞ்சல் நாயகி என்றும் அபயாம்பிகை என்றும் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறை தலத்தில் நாமங்கள் உண்டு. அப்படிப்பட்ட ஞானாம்பிகைக்கே அச்சம் ஏற்பட்டால் அதனை  அவளது பாகம் பிரியாத நாதனாகிய பரமேச்வரனால் மட்டுமே தீர்க்க முடியும். 

தாருகாவன முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து அதில் தோன்றிய யானையை சிவபெருமான் மீது ஏவியபோது, தன்னை அணு அளவாக மாற்றிக்கொண்டு அந்த யானையுள் பிரவேசிக்கவே, உலகம் இருள் சூழ்ந்தது. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றும் இறைவனது முக்கண்கள் ஆதலால், அவை மறைக்கப்பட்டதால் இவ்விதம் நிகழ்ந்தது. இதனால் அச்சமடைந்த உமாதேவி அவசரமாக அருகிலிருந்த முருகனை எடுத்துத் தன் இடுப்பில் வைத்துக்கொண்டாளாம். யானையைக் கிழித்துத் தோலாகப் போர்த்திக் கொண்டு வெளியே வந்த இறைவனைத் தனது தாய்க்குக் காட்டினானாம் குமரக் கடவுள். மீண்டும் உலகம் ஒளி பெற்றது. இக்காட்சியைத் திருநாவுக்கரசர் தேவாரம், 
                                      ..... " களியானை கதறக் கையால் உரித்து எடுத்துச் சிவந்த தன் தோல் மேல் பொருந்த மூடி 
                       உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி.." 

என்று நமக்கு முன்னே காட்டுகிறது. 

கம்பை ஆற்றின் அருகில் மணலால் சிவலிங்கம் உண்டாக்கி, நியமத்துடன் வழிபட்ட காமாக்ஷி அன்னையைச் சோதிப்பதுபோலக் கம்பையில் வெள்ளம பெருகி வரவே, தான் பூஜிக்கும் மூர்த்திக்கு ஏதேனும் நேர்ந்துவிடப்போகிறதே என்று அப்பெருமானைத் அச்சத்துடன் தழுவியதும் பெருமான் வெளிப்பட்டு அருளினான் என்று காஞ்சிப் புராணம் கூறும். சுந்தரரும் இதனை, ... "வெள்ளம காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனை .." என்று பாடுவார். 

தனது தேரோட்டி தடுத்தும் கேளாத தசமுகன், திருக்கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க முற்பட்டபோது, அம்மலை சிறிது அசையவே, பார்வதி தேவி அச்சமடைந்தாளாம். தனது பலத்தையெல்லாம் பயன்படுத்தி மலையை அரக்கன் தூக்க முற்பட்டதை அப்பர் பெருமான்,

                                                " நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை 
                         உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் .."  

எனக் காட்டுவார்.  இலங்கை வேந்தனுக்கோ இருபது தோள்களும்  பத்துச  சிரங்களும்.. அவை யாவும் பொடிப்பொடியாகும் படியாகத் தன் கால் விரலால் சற்று அழுத்தினான் இறைவன். இவ்வாறு, " பருத்த தோளும் முடியும் பொடிபட"   "தலை அஞ்சும் நான்கும் ஒன்றும் ( 5+ 4+1= 10 தலைகள்) இறுத்தான்" என்று பாடுகிறார். அரக்கனுக்கோ மலைபோன்ற கடினமான தோள்கள். ஊன்றிய இறைவனுக்கோ மலர் போன்ற மெல்லிய பாதங்கள். அதிலும் அப்பாதத்தின் விரல் நுனியாலேயே அழுத்தி, அவன் கண்களில் இரத்தம் பெருக வீழ்ந்தான் ( " கண் வழி குருதி சோரத் திருவிரல் வைத்தவர்" ) . உடனே, தனது தவற்றுக்கு வருந்தி இறைவா என்று புலம்பினானாம். கை நரம்பால் சாம வேதம் பாடி இறைவனைப் பிழை பொறுக்க வேண்டினான் அரக்கன். வேத கீதங்கள் பாடிய அவனுக்கு இரங்கி, இராவணன் என்ற நாமத்தையும் , போர் வாளையும் நீண்ட ஆயுளையும்,தேரையும் இறைவன் அருளினான் . இவ்வாறு தசமுகன் இராவணன் என்ற நாமம் பெற்றதைத் தாண்டக வேந்தரான நாவுக்கரசர் பெருமான்,
  
                         கைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான் 
                           கயிலைமலை அதுதன்னைக் கருதாது ஓடி 
                         முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி 
                           முடுகுதலும் திருவிரல் ஒன்று அவன் மேல் வைப்ப
                         பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்  
                           பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமத் 
                         தத்துவனைத் தலையாலங்காடன் தன்னைச் 
                           சாராதே சால னாள் போக்கினேனே.  

