Tuesday, September 20, 2011

"நாம் வணங்கும் கடவுள்"

குபேரன் , சிவபெருமானின் நண்பன் என்று புராணங்கள் மூலமாக அறிகிறோம். குபேரனின் செல்வக் குவியல்களை சங்கநிதி , பதும நிதி என்று பெயரிட்டு அழைப்பார்கள். சில சிவாலயங்களில் பூத கணத் தோற்றத்துடன் இவை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள அணைக்குடி சிவாலயத்தின் நுழைவு வாயிலின் இரு புறமும் இவை காணப்படுகின்றன. சிவ பூஜையும் சிவாலய தரிசனமும் தொடர்ந்து செய்பவர்களுக்கு சிவனருளால் இவை கிடைக்கும் என்பதை இவை காட்டுகின்றன போலும் . "எத்திசைக் கனகமும் ,பைம்பொன் மாளிகையும் " கிடைக்கும் என்றுதானே திருமுறைகளும் சொல்கின்றன. "அளித்துப் பெரும் செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே" என்று அப்பர் சுவாமிகளும் பாடியிருக்கிறார்.


இங்கே ஒரு கேள்வி எழுகிறது. தெய்வ பக்தி இல்லாதவர்களிடத்தும் செல்வம் புரள்கிறதே எனக் கேட்கலாம். முற்பிறவியில் செய்த நல்வினையின் பயனை அவர்கள் அனுபவிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், இப்பிறவியில் தெய்வ பக்தி இல்லாதவர்களாக இருக்கக் கூடும். அவர்களும் அவர்களது செல்வமும் மங்கக்கூடியவை. சிவனடியார்களாக இல்லாத அவர்கள் ஒருக்கால் தம்மிடம் இருக்கும் சங்கநிதியையும் பதும நிதியையும், தந்து, இவ்வுலகையும் வான் உலகத்தையும் ஆள்வதற்காகத் தந்தாலும் நான் அப்படிபட்டவரையும் அந்த நிதியையும் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டேன் என்கிறார் அப்பர் ஸ்வாமிகள்.


"சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து
தரணியோடு வான் ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க்கே காந்தர் அல்லார் ஆகில்..."


இதில் மாதேவர் என்பது, மகாதேவனாகிய பரமேச்வரனைக் குறிக்கும். மாதேவர்க்கே என்று படித்தால் மகாதேவனுக்கு மட்டுமே மீளா அடிமை ஆவதை இந்த ஏகாரம் காட்டுவதாகக் கொள்ளலாம். மாதேவர்க்கு ஏகாந்தர் ஆகில் என்றும் சிலர் பிரித்துப் பொருள் கொள்வார்கள்.


அடுத்து வருவதுதான் ஒப்புயர்வற்ற கருத்து. ஒரு புலையன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். வடமொழியில் இவனை சண்டாளன் என்பார்கள். பசுவை உரித்துத் தின்னும் தொழிலை மேற்கொண்டதால் இவ்வாறு அழைக்கப்பட்டான். அவன் தனது அங்கம் எல்லாம் குறுகி ஒழுகக்கூடிய தொழு நோயால் பாதிக்கப் பட்டவனாக இருந்தாலும் கங்காதரனாகிய சிவபெருமானுக்கு பக்தனாக இருந்தால் அவனே நான் வணங்கும் கடவுள் என்கிறார் அப்பர் பெருமான்.


"அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும்
கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே."


என்பது இந்த அற்புதமான தேவாரப் பாடல். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றெல்லாம் பாகு பாடு இல்லாமல் சிவனடியார் என்ற ஒன்றையே மனதில் கொண்டு அவருக்கு அடிமையாவதே தூய்மையான அன்பு என்று ஸ்வாமிகள் இதன் மூலம் நமக்கு உபதேசிக்கிறார்.


"ஒருவன் சண்டாளனாக இருந்தாலும் "சிவ" என்ற நாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பானேயானால் அவனோடு பேசு. அவனோடு வசி. அவனோடு சாப்பிடு." என்கிறது முண்டகோபனிஷத். அப்பரின் இத்திருத்தாண்டகமும் இதனை ஒட்டியே அமைந்திருக்கிறது. அடியார்க்கு அடியவன் ஆவதைக் காட்டும் இதுபோன்ற பாடலைத் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் காண்பது அரியதாகும்.


பின் குறிப்பு: முதல் பாராவில் கருவூர் தேவர், கங்கைகொண்ட சோழபுரத்துப்

பெருமான் மீது பாடிய திருவிசைப்பாவில் இருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ள பகுதி, "எண்டிசைக் கனகம் , பற்பதக்குவையும் பைம்பொன் மாளிகையும்" என்று இருக்க வேண்டும். சுட்டிக் காட்டிய சென்னை அன்பர் திரு மணி அவர்களுக்கு நன்றி.

கடைசி பாராவில் , தருமபுரம் ஆதீன வெளியீடான (1963 ) திருநாவுக்கரசர் தேவாரம் (ஆறாம் திருமுறை,குறிப்புரையுடன்) என்ற நூலில் பக்கம் 708 ல் முண்டக உபநிஷத்தில் வருவதாகக் கூறப்படும் மேற்கோள் , அந்த உபநிஷத்தில் காணப்படவில்லை. ஒருக்கால், வேறு நூலில் காணப்படலாம். இதனைச் சுட்டிக் காட்டிய பெங்களூர் அன்பர் ஸ்ரீ கணேஷ் அவர்களுக்கு நன்றி.