தமிழ் மொழியை முன்னிறுத்திக் கொண்டு பின்னால் இருந்து குளிர் காயும் கயவர் கூட்டம் பெருகி விட்டது. இக்கூட்டத்தினர் அப்படி ஒன்றும் தமிழ் மீது ஆறாக் காதல் கொண்டவர்கள் அல்லர். தமிழின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்கள். ஏமாந்து போகிறவர்கள் இருக்கும் வரை இவர்களது பிழைப்பு கொடி கட்டிப் பறக்கும். ஏழேழு தலைமுறைக்கும் இவ்வகையில் பணம் சம்பாதித்தும் இவர்களுக்குப் பண வெறி அடங்கவில்லை. இதில் பலிகடா ஆக்கப்படுவது தமிழ் மொழியும் அதைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும் ஆவர்.
தமிழ் மொழி தொன்மையானது என்று இன்று மார் தட்டிக் கொள்வதற்கு மூல காரணமாகவும் ஆதாரமாகவும் விளங்குவன இதிலுள்ள பழம் பெரும் இலக்கியங்கள் என்பதை மறக்கலாகாது. இல்லாவிட்டால் மண்ணைத் தோண்டும் போது கிடைக்கும் பாண்டங்களை மட்டும் பார்த்துக் கொண்டு பண்டைத் தமிழர் நாகரீகம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ள முடியும். அழிந்தவை போக எஞ்சிய இலக்கியங்களை ஊர் ஊராகச் சென்று மீட்டெடுத்து அச்சிலேற்றிக் காப்பாற்றிக் கொடுத்தவருக்குக் கூட நன்றி செலுத்தாத அளவுக்கு சாதி ரீதியில் மக்களைப் பிரித்துப் பணம் கண்டவர்கள் தங்களைத் தமிழ்க் காவலர்கள் என்று கூறிக் கொள்வதையும் அதை நம்பும் மக்களையும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
தமிழை முறையாகக் கற்காதவர்களும் , அரை குறையாகப் படித்தவர்களும் மக்களது அறியாமையைப் பயன் படுத்தி ஏமாற்றுகிறார்கள். இதில் மயங்கிய மக்களோ அவர்களை அறிஞர்கள் என்று போற்றுவதும் சிலை வைப்பதும் பட்டங்களைக் கொடுப்பதுமாகத் தம்மைத் தாமே மேலும் ஏமாற்றிக் கொள்கிறார்கள். ழகரமும், லகர ளகரங்களும் பேசத் தெரியாததோடு மெல்லினத்திற்கும் வல்லினத்திற்கும் வேறுபாடு அறியாதவர்கள் அந்த அறியாமையைச் சுவரொட்டிகள் மூலம் வெளிப்படுத்துவது நகைப்புக்கு உரியது.
ஆன்மீக உலகிற்கு வெளியில் அநேகம் நடக்கக் கூடும். அது பற்றி விமர்சிப்பது நமக்கு நோக்கம் அல்ல. அதே நேரத்தில் தமிழ் அறிஞன் என்றும் சொற்பொழிவாளர் என்றும் சொல்லிக் கொண்டு சமயத்தைப் பிளவு படுத்துவதும் மக்களுக்குள் காழ்ப்பு உணர்ச்சிக்கு வித்திட்டு பணம் சம்பாதிப்பவனைக் கண்டிக்காமல் இருப்பது நியாயமாகாது. குற்றமும் ஆகும். அதைக் கடந்து விடுவது அன்னையை இழித்துப் பேசியவனைக் கடந்து போவதற்குச் சமம்.
வழக்கம் போலத் தன்னை மேதாவியாக நினைத்துக் கொண்டும், தமிழ்க் காவலன் போல எண்ணிக் கொண்டும் பிறரை இழித்து வருபனை மக்கள் நன்கறிவர். கண்டித்தும் வருகின்றனர். இருப்பினும் இவனுக்குத் துணை போகிறவர்களும் உண்டு. மக்களின் மந்தமான சமய அறிவு இவர்களுக்கு சாதகமாகி விடுகிறது. சமய நாட்டம் என்பது ஓரளவு இரத்தத்தில் ஊறி இருக்கவேண்டும். சமய நூல்களைக் கற்காவிடினும் வேடராகவே இருந்து முக்தி பெற்ற கண்ணப்பரை விடவா சிறந்த எடுத்துக்காட்டைக் கூற முடியும் ?
