Monday, October 2, 2017

என் தங்கம்

செல்லக் குழந்தையைக் கொஞ்சும்போது "  என் தங்கமே " என்று கொஞ்சுகிறோம். தங்கத்திற்கும் குழந்தைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் இப்படித் தான் கூப்பிடுகிறோம். ஒரு குழந்தை நிறத்தால் செக்கச்செவேல் என்று இருந்துவிட்டால், பவுனை வார்த்தாற்போல இருக்கிறது என்று சந்தோஷப்படுகிறோம். பொன்னன், பொன்னி என்ற பெயர்கள் கூட இந்த அன்பின் வெளிப்படையாகக் கூட இருக்கலாம். இதேபோல்மணி, மாணிக்கம்,முத்து போன்ற பெயர்களும் சுருக்கமாக அழைக்கப்பட்டவை ஆனாலும், இதுபோன்ற விலை உயர்ந்த பொருள்களை நினைவு படுத்துவதாக இருக்கின்றன.

பொன்னார் மேனியனாகத் திகழும் சிவபெருமானையும் அடியார்கள் இப்படித்தான் அன்போடும்,  மிகுந்த வாஞ்சையோடும் அழைப்பார்கள். ஊரின் பெயரையும் சுவாமியின் பெயரையும் இணைத்து ஸ்வர்ணபுரி என்றும், சுவர்ணபுரீசுவரர் என்றும் அழைப்பர். ஒரு  ஊரில் சுவாமிக்கு ரத்னபுரீசுவரர் என்றும், மற்றோர் ஊரில் நிர்மலமணீசுவரர் என்றும் பெயர்கள் இருக்கக் காண்கிறோம். அம்பிகையும் ஸ்வர்ணாம்பிகை , ஸ்வர்ண வல்லி என அழைக்கப்படுகிறாள். 

அப்பர் சுவாமிகளுக்கும் பரமேசுவரனை பொன் மயமாகவே அழைக்க ஆசை. அதிலும் வரிக்கு வரி அப்படிப் பொன்னாகவே பெருமானை அழைத்தால்  எப்படி இருக்கும்!  அந்த ஆசை அண்ணாமலையில் வெளிப்படுவதை இங்குக் காண்போம்: 

முதலாவதாகப்  பெருமானைப் பைம்பொனே  எனத் துதிக்கிறார்.  பச்சைப் பசும்பொன் அவன். சொக்கத்தங்கம் என்பார்களே அதுவும் அவனே. இந்தத் தங்கமே சொக்கன் தந்தது தானே. ஆகவே அதனைச் சொக்கத் தங்கம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கிறது. அது மட்டுமல்ல. பவளம் போல் மேனியனான ஈசுவரனை , பவளக் குன்றமாகவே காண்கிறார் அப்பர் பெருமான். திருமாற்பேறு  என்ற சிவத்தலத்திலும், பாடல் தோறும் பெருமானைச் செம்பவளக் குன்று என்று வருணிப்பதைக் காணலாம். எனவே, பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு பூசியவனாகக் காட்சியளிக்கும் பரமனைப்       " பரமனே, பால் வெண்ணீறா " என்று போற்றுகின்றார். 

உருக்கி வார்த்த செம் பொன்னைக் காணும் போது , செம்பொன் மேனியனாகிய சிவபிரானது நினைவு வரவேண்டுமல்லவா ?  உருக்கும்போது இளகிய பொன்னே, குளிர்ந்ததும் இறுகி விடுகிறது. ஆனால் பரம்பொருளாகிய இறைவன் இதனினும் மாறு பட்டவன். உருகி அழைக்கும்போது ஓடி வந்து துணை என நிற்பான். பொன்னைப் போல் மேனியனானாலும் இறுகி விடாமல் மென்மையான மலர்ப் பாதத்தைத் தந்தருளுகின்றான். அந்தத் திருவடியின் பெருமையை யாரால் வருணிக்க முடியும்? மழபாடியுள் மாணிக்கமெனத் திகழும் பெருமானை " மணியே"  : என்று அகம் குழைந்து அழைக்கிறார் அப்பர்.

