Wednesday, November 18, 2020

திருவிளையாடற் புராண வருணனைகள்

 

           திருவிளையாடற் புராண வருணனைகள்

                                         சிவபாதசேகரன்


அங்கயற்கண்ணி மணாளனாகிய சோமசுந்தரக் கடவுள் அடியவர் பொருட்டாக ஆற்றிய திருவிளையாடல்களைப் பரஞ்சோதி முனிவர் வடமொழியினின்றும் அழகு தமிழில் அமைத்து வழங்கியுள்ளார். புராணம் என்பது பழமையைக் குறிப்பது. கயிலையில் சிவபெருமான் உமாதேவிக்கு அருளியதை  உடன் இருந்து கேட்ட முருகவேள், பெருமானது திருவிளையாடல்களை  அகத்திய முனிவர்க்கு உரைத்தருளியதாக இந்நூல் கூறும். இதனைக் கற்போருக்குப்  பக்திச் சுவையும்  இலக்கியச் சுவையும் வழங்கிப் பரவசப்படுத்தி, ஆலவாய் அண்ணலது அலகில் கருணைக்கு ஆற்றுப்படுத்துவது இப்புராணம்.

“ பாண்டி நாடே பழம்பதி யாகவும் “ என்பார் மாணிக்க வாசகர். அப்பாண்டி நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் பலவற்றுள் வைகை நதியும் தாமிர பரணி ( பொருநை  ) நதியும் குறிப்பிடத்தக்கவை. இப்புராணம் , பொருநை நதியின் வளத்தையும், பெருமையையும் ஒருங்கே அழகுற வருணிக்கிறது.

பொருநையை ஒரு ஆறாக மட்டும் நோக்காமல் ஒரு பெண்ணாகவே உருவகிக்கும் ஆசிரியரது திறம் வியந்து பாராட்டுதற்குரியது.பொதிய மலையாகிய மலை மடந்தை, பொருநையாகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தது போல் இருக்கிறதாம் அம்மலையிலிருந்து உற்பத்தியாகும் தாமிர பரணி ஆறு. அந்த ஆறாகிய குழந்தை தவழ்ந்து வரும்போது,  உழவர்கள் எழுப்பும் ஒலியைக் கேட்ட வண்ணம் வளர்ந்து வருகையில் அவர்கள் பயிரிட்ட மாந்தளிர்கள் போன்ற நிறம் உடையவளாகவும், கூந்தற்பனை மடலைப் போன்ற கூந்தலை உடையவளாகவும் மங்கை உருவாகி அருகிலுள்ள சோலைகளிலிருந்து விழும் மலர்களை அணிந்து, அடித்து வரப்படும் சந்தனம், அகில்,கஸ்தூரி ஆகியவற்றைப் பூசி, நிறைவாகத்  மணாளனாகிய கடலை அடைகிறது என்பது வருணனை.

ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்கள் உள்ளன. ஆற்றில் அடித்து வரப்படும் சந்தனம் போன்ற திரவியங்களைக் கரைகளில்   ஒதுக்கி  , சிவபிரானுக்கு அபிஷேகம் செய்யும் பக்தர்களைப் போன்று அந்நதி விளங்குகிறதாம். இரு மருங்கிலும் வயல்களை வளப்பம் செய்து உணவிடுவது, சிவ பெருமானுக்குத் தாருகாவன முனி பத்தினிகள் அன்னமிட்டது போலத் தோன்றுகிறதாம்.

சில இடங்களில் ஆறு கலங்கி ஓடும் . சில இடங்களில் தெளிவாக ஓடும். அது எப்படி இருக்கிறது என்பதை ஆசிரியர் விளக்குவதைக் காண்போம். சிவபெருமானே எங்கும் நீக்கமற நின்ற முழுமுதற்கடவுள் என்றும், முக்தி அடைவதற்கு விபூதி முதலிய சாதனங்களே துணையாவான என்றும், வேதம் முதலிய கலைகளைக் கற்று அவ்வழி நிற்பதே நன்னெறி என்பதை  அறிந்தும் தெளிவு பெறாமல் சிந்தை கலங்கியவர்களைப் போலத்           தாமிரபணி சில இடங்களில் கலங்கி ஓடுகிறாள். பின்னர், சைவ நெறி பற்றிய அறிவு விளக்கம் பெற்ற பெரியோர்களது சிந்தையைப் போலத் தெளிந்து ஓடுகிறாள் பொருநை .      

மற்றுமோர் வருனனையையைப் பார்ப்போம். வானளாவி நிற்கும் பொதியமலை சிவபெருமானை நினைவூட்டுகிறது. அது மட்டுமல்ல. அந்தப் பெருமான் யானையை உரித்துப் போர்த்தான் அல்லவா ?        பொதிகையைச் சூழ்ந்துள்ள கரிய மேகங்கள் அந்த யானையின் தோலைப் போல இருக்கிறன . மேகத்தின் மழைத்துளிகள், அந்த யானை  உதிர்த்த இரத்தத்தையும் வானத்தில் வளைந்து காணப்படும் இந்திரவில், குருதி படிந்த யானைத் தந்தத்தையும் ஒத்து விளங்குகிறது.

பாண்டிய நாட்டின் சிறப்பைக் கூறும்போது ஒரு அழகிய வருணனை இருக்கக் காண்கிறோம். உலகம் திருமாலின் வடிவம் என  விளங்குகிறது. அவரது உந்தியில் விளங்கும் தாமரை போன்றது பாண்டிய நாடு. அம்மலரில் வீற்றிருக்கும் நான்முகனைப் போன்றவர் பொதியையில் வாழும் அகத்திய முனிவர். பிரமனிடம் வெளிப்பட்ட வேதத்தைப் போன்றது, அகத்தியர் போற்றி வளர்த்த தமிழ். அப்பொதிகையில் விளைந்த தென்றல் காற்றை நுகரவும்,  பைந்தமிழ்ப் பாடல்களை செவி மடுக்கவும் சிவபெருமான் விரும்பினான் போலும் ! முன்பு பாணினிக்கு சம்ஸ்க்ருத வ்யாகரணத்தை அருளிச் செய்த சிவபரம்பொருள், பொதிகையில் அகத்தியருக்குத் தமிழ் இலக்கணத்தை அறிவுறுத்தினான்.

