Saturday, September 21, 2013

அருளமுதம்

தமிழை முன்னிலைப்படுத்துவது எப்படி என்று கருத்தரங்கம் வைக்கிறார்கள். அதற்கு முன் தமிழ் எதில் வாழ்கிறது என்று சிந்திப்பது நல்லது. தமிழ் வெறும் பேச்சு மொழியாக இருந்தால் போதுமா? எழுதப்படிக்கத் தெரியாத எத்தனையோ இளந்தமிழர்களுக்குத் தமிழின் அருமையை  எப்படித் தெரிவிப்பது? பள்ளிப் படிப்பிலிருந்து வேற்று மொழியைக் கற்றுக் கொண்டு, தமிழை அறவே ஒதுக்க முற்படும் காலம் இது. பேசும் போதும் பிற மொழியில் பேசினால்தான் கெளரவம் என நினைப்பவர் பலர்! எட்டாம் வகுப்பு வரை தாய் மொழி ஒரு பாடமாகக் கண்டிப்பாக அனைவரும் கற்க வேண்டும் என்று அண்டை மாநிலத்தில் செயல் படும் போது, தமிழ்நாட்டில் அம்முறையைச் செயல் படுத்தலாம் அல்லவா? தமிழைத் தாய்மொழியாக அல்லாதவர்களுக்குச் சற்று சிரமாக இருக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறோம். தமிழைத் தமிழனே உதாசீனம் செய்யும்போது தமிழைக் காக்க இதைத் தவிர வேறு வழி இல்லை.

தமிழைக் கற்கும் மாணவர்களுக்கோ அதன் அருமை தெரிவிக்கப்படுகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நேற்று வந்தவர்கள் எழுதிய கவிதைகள்,கட்டுரைகள் புதிய சிந்தனை என்ற பெயரில் புகுத்தப்படுகின்றன. பெயர்  அளவிற்குப் பழந்தமிழ்ப் பாடல்கள் பாட திட்டத்தில்  இருந்த போதிலும், புரட்சி, சீர்திருத்தம் என்ற போர்வையில் அமையும் பாடங்களே அதிகம். அவற்றையெல்லாம் பற்றி சிந்திக்கும் பருவத்தில் இல்லாத மாணவர்களுக்கு அவை வலுக்  கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.

முன்பெல்லாம் பாடத்திட்டம் என்பது , நீதிகளைப் புகட்டும் விதத்தில் அமைந்திருந்தது. திருக்குறள்,நாலடியார், நீதிநெறி விளக்கம், ஆத்திசூடி,கொன்றைவேந்தன்  போன்ற நீதி நூல்கள்  கற்பிக்கப்பட்டு வந்தன. ஆசிரியர்களும் அவற்றின்  நயத்தையும், சொல்ல வந்த கருத்தையும் திறம்பட  மாணவர்களுக்கு விளக்கி வந்தார்கள். இப்போதைய பாட திட்டத்தில் எதை நயம்பட விளக்குவது?

பெரிய புராணத்தில் ஒரு பாடலை இங்கு பார்ப்போம். திருஞான சம்பந்தர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தன் தந்தையுடன் சீர்காழி ஆலயக் குளக் கரைக்கு வந்தார். தந்தை நீரில் மூழ்கி ஜபம் செய்து கொண்டிருந்தார். பசிமேலிட்ட அக்குழந்தை, தோணியப்பரின் விமானத்தை நோக்கி " அம்மே, அப்பா" என்று அழுதது. அகில உலகங்களுக்கும் அம்மையப்பர்  இவரே என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. அக்குழந்தையின் அழுகையையையும், பசியையும்  தீர்த்தருள வேண்டிக் கயிலை நாதனாகிய கருணாமூர்த்தி, உமாதேவியாரை  நோக்கி, அக்குழந்தையின் பசி தீருமாறு பாலூட்டியருளுவாயாக என  அருளிச் செய்தார். உமையம்மையும்  திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் ஏந்தி, அக்குழந்தையின் கண்ணீரைத் துடைத்து, அப்பாலில் சிவஞானத்தையும் சேர்த்துக் குழைத்து ஊட்டியருளினாள்.  இந்நிகழ்ச்சியை சேக்கிழார் பெருமான் நமக்கு எவ்வளவு நயத்தோடு தெரிவிக்கிறார் பாருங்கள்:

இது அருள் மயமான நிகழ்ச்சி அல்லவா? எத்தனை இடங்களில் "அருள்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது பாருங்கள்:
பிரம தீர்த்தக் கரையில் புண்ணிய வடிவாய் நின்ற இக்குழந்தை நிற்கிறது எனச் சொல்லும்போது,
" புண்ணியக் கன்று அனையவர்தாம்  பொருமி அழுது அருளினார் ."  என்கிறார் சேக்கிழார்.
தோணிச் சிகரத்தை நோக்கி, " அம்மே அப்பா " என்று அழைத்து அழுதார் எனும்போது,
" அம்மே அப்பா என்றென்று  அழைத்தருளி  அழுதருள"  என்பார்.
இறைவனும் மலைவல்லியுடன் " அருள்புரிவான் "எழுந்தருளுகின்றான்.
அம்பிகையைப்பார்த்து இறைவன் சொல்லும் இடத்தில்,
" அரு மறையாள்  உடையவளை அளித்தருள அருள் செய்வார்." என்பது நயம்  மிக்கது.