பொன்னானது இயல்பாகவே அழகானது. காண்போரை வசீகரிக்க வல்லது. ஆனால் இந்தப் பொன்னோ பொன்னுக்கே அழகைக் கொடுக்க வல்லது. உண்மையில் பார்த்தால் அழகிய பொன் என்ற சொல் பெருமானுக்கே பொருத்தமாகத் தோன்றுகிறது. ஆதலால், " அம்  பொன்னே " என்றார். 
அண்ணாமலையில் அருவிகள் பாய்ந்து,திரண்டு ஓடி வரும் அழகைக் குறிப்பதாக " கொழித்து வீழும் அணி அண்ணாமலை உளானே " என்று சிறப்பித்தார். இதையே, பொன் கொழித்து வரும் அருவிகள் மலை மீதிருந்து வீழ்வதாகவும் சேர்த்துப் பொருள் கொள்ளலாம். 

முதலில் கூறியபடி, குழந்தையை நாம் " என் தங்கமே " என்று அழைப்பதுபோல், " என் பொன்னே " என்று அப்பர் சுவாமிகள் அழைப்பது இன்புறத்தக்கது. அண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பர் பெரியோர். அப்படி இருக்கும்போது அண்ணாமலையானை நாம் மறக்கலாகுமா? அவனைத் தவிர வேறு நினைவே இல்லை என்கிறார் திருநாவுக்கரசர். " என் பொன்னே உன்னை அல்லால் எது நான் நினைவு இலேனே " என்று பாடலை நிறைவு செய்கிறார். 

இவ்வாறு பரமேசுவரனை ஒரே பாடலில் , பைம்பொன், செம்பொன், அம்பொன், என்பொன் என்றெல்லாம் வருணிப்பதை வேறு எங்கும் காண்பது அரிது. அப்படிப்பட்ட  சிவ வடிவத்தை, அண்ணாமலையானை நாமும் தியானித்து இப்பாடலை மீண்டும் காண்போமாக:

பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால் வெண்ணீறா 

செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க 

அம்பொனே கொழித்துவீழும் அணி அண்ணாமலை உளானே 

என்பொனே உன்னையல்லால் ஏதுநான் நினைவிலேனே. 

5 comments:

 1. மிக அருமையான பாடல். நன்றி.

  ReplyDelete
 2. இறைவன் தொண்டர்கள் நினைவிலும் புலன்களுக்கும் பொன்னாகத்தான் தோன்றுகிறான். தன் கரிய நிறத்தைப் பறை சாற்றும் வண்ணம் கரியமாணிக்கம் என்ற பெயருடன் நெல்லையம்பதியில் கோயில் கொண்டுள்ள பெருமாளை ஒரு பக்தர் காஞ்சனாத்ரி ஸமப்ரப என்று வர்ணித்துப் பாடுகிறார். ஆஞ்சனேயனையும் இதே அடைமொழியுடன் ஏத்தும் ஸ்லோகம், இராமாயணபாராயணத்துக்கு முன் ஸேவிக்கப் படுகிறது. அபரிமிதமான அன்பின் விளைவில் தான் குழந்தையும் தெய்வமும் த்ங்கமாகி விடுகிறார்கள். வேறும் உலோகமான தங்கம் இறைவனுடன் சம்பந்தப் படுத்தி பேசப் படுவதால் உயர்வை அடைகிறது என்பதை உணரவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அருமையான விளக்கம். மிகவும் நன்றி

   Delete
 3. One of my contacts to whom I forward your blog is Mr Ponnarmanian

  ReplyDelete
 4. Please continue to send your posts. Even if I can't read it immediately I will definitely remember to read it at a later time. Your thoughts can not be read as a passing reference but needs little more focus and involvement to undrstand and recall at will.
  Once again my best wishes and regards to you for your efforts behind such posts.
  Ethiraj

  ReplyDelete