சமீப காலமாகவே நாத்திகர்களும் தமக்கு வேண்டுமென்றால் இராமானுஜரை அரவணைத்துக் கொள்வதைப் பார்க்கிறோம். நோக்கம் நிறைவேறிவிட்டால் அவரை விலக்கவும் தயங்குவதில்லை. இடத்திற்கு ஏற்பப் பேசுவதில் வல்லவர்கள் அவர்கள். மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். சமயச் சொற்பொழிவு செய்பவருமா இரட்டை வேடம் போட வேண்டும் ? அதுவும் தமிழின் பெயரில். பெரிய சீர்திருத்தம் செய்ய வந்தவரைப் போலப் பேசி மக்கள் மனத்தில் நஞ்சைத் தூவுவதும் ஒரு பிழைப்பா ?
சைவத்தில் இராமாநுஜரைப் போல எவரும் இல்லையாம். திருஞான சம்பந்தர்,திருநாவுக்கரசர் ஆகியோர் செய்த குல நல்லிணக்கம் பற்றி இவர் படித்ததில்லை போலும் ! பாணர் குலத்தில் உதித்த திருநீலகண்ட யாழ்ப்பாணரை, சம்பந்தப்பெருமான், தான் செல்லுமிடங்களுக்கெல்லாம் கூட அழைத்துச் சென்றதோடல்லாமல் பேதம் பாராமல் அக்னி ஹோத்ரம் செய்யும் இடத்திலும் கூடவே அமர்த்திக்கொண்டார் என்று பெரிய புராணம் கூறும். குலம் பாராது துன்பப்படுபவர்களின் துயரங்களை ஞான சம்பந்தர் தீர்த்து அருளியதை இவர் அறியாதது வியப்பினும் வியப்பு. எல்லாவற்றுக்கும் மேலாகத் தனது திருமணம் காண வந்திருந்த அனைவருக்கும் சிவலோக முக்தி வழங்கும் முன்பு நமசிவாயத் திருப் பதிகத்தை அனைவரும் கேட்கும்படி அருளியது, வந்தவர்கள் அனைவருக்கும் பாகுபாடன்றி பஞ்சாக்ஷர மகா மந்திர உபதேசம் செய்த கருணையேயாகும். இராமானுஜர் திருக் கோஷ்டியூரில் அங்கிருந்தவர்களுக்கு நாராயண மந்திரம் உபதேசம் செய்ததை மட்டும் அறிந்தவர்கள் சம்பந்தரது கருணையை அறியாதது ஏன் ?
திருநாவுக்கரசரை முன்னர் பார்த்திராத அப்பூதி அடிகள் என்னும் அந்தணர் அவர்பால் பக்தி பூண்டு தான் செய்யும் தரும காரியங்களுக்கெல்லாம் அப்பரின் நாமம் சூட்டிய வரலாறு அடியார்கள் சாதிப் பிரிவுகளைக் கடந்து நிற்பதற்கு வழி காட்டியதாக இவருக்குத் தோன்றவில்லையா ? முதலில் இவர் பெரிய புராணம் படித்து விட்டுப் பிறகு சொற்பொழிவு ஆற்ற வர வேண்டும்.
கோயில்கள் என்பவை அடியார்கள் தரிசிக்க ஏற்பட்டவையே ஆகும். வேதங்களால் வழிபடப்பெற்று மூடப் பெற்றிருந்த வேதாரண்யம் கோயிலை அப்பரும் சம்பந்தரும் தங்கள் தமிழ் மாலைகளால் மூடவும் திறக்கவும் செய்தனர் என்றால் வேதத்தையும் ஆகமங்களையும் அருளிய இறைவன் நாளும் தமிழிசை கேட்கும் விருப்போடு இருவரையும் பாடச் செய்தான் என்று கொள்ள வேண்டுமே தவிர, தமிழ் உயர்ந்ததா அல்லது வடமொழி வேதம் உயர்ந்ததா என்று சர்ச்சை செய்வதை உண்மைச் சைவர்கள் ஒருபோதும் விரும்பார்.