இறைவனது அருட்  செயலை வருணிக்கையில், அவனது திருவுள்ளத்தின் பெருமையை நமக்கு உணர்த்துகின்றார்.  " அருட் கருணை எழுகின்ற திருவுள்ளத்து இறையவர்" என்பது அத்தொடர்.
கருணையே வடிவான அம்பிகையும், இவ்வாறு சிவபெருமான் அருளியவுடன் அக்குழந்தையிடம் சென்றடைந்தாள்  என்பதை, "கருணை திருவடிவான சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் " என  பக்திச் சுவைபட எடுத்துரைக்கிறார்.

அம்பிகை, திருமுலைப் பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து அக்குழந்தைக்கு அளிக்க முற்பட்டாள் என்பதை, " திருமுலைப் பால் வள்ளத்துக் கறந்து அருளி " என்கிறார்.

இங்கேதான் அந்த அற்புதமான பாடல் அமைந்திருக்கிறது:
நினைத்துப் பார்ப்பதற்குக் கூட அரியதான சிவஞானத்தை அப்பாலோடு அமுதமெனக் குழைத்துத் தந்ததை, " எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்து அருளி " என்ற தொடர் காட்டுகிறது.

இதனை உண்பாயாக என்று கூறிய உமையம்மையை அக்குழந்தை எதிர் நோக்குகிறது. அதன் கண்களில் பசியாலும் நீரில் மூழ்கச் சென்ற தந்தை திரும்பக் கால தாமதமானதாலும்  கண்ணீர் ததும்புகிறது. சாதாரணக் கண்களா அவை? அவற்றை எப்படி வருணிப்பது! மலர் போன்ற கண்கள் என்று உவமையாகக் கூறுவதைக் காட்டிலும், கண்ணாகிய மலர் என்று உருவகித்துச் சொல்வதே மிகவும் பொருத்தம் என்று தோன்றுகிறது.அம்பிகையே எழுந்தருளி அக்  கண் மலரைத் துடைப்பது  அருள்தானே! யாருக்கு அது கிடைக்கும்? இப்போது பாடலைப் பார்ப்போமா?

" உண் அடிசில் என ஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்
  கண் மலர் நீர்  துடைத்தருளிக் கையில் பொற்கிண்ணம் அளித்து "
என்றவர், அவ்வற்புதத்தை, மேலும்,
சம்பந்தராகிய அண்ணலை அங்கணன் ஆகிய சிவபெருமான் அழுகை தீர்த்து அருளினான்.என்றார்.
" அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள் புரிந்தார்." என்பது அப்பாடல் வரிகள்.

இவ்வாறு கை மலர்களால் கண் மலர்களைப் பிசைந்துகொண்டு "அம்மே அப்பா" என்று அழைத்தவுடன் அம்மையப்பர் முன்னின்றருளினார்  என்று சொல்லும் பாடல் எவ்வளவு நயம் மிக்கது , அருள் மயமானது என உணர்கிறோம்.

சம்பந்தப்பெருமானது திருவடிகளும் மலர் போன்றவை என்பதால், அவரது புராணத்தைத் துவங்கும்போது,சேக்கிழார் பெருமான், "திருஞான சம்பந்தர் பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்" என்பார். இவ்வாறு சேக்கிழார் அருளிய பாடலைப் படிக்கும்போது அமுதத் தமிழில் திளைத்து, அமுதகடேசனின் அருளைப் பெறுகிறோம்.

இறைவனை " அருட்பெருங்கடலே" என்று அழைக்கிறார் மாணிக்கவாசகர். அந்த அருளில் சிறிதாவது பெற நாம் தவம்  செய்தவர்களாக இருக்கவேண்டும். அந்த ஆனந்த மா கடலின் அருளில் ஒரு திவலையையாவது பருகப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட விதியில்லாத அடியேன் உன்னையே அடைக்கலமாக அடைந்துள்ளேன்.உன்  அருளமுதத்தைப் பருகும் விதியில்லாததால் விக்கினேன். அப்போது தேன் போன்ற உனது அருளமுதத்தைப் பருகத் தந்து அடியேனை உய்யக்கொள்வாயாக என நெக்குருகி வேண்டுகின்றார்.

வழங்குகின்றாய்க்கு உன்  அருளார்  அமுதத்தை வாரிக் கொண்டு
விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என் விதி இன்மையால்
தழம் கருந்தேன் அன்ன தண்ணீர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய்
அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன்  அடைக்கலமே.
                                                                                            -- திருவாசகம்