Wednesday, October 28, 2020

             சோற்றுத்துறை சென்று அடைவோமே                                                  

                                                      சிவபாதசேகரன்


                                                                                 திருச்சோற்றுத்துறை சிவாலயம் 

“ சோழ நாடு சோறுடைத்து” என்பார்கள். இங்கு சோறு என்பது உண்ணும் உணவை மட்டும் குறிப்பதன்று. மோக்ஷம் என்றும் பொருள் தரும். சண்டிகேசுவரரின் செயல் உலகரீதியில் நோக்கினால் பாதகமானாலும் அதுவே அவருக்கு மோக்ஷமாகிய சிவபதத்தைக் கொடுத்தருளிற்று. எனவே,இதனைக் குறிப்பிட்ட மாணிக்கவாசகர், “ பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்” என்கிறார். தனதடி வழிபடுவோர்க்கு ஞானமும் வீடுபேறும் தருபவன் பரமேசுவரன். இப்பிறவியில் உயிர் வாழத் தேவையான சோற்றையும் அளித்தருளுகிறான். பசித்திருந்த அப்பருக்கும் சுந்தரருக்கும் பொதி சோறு கொண்டு வந்து பசி தீர்த்தான் என்று பெரிய புராணத்தால் அறிகிறோம்.

சோழ நாடு ஒரு புண்ணிய பூமி. சிவராஜதானியும் கூட.  மூவர் தேவாரம் பெற்ற 274 தலங்களுள் 190 தலங்கள் சோழநாட்டில் உள்ளன. அவை ஞானத்தையும் மோக்ஷத்தையும் ஒரு சேரத் தரவல்ல மகிமை உடையவை. சோழ அரசனைப் புனல் நாடன் என்றும் பொன்னி நாடன் என்றும் கூறுவது மரபு. தனது  நாட்டு மக்களுக்கு என்றும் குறைவுபடாத வகையில் நெல்லை விளைவித்தும் சிவஞான முக்தியையும் தரும் ஒப்பற்ற கடவுளுக்கு நன்றி செலுத்தும் முகமாக சோழ நாடெங்கிலும் சிவாலயங்களை எழுப்பியும் திருப்பணி செய்தும் சோழ மன்னர்கள் மகத்தான தொண்டாற்றினார்.

பரம ஞானிகளோ உண்டு உடுத்து இருப்பதை விரும்பார். “ உண்டு உடுத்து இருப்பதானேன் போரேறே” என்பது திருவாசகம். மீண்டும் ஒரு பிறவி ஏற்பட்டு நெல் சோற்றை உண்டு உடலைக் காப்பதே கடனாகக் கொள்வதை அவர்கள் விரும்பவில்லை. அவ்வாறு அவர்களைப் பிறவியிலிருந்து காத்து, நெற் சோறு  உண்ணாமே காக்க வல்ல காவலனைப் பாடும்போது, சாக்கிய நாயனாரது சரிதையையும் உடன் மொழிவார் அப்பர் பெருமான். கல்லை எறிந்து வழிபடும் சாக்கியரை விசும்பு ஆள வைத்த சிறப்பைக் கூறுமிடத்தில்,

“ கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உண்ணும் சாக்கியனார்

நெல்லினால் சோறு உண்ணாமே நீள்  விசும்பு ஆள வைத்தார் “

 என்பார்.

“அன்னாநாம் பதயே நமோநமோ ‘ என்கிறது ஸ்ரீ ருத்ரம். அன்னத்தைத் தந்தருளுவதால் அதற்குத் தலைவனான சிவபெருமானுக்குப் பலமுறை நமஸ்காரம் என்று வெளிப்படையாகப் பொருள் கூறலாம். அப்பெருமான் அன்னத்திற்குப் பதியாக மட்டுமல்லாது அன்ன வடிவினனாகவே இருக்கிறான் . அவன் தந்த கொடையை அவனுக்கே அறிவித்து அதனையே சிவப்ரசாதமாக நாம் கொள்கிறோம். எவ்வளவோ நைவேத்தியங்கள் இருப்பினும் இதை மஹா நைவைத்தியம் என்கிறோம். அதிலுள்ள ஒவ்வொரு பருக்கையும் ஓர் சிவலிங்கமே. அதனை நினைப்பூட்டும் வகையில் பழங்காலந்தொட்டு சிவாலயங்களில் ஐப்பசி மாதப் பௌர்ணமியில் சிவலிங்கப் பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. தில்லையில் ஸ்படிக லிங்க மூர்த்திக்குத் தினமும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

