Tuesday, February 10, 2015

மன்னி நிலாவிய மைந்தன்

தமிழ் மொழியானது தற்காலத்தில் ஏராளமான சொற்களை வழக்கொழிந்து நிற்கிறது. எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கையும்  பெருகி வருகிறது.இந்த நிலை நீடித்தால் என்ன  ஆகும் என்று கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை. பழந்தமிழ் நூல்களைக் கற்பார் இல்லாது போனால் நாளடைவில் எஞ்சியுள்ள சொற்களையும் மெதுவாக இழக்கும் அபாயம் நேரிடும். விஞ்ஞானப் பாடங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டும் ஆர்வம் உள்ளவர்கள் பழங்காலந்தொட்டே பழக்கத்தில் இருந்த சொற்களை ஏன் கைவிடுகிரார்களோ தெரியவில்லை.

நிலாவுதல் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இச்சொல்லுக்கு , உறைதல், விளங்குதல், பொலிதல், மேவுதல்,நீங்காது இடமாகக் கொள்ளல்,திகழ்தல்  என்று பல பொருள்கள் உண்டு. திருஞான சம்பந்தர் திருமருகல் என்ற தலத்தின் மீது பாடிய பதிகத்தில், " மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்" எனப் பாடுகிறார். இதேபோல், திருநெல்லிக்கா என்ற தலத்திலும்," நெல்லிக்காவுள் நிலாயவனே" என்பார்.  "  பெரும்பற்றப்புலியூர் சீர் நிலவிய திருநடம் " என்பது திருவிசைப்பா.

இனி, அடுத்ததாக, " மன்னுதல் " என்ற சொல்லைப் பார்ப்போம். இதற்கும் " நிலாவுதல் " என்ற சொல்லுக்கும் ஒரே பொருள் என்றுகூடக் கூறலாம். வாழ்த்துக் கூறும்போதும் இச் சொல் பயன் பட்டது. எடுத்துக் காட்டாக, சிவபெருமானுக்குத் திருப்பல்லாண்டு கூறும்போது, " மன்னுக தில்லை "  என்றே துவங்குகிறது. இறைவன் , அடியாரது சிந்தையைக் கோயிலாகக் கொண்டவன் என்பதைக்  குறிப்பிடுகையில், சிந்தையில் மன்னி நின்றான் என்று கூறக் காண்கிறோம்.

சிவ பரம்பொருள் ஒன்றே குறைவற்றும்,மலமற்றும் ,பிறவியற்றும் ஊழிதோறும் விளங்குவது. பசுக்களாகிய நாம் குறைவுடையவர்கள் தான். பசுபதியாகிய பரமன் ஒருவனே நிறைவானவன். அடியார்களும் எதாவது வகையில் குற்றம் புரியக் கூடும் என்பதால், "  குறையுடையார் குற்றம் ஓராய் "  என்று இறைவனிடம் நமக்காக வேண்டுகிறார் ஞானசம்பந்தர். முழுமுதற்கடவுள் ஆனதால், ஈறு இல்லாமலும், குற்றமற்ற அமுதாகவும் , சுடர்க் கொழுந்தாகவும்  பெருமான் மன்னுவதைத் திருவாசகமும் காட்டுகிறது.

" குறைவிலா நிறைவே; கோதிலா அமுதே; ஈறிலாக் கொழும் சுடர்க் குன்றே." என்பன அவ்வரிகள்

இறைவனை அகில உலகங்களுக்கும் அரசனாகவும், தேவர் உலகிற்கு மகா தேவனாகவும்,தேவர்  சிங்கமாகவும் கூறுதல் மரபு. இவ்வாறு விண்ணாளும் தேவர்க்கும் மேலாய வேதியனாகவும், மண்ணாளும் மன்னவர்க்கும் மாண்பாகவும்  நிற்கும்  பரம்பொருளை, வேதவுருவனாகவும் , வேதத்தின் மெய்ப்பொருளாகவும் மாணிக்கவாசகப் பெருமான் கூறுகையில்,
" மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே." என்கிறார். இப்படிக் கூறுகையில் மன்னுதல் என்ற சொல் பயன் படுத்தப்படுவதைக் காணலாம்.

இறைவனே நம் மனத்தைக் கோவிலாகக் கொண்டுவிட்ட பிறகு அவனிடம் இனிமேலும் வேண்டுவதற்கு என்ன இருக்கிறது? அத்திருவருள் அமுதாகிய சிவானந்தத் தேன் , தடுப்பாகிய அணை எதுவும் இல்லாமல் சீறிப் பாய்வதைப் போல் சிந்தையில் பாய்ந்துவிட்ட பிறகும், எதைக் கேட்க முடியும்? சிந்தையைத் திருத்தி ஆண்ட சிவலோகன் , தனது  மனத்தில் மன்னி நிலாவிய மைந்தனாகத் திகழ்வதை , குருநாதர் வாக்கால் கேட்பதே பேரின்பம் அல்லவா?

 குறைவிலா நிறைவே; கோதிலா அமுதே; ஈறிலாக் கொழுஞ்  சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே.
சிறைபெறா நீர் போல் சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே
இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே.
(இரத்தல் :- யாசித்தல் / வேண்டுதல்)