இறைவன் ஒருவன் இல்லை என்னும்  நாத்திகர்களின் நாவை அறுக்கும் வாள் போன்ற வேதத்தை முழுதுமாக ஓதி, தெளிந்த மனத்தராய் , முத்தீ வளர்க்கும் மறையவர்களது இல்லங்களில் பலாசக்  கோலை ஏந்தும் மறைச் சிறுவர்கள் மறை பயில்வதை உடனிருந்து கேட்கும் கிளிகள் அம்மறைகளைத் தாங்களும் கூறுமாம். அக்கிளிகள் வேற்றிடங்களுக்குச் சென்று இரை  தேடும் போதும் அம்மறைகளை ஓதுவதால் அங்கிருக்கும் நாகணவாய்ப் பறவைகளும் அவற்றைக் கற்று, அவற்றை வானுலகிலுள்ள கிளிகளுக்கும் கற்பிக்குமாம். இப்படிச் செல்கிறது வருணனை.

அணி என்பதற்குச் சூட்டிக்கொள்வது, அலங்காரம் செய்வது என்று பொருள்கள் கூறப்படுகின்றன. பொதுவாகச் சொன்னால் அணிந்து கொள்ளும் அனைத்துமே அணி என்றாலும் ஆபரணங்களுக்கும், மாலை,உத்தரியம் ஆகியவற்றுக்கும் இது அதிகமாகவே பொருந்தும்.  அதே சமயத்தில் இறைவனுக்கும் தமிழ் மொழிக்கும் சார்த்தப்படும் பாமாலைகளையும் அணியாகவே கொள்கிறோம். தே + ஆரம் என்பது தேவாரம் ஆகி, சிவபிரானுக்குச் சார்த்தப்படும் பாமாலையாகிய அணிகலன் ஆயிற்று.  தொண்ணூற்று ஆறு வகைப் பிரபந்தங்களைப்  புலவர் பெருமக்கள் தமிழன்னைக்கு அணிகலன்களாக  அணிவித்தனர். தமிழ் இலக்கணம் பயில்வோர் மகிழும் வகையில் ,  கற்பனைக் களஞ்சியங்களாகத் திகழ்ந்த ஆன்றோர்கள் , உவமையணி, தற்குறிப்பேற்ற அணி ஆகிய நயம் மிக்க பகுதிகளைத்  தமிழ் கூறு நல்லுலகிற்கு வழங்கியுள்ளனர்.

எடுத்துக்காட்டாகத் திருவிளையாடற் புராணத்தில் இடம்பெறும் தற்குறிப்பேற்ற அணியை இங்கு எண்ணலாம்.

மலயத்துவஜனது வேள்வியில் எழுந்தருளிய தடாதகைப் பிராட்டியார் , எல்லா மன்னர்களையும் திக் விஜயம் செய்து வெற்றி கொண்டபின் நிறைவாகக் கயிலைக்கு எழுந்தருளினார். தன்னை விட்டு நீங்கிய பார்வதி தேவியார் மீண்டும் வருவதைக் கண்ட கயிலை மலையானது ஆனந்தக் கண்ணீர் விட்டதாம். அந்த ஆனந்தக் கண்ணீர் அருவி போல் பெருகி ,        அன்னையே வா “ என்பது போல் அங்குள்ள அருவிகள் ஒலியை  எழுப்பினவாம். அவ்வெள்ளியங்குன்றில் தோன்றிய ஒளியானது புன்முறுவல் போல் விளங்கிப் பிராட்டியை இன்முகத்தோடுத்  தழுவி எதிர்கொள்வது போல இருந்ததாம். இயல்பாக நடைபெறும் செயல்களும் நிகழ்வுகளும் இத்தகைய வருணனைகளால் புலவரது உள்ளக் குறிப்பால் ஏற்றம்  பெற்றுத் தற்குறிப்பேற்ற அணியாக ஆகி விடுகின்றன. மலையிலிருந்து அருவிகள் வீழ்வதும், ஓசை எழுப்புவதும், கதிரவன் ஒளியில் மலை ஒளிர்வதும் இயல்பாக நடப்பனவாகும். இவை யாவும் அன்னையை வரவேற்பது போன்று உள்ளது என்று பரஞ்சோதி முனிவர் தற்குறிப்பை ஏற்றி அணியாக்கிய பாடலைக் கண்டு இன்புறுவோமாக:

“ வானார் கயிலை மலையான் மகள் தன்னை நீத்துப்

போனாள் வந்தாள் என்று அருவிக் கட்புலனுக்கு அந்நீர்

ஆனா ஒலியால் “ அ(ன்)னை வா “ என்றழைத்துத் தன தேசு

தானாம் நகையால் தழிஇ எதிர் ஏற்பச் சென்றாள்.”

தனது வெண்ணகை (போன்ற) ஒளியால் அன்னையைத் தழுவி அம்மலை வரவேற்றது என்பதைத் தழிஇ என்று அளபெடையாக அமைத்துள்ளதும் கற்போர்க்கு விருந்தாவதாம்.    

1 comment:

  1. தங்கள் பதிவும் வாசகர்களுக்கு விருந்தே தான். அருமையாக'விருந்த'து.

    அன்புடன் தேசிகன்.

    ReplyDelete