திருவையாற்றின் சப்த ஸ்தான தலங்களில் திருச் சோற்றுத்துறையும் ஒன்று. சித்திரை மாதத்தில் ஐயாறப்பர் இங்கு எழுந்தருளும்போது வந்தோர் அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்படுகிறது. பஞ்ச காலத்தில் ஒரு ரிஷியானவர் இங்கு ஆசிரமம் அமைத்துக் கொண்டு, இத்தலத்து இறைவனது அருளால் வந்திருந்த அனைவருக்கும் பசியாற்றி வந்தார் என்பது தல வரலாறு. எனவே சுவாமிக்கு ஒதனவநேச்வரர் என்றும் அம்பிகைக்கு அன்னபூரணி என்றும் பெயர்கள் இன்றும்  வழங்கப்படுகின்றன.  ஓதனம் என்றால் உணவைக் குறிக்கும் .


சிவ பக்தனான அருளாளன் என்ற அந்தணன் தன் மனைவியுடன் இங்கு வந்தபோது சுவாமி அவர்களுக்கு எடுக்க எடுக்கக் குறையாமல் அன்னம் வழங்கும் அக்ஷய பாத்திரம் ஒன்றைத் தந்தருளியதாகத் தல வரலாறு மூலம் அறிகிறோம். காவிரிக் கரையில் உள்ள இந்த அற்புதமான தலத்தை மூவரும் தேவாரம் பாடியுள்ளார்கள். சப்த ஸ்தானங்களில் மூவர் பதிகங்களும் கிடைக்கும் தலங்கள் திருவையாறும் திருச்சோற்றுத்துறையும் மட்டுமே. திருவையாறு மற்றும் தஞ்சாவூர் அன்பர்கள் அடிக்கடி இங்கு சென்று வழிபடலாம். டாக்டர் உ.வே.சா. அவர்களின் ஆசிரியப்பிரானான திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய ப்ரபந்தம் ஒன்றில், நாம் தினந்தோறும் உணவு உண்ணுகையில் சோற்றுத்துறையை நினைவு கொள்ள வேண்டும் என்று உபதேசிக்கிறார். எனவே உண்பதன் முன்னர் , அந்த  உணவை ஒதனவநேசுவரரும் அன்னபூரணியும் தந்தருளியதாக எண்ண வேண்டும் என்பது பெறப்படும்.

அன்னாபிஷேகம் செய்த அன்னத்தை நீர் வாழ் உயிரினங்களுக்கும் அளிப்பது வழக்கம். எல்லா உயிர்களுக்கும் இறைவன் படியளக்கிறான் என்ற தத்துவம் இதன் மூலம் அறியப்படுகிறது.

இந்த ஆண்டு அன்னாபிஷேகத்தை வரும் வெள்ளியன்று(30.10.2020) அன்று செய்வதா அல்லது (31.10.2020)சனிக்கிழமையன்று செய்வதா என்று சிலரிடையே குழப்பம் இருப்பதாக அறிகிறோம். பௌர்ணமியும் அசுவினி நக்ஷத்திரமும் அன்றையதினத்தில் ( அபிஷேகம் செய்கையில்) இருக்க வேண்டும் என்பது பொதுவான விதி. இவ்வாண்டில் வெள்ளியன்று பௌர்ணமி மாலை ஏழு மணி அளவில் வருவதால் அதற்கு முன்பாக , அதாவது சதுர்த்தசி இருக்கும்போதே செய்வதா என்பது கேள்வி. ஆனால் ஏழு மணிக்கு மேல் திதி ,நக்ஷத்திரம் இரண்டும் இருந்தாலும் அபிஷேகத்தை ஏழு மணிக்கு ஆரம்பித்தால் நிறைவடைய சுமார் ஒன்பது மணி ஆகி விடும். அதற்குப் பிறகு அலங்காரத்தைக் கலைத்து விட்டு அபிஷேகம் செய்து அர்த்த ஜாமம் செய்தால் வெகு நேரமாகி விடும்.  

 ஆனால் சனிக் கிழமை மாலை சுமார் ஏழு மணி வரை அசுவினி, பௌர்ணமி ஆகிய இரண்டும் இருப்பதால், அன்னாபிஷேகத்தை மதியம் மூன்று அல்லது நான்கு மணிக்கு ஆரம்பித்தால் மாலை ஆறு மணிக்கு பக்தர்கள் தீபாராதனையைத் தரிசிக்க எதுவாக இருக்கும் என்பது சிலரது அபிப்பிராயம். கங்கை கொண்ட சோழபுரத்திலும் சனியன்றே நடைபெறுவதாக அறிகிறோம். கற்றறிந்த பெரியோர்கள் சிவாகமம் கூறுவதை ஒட்டித் தங்கள் அபிப்பிராயத்தை அனைவருக்கும் அறியத் செய்வது நல்லது.