என்று அற்புதமாகப் பாடுகிறார். 

அப்போது அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த அம்பிகையின் கலக்கதைத் தீர்க்கு முகமாக, அரக்கனை அடர்த்து, அவனுக்கு அருளிய பின்னர், அம்பிகையை நோக்கி, 

                                        " ஆயிழையே , அஞ்சல் , அஞ்சல் " என்று கூறியதாக அப்பர் தேவாரம் நயமாக எடுத்துரைக்கிறது. 
                   
இந்த நயம் மிக்க பாடல், மயிலாடுதுறைக்கு அருகில் பொன்னூர் என்று வழங்கப்படும் அன்னியூர் என்ற தலத்துப் பெருமான் மீது பாடப் பெற்றது. இதோ அப்பாடல்: 

                         வஞ்சரக்கன் கரமும் சிரத்தொடும் 
                         அஞ்சுமஞ்சும் ஓர் ஆறும நான்கும் இறப்
                         பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆயிழை
                         அஞ்சல் அஞ்சல் என்றார் அன்னியூரரே.  

( இதில் " அஞ்சுமஞ்சும் ஓர் ஆறும நான்கும் " என்றது இருபது கைகளைக் குறிக்கும்.) 

நமது புலன்கள் அலமந்து அறிவு அழிந்திட்ட போது அஞ்சேல் என்று அருளுமாறு இந்த ஆதி தம்பதியர்களை ,"உள்ளத்து உள்கி உகந்து" வேண்டுவோமாக. 

Friday, October 14, 2011

பொன் நீ மணி நீ


நமது தீய வினைகளே நமது துன்பத்திற்குக் காரணம் என்பதை அறியாதவர்களாய்த் தெய்வத்தைக் குறை கூறுகிறோம். ஆனால் அருளாளர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவிப்பவர்கள். அடியார்களுக்கு இன்பமே வரும் ,  துன்பம் ஏது என்ற உறுதி உடையவர்கள். அப்படி ஒருக்கால் சோதனையாகத் துன்பம் வந்தாலும், இறைவனது திருவடியை மறவாதவர்கள். "நன்றே செய்வாய்; பிழை செய்வாய்? " எனும் திருவாசக வரிகள் இதை எடுத்துக் காட்டும். இறைவனிடம் நட்புரிமை பூண்ட அடியார்கள் சில வேளைகளில் அவனை ஏசுவது போலத் தோன்றும். உண்மையில் அச் செயல் அவர்களது பக்தியை மேலும் வெளிப்படுத்துகிறது.

திருவாரூர் தியாகேசப்பெருமான், தனது சன்னதிக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனாரிடம் அசரீரியாக, "தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம் "  என்றதால் சுந்தரர் அதுமுதல் "தம்பிரான் தோழர்" என்றே அழைக்கப்பட்டார். தோழனிடம் கொண்ட நட்பு, உரிமையோடு கூடியது அல்லவா? எனவே தோழனாகத் தன்னைத் தந்த இறைவனை நிந்தா ஸ்துதியாகப் பல இடங்களில் பாடுவார் சுந்தரர்.

காஞ்சிபுரத்தில் உள்ள ஒனகாந்தன் தளி என்ற தலத்திற்கு வந்தபோது சுவாமியிடம் பொன் கேட்டார் நம்பிகள். சுவாமி அதைக் கேளாதவர்போல் இருப்பதைக் கண்டு சுந்தரர்,
" உன்னை வாயார வாழ்த்தினாலும் வாய் திறந்து உண்டு- இல்லை என்று சொல்ல மாட்டாயா? சித்தம் என்பால் வைக்க மாட்டாயா? ஆடிப்பாடி அழுது நெக்குருகி வேண்டுவோர்க்கு அருள மாட்டாயா? உன்னிடம் இருப்பதோ மாலையாகிய பாம்பு; வாழ்வதோ ஆர் ஊர்(திருவாரூர்), திருவொற்றியூரும் உன்னுடையது அல்ல. இப்படி இருக்கும்போது உன்னிடம் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது?" என ஏசுவது போலப் பாடவே, சுவாமி அவருக்குப் பொன் அளித்தார் என்பது வரலாறு.பல ஊர்களில் பெற்ற பொன்னைக் கொண்டு, திருவாரூரில் அடியார்களுக்கு அன்னதானம் செய்துவந்தார் என்றே பெரியபுராணம் காட்டுகிறது.

