Friday, March 22, 2019

தில்லைப் பொது நடம்

நேற்று வந்த தொலைபேசி எண் புதியதாக இருந்தது. சொல்லப்போனால் அது வெளிநாட்டு நம்பரும் கூட !  பேசியவர் ஒரு பெண்மணி.  தமிழ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். வெளிநாட்டில் குடியேறிப் பல ஆண்டுகள் ஆகிறதாம். எடுத்த எடுப்பில் அவர் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது.  " ஆதியாய்  நடுவுமாகி "  என்று தொடங்கும் பாடல் எதில் வருகிறது; எந்த ராகத்தில் அதைப் பாட வேண்டும் என்று கேட்டார். தன்னுடைய  குழந்தைகளுக்கும்  தெய்வீகப் பாடல்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவராக அவர் இருக்கிறார். 

வீட்டில் தமிழ் பேசுகிறீர்களா என்று கேட்டேன்.  அதற்கு அவர்  "  தமிழில் மட்டும்தான்  பேசுவோம். கம்ப்யூட்டர்  என்று சொல்வதையும் தவிர்த்துக்  கணினி  என்றே  சொல்கிறோம் .     உங்களுடைய வலைப் பதிவுகளைப் படித்து வருகிறேன்.  மேற்சொன்ன பாடல் பற்றிய ஐயம் வந்ததால் தங்களது தொலைபேசி எண்ணைக் கண்டறிந்து  இப்போது பேசுகிறேன் " என்றார். தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இல்லாமல் காலத்தைக் கழிக்கும் நம்மவர்களைப்  பார்த்து அலுத்துப் போன நிலையில் இப்படியும் ஒருவர் உலகின் ஒரு மூலையில் இருப்பது  ஆறுதலாக இருந்தது. 

இந்த உரையாடல் என்னைச் சிந்திக்க வைத்தது.  நமது கலாசாரம்,பண்பாடு ஆகியவற்றில் ஈடுபாடு உடையவர்கள் அநேகமாக வெளி நாடுகளுக்குச் சென்று விட்டார்களோ என்று நினைக்கத் தோன்றியது.  மீதம் உள்ளவர்கள்  சமயப் பற்று இல்லாதவர்களாகவும் , திரைப்படம்,அரசியல் , கேளிக்கைகள் ஆகியவற்றில் நேரத்தைச் செலவழிப்பவர்களாகவும்  இருக்கக் காண்கிறோம்.  பிரம்மாண்டமான ஆலயங்களைக் கட்டிய அரசர்கள் ஏற்படுத்தி வைத்த நிபந்தங்களைத் தமதாக்கிக் கொள்ளத் துணிந்து விட்ட சமுதாயத்தை என்ன சொல்வது ?  
அற நிலையங்களைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டுக் கொள்ளையடிக்கும் கும்பல்களைத்தான் நாம் பார்க்கிறோம். கோயில் சொத்துக்கள் சூறையாடப்படுவதை  சட்டத்தின் துணை கொண்டு நியாயமாக்கி விடுவார்களோ என்று அஞ்ச வேண்டி இருக்கிறது. யார் சொத்தை யாருக்குப் பட்டா போடுவது ? கொஞ்சம் கூட மன சாட்சியே இல்லையா ? 

இப்போது அந்த வெளிநாட்டுப் பெண்மணி குறிப்பிட்ட பாடலைக் காண்போம்  இப்பாடல் சேக்கிழார் அருளிய பெரிய புராணத்தில் தில்லை வாழ் அந்தணர் புராணத்தில் முதல் பாடலாக வருவது. இத் திருமுறைக்குப் பண்  அடைவு இல்லாததால்  நிறைவாகப் பாடும் பாடலாக இருக்கும் பட்சத்தில் ,  மத்யமாவதி  அல்லது சுருட்டி ராகத்தில் பாடுகிறார்கள். 

இந்த அற்புதமான பாடல் இறைவன்  ஏகனாகி,அநேகனாகி, பேதங்கள் அத்தனையும் ஆகிப் பேதம் இல்லாப் பெருமையனாக விளங்குவதை எடுத்துரைக்கிறது. இறைவனது ஆற்றலுக்கு அளவு ஏது ?  யார் அறிவார் எங்கள்  அண்ணல் அகலமும் நீளமும்  என்றபடி, அடி முடி காணாமல் நின்ற தத்துவன் அளவருக்க ஒண்ணாதவனாகப்  பிரம விஷ்ணுக்களுக்கே அரிய பெருமானாக  விளங்குவதால்  ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவுமாகி  என்றார்  சேக்கிழார் பெருமான்.

சோதி  மயமான அவன்  நமது உணர்வோடு ஒன்றித் தோன்றும்போது  நனியனாகி விடுகிறான்.  தோன்றிய பொருள்கள் யாவும் அவனது வடிவாகவே ஆகி விடுகின்றன. இப்படி அன்பருக்கு அன்பனாக விளங்குகிறான்.  அவனோ, ஆணல்லன், பெண்ணல்லன்,அலியும் அல்லன் என்றபடி சக்தியோடு இணைந்தும்,தனித்தும்  இருக்கும் பேராற்றல் உடையவன். ஐந்து தொழில்களையும் இயற்றும் அப்பெருமான்  அதனைத் தனது ஆனந்த நடனத் திருவுருவில் உணர்த்துகிறான். நமக்குப் போதிக்கிறான்.  தில்லைச் சிற்றம்பலம் ஆகிய பொதுவினில் நடம் புரியும்  பூங்கழல்களை  நாம் வந்திப்போமாக என்று , அரு மறைகளின் உச்சியில் இருந்து  கற்பனைக்கும் எட்டாதவனாகக் கருணையே உருவமாக நடமாடும்   நடராஜ மூர்த்தியினது அந்த அற்புதக் கோலத்தைத்   தெய்வச் சேக்கிழார்  முதல் பாடலாக  அமைத்தருளியுள்ளார். 

ஆதியாய் நடுவும் ஆகி  அளவிலா அளவும் ஆகிச் 

சோதியாய் உணர்வும் ஆகித்  தோன்றிய  பொருளும் ஆகிப் 

பேதியா  ஏகம் ஆகி ப்  பெண்ணுமாய்  ஆணும் ஆகிப்  

போதியா நிற்கும் தில்லைப்  பொது நடம்  போற்றி போற்றி.