நிறைவாக ஒரு வார்த்தை. நடராஜர் அபிஷேகம் என்பது சிதம்பரத்தை ஒட்டி நடைபெறுவதுபோல் அன்னாபிஷேகம் என்பது திருச்சோற்றுத் துறையை முன்னோடியாக வைத்து நடைமுறைப் படுத்தலாம். ஒரே பஞ்சாங்கத்தில் இரு தினங்களும் அன்னாபிஷேகம் என்பது போன்ற செய்திகளால் குழப்பம் விளையாமல் இருக்கும். இவ்வாண்டு, திருச்சோற்றுத்துறையில் வரும் சனிக்கிழமை பகலில் அன்னாபிஷேகம் நடைபெற்று,மாலையில் தீபாராதனைகள் நடைபெறுவதாக அறிகிறோம்.  “ அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே” என்று அம்மையப்பரின் இத்தலத்தைச் சென்று வழிபட்டு உய்வோம் என்று ஞானசம்பந்தர் நமக்கு உய்யும் நெறி காட்டியுள்ளார்.

தீய வினைகளைச் செய்ததன்  பலனாக நோய்களால் துன்புறுகிறோம். அக் கொடிய நோய்களால் தாக்கப்பட்டு மனத்தாலும் உடலாலும் தளர்ச்சியடையும் போதாவது இறைவனது நினைவு வர வேண்டும். வேதமும் கலைகளும் பிற தோத்திரங்களும் இளமையிலிருந்தே கல்லாமலே காலம் கழிந்து விட்டபடியால் இப்போதாவது அவனை அபயமாகச் சரணடைய வேண்டும். கற்பகக் கொழுந்தான அக்கடவுள் சந்திரனுக்கு மட்டுமல்லாது நமக்கும் அடைக்கலம் அளித்து அபயம் தர வல்லவன். உற்றார் எவரையும் இல்லாமல் தானே எல்லாவற்றுக்கும் மூல காரணனாய் ஆகி, அனைத்துக் கலைகளுக்கும் பிறப்பிடம் ஆகி, உலகோரால் வழிபடப்பெறும் சோற்றுத்துறையில் எழுந்தருளியுள்ள ஒளி  மயமான பரசிவத்தைப் பணிந்து அவனுக்குப் பணி செய்து அவனது தாளில் அபயம் அடைவதே நாம் உய்யும் வழி என்று அப்பர் சுவாமிகள் இத்தலத்தில் அருளிய திருத்தாண்டகப்பாடல் ஒன்றை இங்கு தருகின்றோம்:

முற்றாத பால் மதியம் சூடினானே

முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே

உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே

உலகு ஓம்பும் ஒண்சுடரே ஓதும் வேதம்

கற்றானே எல்லாக் கலை ஞானமும் கல்லாதேன்

தீவினை நோய் கண்டுபோகச் செற்றானே

திருச்சோற்றுத்துறை உளானே திகழொளியே

சிவனே உன்  அபயம் நானே.

என்ற பாடலை உணர்ந்து மனமுருகிப் பாடி உலக நன்மைக்காக வேண்டுவோமாக.

5 comments:

  1. சோற்றுத்துறை சென்று அடைவோமே என்று திருஞான சம்பந்தர் பாடல்களிலிருந்து ஓர் வரியையும், முற்றாத மதியம் சூடியவன் பெருமையை அப்பர் பெருமான் பரக்கப் பாடியிருக்கும் அழகு நிறைந்த முழுப் பாடலையும் தந்தருளியமைக்கு நன்றி. இப்பாடலில் ஐந்தாவது வரியில் 'எல்லாக் கலை ஞானமும் கல்லாதேன்' என்ற சொற்களை விளக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
    அன்புடன் தேசிகன்.

    ReplyDelete
    Replies
    1. வேதம், எல்லாக் கலை ஞானமும் கற்றானே என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். கல்லாதேன் தீவினை நோய் கண்டு போகச் செற்றானே என்று அப்பர், தன்னைக் கலைஞானம் எதும் கற்காததால் தீவினை நோயில் வீழ்ந்ததாகக் கூறி பெருமானிடம் அபயம் வேண்டுகிறார்.

      Delete
    2. Thank you very much. I must have been really sleepy not to have read the sequence properly. Let me once again express my happiness in getting to learn about this punyasthalam.
      Desikan

      Delete
  2. திருச்சோற்றுத்துறை சம்ப்ரதாயங்களை அன்னாபிஷேகத்திற்கு வழிகாட்டியாக கொள்ளலாம் என்பது கவனிக்க வேண்டியது. தீபத்துக்குத் திருவண்ணாமலையைப் பலரும் பின்பற்றுகிறார்கள்.

    ReplyDelete