இழந்த கண்ணைத் திரும்பப் பெறவேண்டி இறைவனிடம் முறையிட்டும் சுவாமி வாளா இருப்பதைக் கண்டு மனம் வருந்தியவராக, " மீளா அடிமை பூண்ட அடியார்கள் கண் இழந்து குழியில் விழுவதைக் கண்டும் வாளா இருப்பதேன்? இருந்தும், நின்றும்,கிடந்தும் உன்னை இகழாது, நாய் போலத் திரிந்து போற்றும் அடியார்களைக் கை விடுவீரானால் நீர் மட்டும் நன்றாக வாழ்ந்து கொண்டு இரும்." என்று சுந்தரர் நெகிழ்ந்து பாடியவுடன் மீண்டும் கண் கிடைக்கப் பெற்று, கண் பெற்ற பலனை அத தியாகேசனை மீண்டும் தரிசிப்பதன் மூலம் பெற்றார்.  

உண்மையில் இமைப்பொழுதும் இறைவனை அவர் ஏசவில்லை என்பதை அவரது பாடல்களே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.இம் மானிட வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கும் போது கண்கள் நீர் பெருக்குவதாகத் திரு நாட்டியத்தான்குடிப் பதிகத்தில் குறிப்பிடுகிறார். இடர் களையும் மாணிக்க வண்ணன் ஒருவனே கதி என்பதை நமக்கு இதன் மூலம் உணர்த்துகிறார். பொன்னைப் பாடுவதாக உலகோர் சொல்வது எவ்வளவு தவறு என்பது அவர் வாக்காலேயே வெளிப்படுகிறது. எதற்கும் ஆசைப் படாத ஆச்சார்ய மூர்த்திகள்,
பாடுவதைக் கேளுங்கள்:

                         அஞ்சாதே உமக்கு ஆட்செய்ய வல்லேன்
                            யாதினுக்கு ஆசைப் படுகேன்
                         பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை
                            பங்கா எம் பரமேட்டீ
                         மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த
                            மணியே மாணிக்க வண்ணா
                         நஞ்சேர் கண்டா வெண் தலை ஏந்தீ
                            நாட்டியத்தான்குடி நம்பீ.

பஞ்சின் மெல்லடியாள் பாகனாகவும், மதி சூடிய மணியாகவும், மாணிக்க வண்ணனாகவும், நஞ்சுண்ட கண்டனாகவும், பிரம சிர கண்டீசனாகவும் பலப்பலப் பெயர்களால் இறைவனது புகழைப் பாடுகிறார் சுந்தரர். அவரே, திருப்பாச்சிலாச்சிராமத்தில், "ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல" எனப் பாடியதையும் இங்கு நினைவு கொள்ளலாம்.

Tuesday, September 20, 2011

"நாம் வணங்கும் கடவுள்"

குபேரன் , சிவபெருமானின் நண்பன் என்று புராணங்கள் மூலமாக அறிகிறோம். குபேரனின் செல்வக் குவியல்களை சங்கநிதி , பதும நிதி என்று பெயரிட்டு அழைப்பார்கள். சில சிவாலயங்களில் பூத கணத் தோற்றத்துடன் இவை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள அணைக்குடி சிவாலயத்தின் நுழைவு வாயிலின் இரு புறமும் இவை காணப்படுகின்றன. சிவ பூஜையும் சிவாலய தரிசனமும் தொடர்ந்து செய்பவர்களுக்கு சிவனருளால் இவை கிடைக்கும் என்பதை இவை காட்டுகின்றன போலும் . "எத்திசைக் கனகமும் ,பைம்பொன் மாளிகையும் " கிடைக்கும் என்றுதானே திருமுறைகளும் சொல்கின்றன. "அளித்துப் பெரும் செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே" என்று அப்பர் சுவாமிகளும் பாடியிருக்கிறார்.