ஆழ்வாருக்காகச் சொன்னவண்ணம் செய்த பெருமாள் பாம்பணையைச் சுருட்டிக் கொண்டு கோயிலை விட்டுப் போய் விட்டதால் வேதத்தையும் ஆகமங்களையும் விடத் தமிழையே விரும்பினார் என்று சிண்டு முடியத் தெரியும் இவருக்கு அதன் தத்துவம் அறியாமல் போனதோடு அவ்வண்ணமே பிறருக்கும் தவறாகவே எடுத்துரைப்பது கண்டிக்கத்தக்கது. ஊருக்கு ஊர் சுவாமிக்குத் தேர் வேண்டாம் என்றும் உண்டியலில் பணம் போடச் சொல்லி பெருமாள் கேட்டாரா என்றும் பேசியவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் !
தமிழே உன்னால் வாழ்ந்தேன் என்று சொல்லி விடுவது எளிது. தமிழைச் சரிவரக் கற்காமலேயே, தமிழைப்போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பீற்றிக் கொள்வது அதை விட எளிது. இன்று தமிழ் மொழியிலுள்ள இலக்கியப் படைப்புக்கள் அதிக அளவில் சமயத்தைச் சார்ந்தே இருப்பதை மக்களிடம் சேர்க்காதது யார் குற்றம் ? இந்தப் பொறுப்பை ஏற்காமல் பணம் ஈட்டுவதற்காக மக்களை பிரிப்பது மட்டுமே தெரிந்தவர்களின் நாடகம் என்றாவது மக்களுக்குத் தெரிய வரும். அவ்வாறு நடைபெற்றால் மக்கள் இப்படிப் பட்டவர்களை ஒதுக்கித் தள்ளுவார்கள் என்பது நிச்சயம்.
அப்பர் பெருமானின் ஒரு பாடலை இங்கே நினைவ கூர்ந்து இப்பதிவை நிறைவு செய்வோமாக:
" சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து வான் ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போமல்லோம் மாதேவர்க்கே காந்தர் அல்லார் ஆகில்
அங்கமெல்லாம் அழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார்சடைக் கரந்தார்க்கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே. "
சங்க பதும நிதிகளைத் தந்து வானுலகையே ஆளத் தந்தாலும் அவர்களது செல்வத்தை மதிக்க மாட்டோம். அதே சமயம், உடல் அழுகித் தொழு நோயால் அவதியுறும் ஒருவன் கங்கையை சடையில் வைத்த சிவபெருமானுக்கு அன்பன் என்றால் அவனே நான் வணங்கும் கடவுள் என்கிறார் அப்பரடிகள்.
புலையனையும் தெய்வமென ஏற்கும் நிலையைச் சைவம் காட்டவில்லையா ? வைணவம் காட்டியது வெளிச்சத்திற்கு வந்தது போல் சைவத்தின் அருமை பெருமைகளைக் வெளிப்படுத்தாதது யாருடைய குற்றம்? பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகமே இருண்டது என்று நினைத்ததாம் !. அதே மனநிலைதான் சமயச் சொற்பொழிவாற்றியும் தெளிவு பெறாத சிலரது பரிதாப நிலை !
🙏
ReplyDeleteசிவ சிவ
ReplyDeleteசிறந்த ஆய்வுத் தொகுப்பு!
விதியிலார் பலர், இவர்கள் வலைகளில் வீழ்ந்து சீரழிகிறார்கள்!
நானும் பலமுறை எழுதிவிட்டேன் !
இறை இயக்கம்!
அமைதியாக நோக்குவோம் !