இங்கே ஒரு கேள்வி எழுகிறது. தெய்வ பக்தி இல்லாதவர்களிடத்தும் செல்வம் புரள்கிறதே எனக் கேட்கலாம். முற்பிறவியில் செய்த நல்வினையின் பயனை அவர்கள் அனுபவிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், இப்பிறவியில் தெய்வ பக்தி இல்லாதவர்களாக இருக்கக் கூடும். அவர்களும் அவர்களது செல்வமும் மங்கக்கூடியவை. சிவனடியார்களாக இல்லாத அவர்கள் ஒருக்கால் தம்மிடம் இருக்கும் சங்கநிதியையும் பதும நிதியையும், தந்து, இவ்வுலகையும் வான் உலகத்தையும் ஆள்வதற்காகத் தந்தாலும் நான் அப்படிபட்டவரையும் அந்த நிதியையும் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டேன் என்கிறார் அப்பர் ஸ்வாமிகள்.


"சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து
தரணியோடு வான் ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க்கே காந்தர் அல்லார் ஆகில்..."


இதில் மாதேவர் என்பது, மகாதேவனாகிய பரமேச்வரனைக் குறிக்கும். மாதேவர்க்கே என்று படித்தால் மகாதேவனுக்கு மட்டுமே மீளா அடிமை ஆவதை இந்த ஏகாரம் காட்டுவதாகக் கொள்ளலாம். மாதேவர்க்கு ஏகாந்தர் ஆகில் என்றும் சிலர் பிரித்துப் பொருள் கொள்வார்கள்.


அடுத்து வருவதுதான் ஒப்புயர்வற்ற கருத்து. ஒரு புலையன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். வடமொழியில் இவனை சண்டாளன் என்பார்கள். பசுவை உரித்துத் தின்னும் தொழிலை மேற்கொண்டதால் இவ்வாறு அழைக்கப்பட்டான். அவன் தனது அங்கம் எல்லாம் குறுகி ஒழுகக்கூடிய தொழு நோயால் பாதிக்கப் பட்டவனாக இருந்தாலும் கங்காதரனாகிய சிவபெருமானுக்கு பக்தனாக இருந்தால் அவனே நான் வணங்கும் கடவுள் என்கிறார் அப்பர் பெருமான்.


"அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும்
கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே."


என்பது இந்த அற்புதமான தேவாரப் பாடல். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றெல்லாம் பாகு பாடு இல்லாமல் சிவனடியார் என்ற ஒன்றையே மனதில் கொண்டு அவருக்கு அடிமையாவதே தூய்மையான அன்பு என்று ஸ்வாமிகள் இதன் மூலம் நமக்கு உபதேசிக்கிறார்.


"ஒருவன் சண்டாளனாக இருந்தாலும் "சிவ" என்ற நாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பானேயானால் அவனோடு பேசு. அவனோடு வசி. அவனோடு சாப்பிடு." என்கிறது முண்டகோபனிஷத். அப்பரின் இத்திருத்தாண்டகமும் இதனை ஒட்டியே அமைந்திருக்கிறது. அடியார்க்கு அடியவன் ஆவதைக் காட்டும் இதுபோன்ற பாடலைத் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் காண்பது அரியதாகும்.


பின் குறிப்பு: முதல் பாராவில் கருவூர் தேவர், கங்கைகொண்ட சோழபுரத்துப்

பெருமான் மீது பாடிய திருவிசைப்பாவில் இருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ள பகுதி, "எண்டிசைக் கனகம் , பற்பதக்குவையும் பைம்பொன் மாளிகையும்" என்று இருக்க வேண்டும். சுட்டிக் காட்டிய சென்னை அன்பர் திரு மணி அவர்களுக்கு நன்றி.

கடைசி பாராவில் , தருமபுரம் ஆதீன வெளியீடான (1963 ) திருநாவுக்கரசர் தேவாரம் (ஆறாம் திருமுறை,குறிப்புரையுடன்) என்ற நூலில் பக்கம் 708 ல் முண்டக உபநிஷத்தில் வருவதாகக் கூறப்படும் மேற்கோள் , அந்த உபநிஷத்தில் காணப்படவில்லை. ஒருக்கால், வேறு நூலில் காணப்படலாம். இதனைச் சுட்டிக் காட்டிய பெங்களூர் அன்பர் ஸ்ரீ கணேஷ் அவர்களுக்கு நன்றி.

Thursday, July 28, 2011

கங்கையும் நங்கையும்

கங்காதேவியானவள் கடுமையான வேகத்துடன் உலகை அழிப்பதுபோல் பாய்ந்து வந்தபோது, புவனாதிபதியான சிவபெருமான் , அவளது சீற்றத்தைத் தடுத்துத் தனது திருச்சடையில் ஏற்றதால் கங்காதரன் எனப்பட்டார். கங்கை வந்த வேகம் என்ன! அவளை அநாயாசமாகத் தடுத்த லாவகம் தான் என்னே! திருஞான சம்பந்தர் சொல்வதைக் கேளுங்கள்.


" கடுத்து வரும் கங்கை தன்னைக் கமழ் சடை ஒன்று ஆடாமே தடுத்தவர்"
என்கிறார். அதாவது, கங்கையைத் தடுத்தபோது அவரது சடைமுடி ஒன்று கூட அசையவில்லையாம்.


கங்கையைச் சிரத்தில் ஏற்றத்தைக் கண்டு உமாதேவி, சுவாமியிடம் ஊடல்
கொண்டாளாம். அவளது கோபத்தைத் தீர்க்கவேண்டி, சடையில் இருப்பது கங்கை நதி என்றும், உலகைப் பேரழிவிலிருந்து காப்பதற்கே தாம் அவ்வாறு அதனை ஏற்றதாகவும் சொல்லி அவளை சமாதானம் செய்ய முயல்கிறார் பரமன்.


அப்பர் பெருமானோ இன்னும் ஒரு படி மேலே சென்று, இக்காட்சியினை
விவரிக்கிறார். சுவாமியின் விளக்கத்தால் அம்பிகை சமாதானம் அடைந்தவளாகக் காணப்படவில்லை. இவர்தான் ஆடல்,பாடல் எல்லாவற்றிலும் வல்லவர் ஆயிற்றே. கான ந்ருத்த சங்கரர் என்று ஒரு பெயரும் உண்டு அல்லவா? கானத்தால் உமையை சமாதானப் படுத்த முயலுகிறார். அதுவும் சாம கானம பாடி அவளது ஊடலைத் தீர்க்க விழைகிறார். உடனே அந்த கானத்திற்கேற்ப ஆடவும் செய்கிறாராம். இப்படிப்பட்ட அருமையான வருணனை, அப்பர்பெருமானின் திருவதிகை வீரட்டானத் திருப்பதிகத்தில் ஒரு பாடல் மூலம் நமது சிந்தையை மகிழ்விக்கிறது. இதோ அப்பாடல்:


சூடினார் கங்கையாளைச் சூடிய துழனி கேட்டு அங்கு
ஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்கவேண்டிப்
பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே
ஆடினார் கெடிலவேலி அதிகை வீரட்டனாரே.


இந்த ஆதி தம்பதிகளின் ஊடல் காட்சி, பல சோழர்கால ஆலயங்களில் கருவறைச் சுவற்றில் சிற்ப வடிவில் காணப் படுகிறது. இதனை, கங்கா விசர்ஜன மூர்த்தி எனப் பெயரிட்டு அழைப்பர். பேரளத்திற்கு அருகில் உள்ள திருமீயச்சூர் ஸ்ரீ மேகநாத சுவாமி ஆலயத்தில் அற்புத வடிவில் அமைக்கப்பட்டுள்ள சிற்பத்தின் வடிவழகையே மேற்கண்ட படத்தில்(நன்றி: தினமலர்) காண்கிறீர்கள். பெருமான், கோபம கொண்ட அம்பிகையின்
முகவாயைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்ப முயல்கிறார். இச்சிற்பத்தை ஒருபுறம நின்று பார்த்தால், அம்பிகையின் முகத்தில் ஊடலால் வந்த கோபமும், மறுபுறம்நின்று பார்த்தால், ஊடல் தீர்ந்தவளாகவும் காணப்படுகிறாள். இத்தெய்வீகக் காட்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.நேரில் சென்று தரிசித்துக் கண் பெற்ற பயனைப் பெற வேண்டும்.

Thursday, February 10, 2011

"பசுங்கிளி சொல் துதிக்க"

மாசி மகம் என்றவுடன் கும்பகோணம் நினைவுக்கு வரும்.இதோடு புராணத் தொடர்புடைய தலங்களாகக் குடவாயில் (குடவாசல்), பாணபுரீச்வரர் கோயில் (கும்பகோணம்), அபிமுகேச்வரர் ஆலயம்,அம்ருத கலசனாதர் கோயில் (சாக்கோட்டை) ஆகியவற்றைக் குறிப்பிடுவார்கள். இவற்றில் குடந்தையிலிருந்து மன்னார்குடி செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது சாக்கோட்டை என்ற ஊர். இது தேவார காலத்தில் கலயநல்லூர் எனப் பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள அமிர்தகலச நாத ஸ்வாமியின்மீதுசுந்தரர் ஒரு அற்புதமான பதிகம் பாடியிருக்கிறார். அதில் ஒவ்வொரு பாடலிலும் சிவ பராக்ரமமும்லீலைகளும் கூறப்பட்டுள்ளது. பக்திமணமும்,தமிழ் மணமும் சேர்ந்து நம்மைப் பரவசப்படுத்துவது இப்பதிகம்.

பிரம்ம-விஷ்ணுக்களால் காணமுடியாத அக்னிமலையாகவிளங்கியவன் சிவ பெருமான் என்பதால் ,

"மாலயனும் காண்பரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் "

என்று பாடினார். அடுத்ததாக, இறைவனின் முடிமீது இருக்கும் வன்னி, சந்திரன் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.

"வன்னி மதி சென்னிமிசை வைத்தவன்" என்றதால், பெருமானது கருணை விளக்கப்படுகிறது. இனி, பாற்கடலில் ஆலகால விஷம் தோன்றியபோது, எல்லா உலகங்களும், தேவர்களும் பிற உயிர்களும் அதனால் அழிய நேரிட்டபோது, அனைவருக்கும் அடைக்கலம் தந்து அதனை உண்டு தனது கண்டத்தில் வைத்த பரம கருணையை,

" மொய்த்து எழுந்த வேலை விடம் உண்ட மணிகண்டன்" என்றார். வேலை என்பது கடல் என்று பொருள் தரும்.

மலவாதனைகளுக்கு அப்பாற்பட்ட விமலனாகவும் விருஷபா ரூடனாகவும் திகழ்வதை, " மெய்யா , விமலா, விடைப் பாகா" என்றார் மாணிக்கவாசகர். சுந்தரரும் இதனை,

"விடை ஊரும் விமலன்" என்று சிறப்பித்தார்.

இந்த ஸ்தலத்தில் அமிர்தவல்லி என்ற பெயர் கொண்டு அம்பிகை விளங்குகிறாள். இவ்வாறு அம்பிகையோடு காட்சி தருவதை,

"உமையவளோடு மேவிய ஊர்வினவில்" என்று சொல்லிவிட்டு அந்த ஊரின் சிறப்புக்களை அழகாக வர்ணிப்பார் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்.

இங்கு உள்ள சோலைகளில் குயில்கள் கூவுகின்றன. மயில்கள் ஆடுகின்றன. வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. பசுங்கிளிகள் தாம் கேட்ட துதிகளைத் திரும்பச் சொல்வதால், தாமும் துதிக்கின்றன.

"சோலை மலி குயில் கூவக் கோல மயிலாலச்

சுரும்பொடு வண்டு இசைமுரல பசுங்கிளி சொல் துதிக்க"

என்பது அந்த வருணனை.

இனி வருவது பாடலின் மகுடம் போன்ற ஒப்பற்ற கருத்து. அந்த ஊரில் வசிக்கும் அடியார்கள், காலையிலும், மாலைக் காலத்திலும் மனம் கசிந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பதைச் சொல்வதால் நாமும் அவ்வாறு இரு வேளையிலும் இறைவனை மறவாது, நெக்குருகிக் கசிந்து வழிபட வேண்டும் என்றும் உணர்த்தப்படுகிறது.

"காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து

கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் கானே"

அண்மையில் இந்தப் பாடலைக் கலயநல்லூர் அமிர்தகலசநாத சுவாமியைத் தரிசித்துவிட்டுப் பாடிய பின்னர், அம்பாள் சன்னதிக்குச் செல்லும்போது, பிராகார மதிலை ஒட்டிய மரங்களில் இருந்து சுமார் ஐந்து கிளிகள் சப்தமிட்டன. உடனே, சுந்தரர் அருளிய இப்பாடலில் வரும் "பசுங்கிளி சொல் துதிக்க" என்ற வரிகள் நினைவுக்கு வரக் , கண்கள் பனித்தன.