Wednesday, December 9, 2020

பாதமே துணை

 

                                                       பாதமே துணை             

                                                                           சிவபாதசேகரன்


                                                                                              மாணிக்கவாசகர் 


நாம் யாரைச் சார்ந்து வாழ்கிறோமோ அவர்களது பழக்க வழக்கங்கள் நம்மை வந்தடைகின்றன. உலகில் நல்லவர்களாக வாழ, நல்லவர்களின் துணையும் வழிகாட்டுதல்களும் தேவைப் படுகின்றன. குடும்பத்திலுள்ள நற்பண்புகளிலிருந்து துவங்கி வெளியில் பழகும் வரை நல்ல பழக்கம் ஏற்பட இது வகை செய்கிறது. அது இல்லாதவனைப் “பழக்க தோஷம்” உள்ளவனாக அடையாளப்  படுத்துகிறோம். ஆணவம்.கன்மம்,மாயை ஆகியவற்றின் வசப்படும் உயிர்கள் தாமே உயர்கதி அடைய சக்தியற்ற தன்மையால் இறைவனது கருணையால் மட்டுமே உய்யப்பெறுகின்றன. பாசத்தோடு கட்டுண்ட பசுக்களாகிய உயிர்கள் பதியின் துணையினால் உய்யப்பெறுவதை சித்தாந்த நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.

உலகைப் படைக்கும்போதே உயிர்களின் பக்குவத்திற்கேற்றபடி கருணை பாலிப்பதால் தனிப் பெருந்துணையாக இறைவன் விளங்குவதை ,              “ எனக்கு ஆர் துணை நீ அலதே “ என்ற திருமுறை வாக்கால் அறிகிறோம். உயிர்களுக்கு உருவத்தைத் தந்த ஈசனே அவற்றின் அங்கங்கள் யாவும் அவனை வணங்கிப் போற்றுவதற்காக அமைத்து,  உய்யும் வழியைக் காட்டியுள்ளான். தானும் ஓர் உருவெடுத்து முன்வந்தருளி சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்த்துகிறான். சீவன் சிவனை அடையாளம் கண்டவுடன் சிவ சம்பந்தமாகி, பழக்கமும் அவ்வுயிர்க்கு  ஏற்பட்டுவிடுகிறது. சிவ புண்ணியத்தை ஈட்டிய உயிர்களுக்கு இப்பழக்கம் பணி செய்வதன் மூலம் சித்திக்கிறது. சித்த மலம் அறுபட்டுச்  சிவமாகிறது. இதற்கு எதுவாக அமையும் முதற்கட்ட வழிபாடே உருவ வழிபாடு.

உருவ வழிபாட்டில் முதலிடம் பெறுவது, அவ்வுருவத்தின் பாதமே கதி என்று பணி செய்வதாகும். “ திருவடிக்கு ஆம் பவமே அருளு கண்டாய் “ என்பது திருவாசகம். பாதாதி கேசமாகத் திருவுவைப் பெரியோர் வணங்குவர். திருவடிகளைக் காண்பதை  ருத்ர பாத தரிசனம் என்று திருவாரூரில் அழைப்பார்கள். “ எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே “ என்பார் அப்பர் சுவாமிகள். ஆலயங்களில் அர்ச்சனைகளும் அப்பொன்னடிக்கே செய்யப்படுகின்றன. பிரார்த்தனையும் பொன்னடிக்குச் செய்யப்படுவதை, “ பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் “ என்ற அப்பர் வாக்கால் அறிகிறோம்.

தீக்ஷா கிரமங்களில் திருவடி தீக்ஷை முக்கியத்துவம் வாய்ந்தது. இறைவனே குருவாக எழுந்தருளித் திருவடியைச் சிரத்தின் மீது வைத்தருளுவது அருளாளர்களுக்கே வாய்க்கும். சுந்தரர் துயின்று கொண்டு இருந்தபோது இறைவன் அவரது முடியில்  திருப்பாதத்தைச் சூட்டி அருளியதும், நல்லூரில் நாவுக்கரசருக்குத் திருவடி சூட்டியதும், பெரிய புராணம் நமக்கு அறிவிக்கும் செய்திகளாகும்.  “ திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் “ என்ற அப்பரது தேவார வாக்கு இதற்கு அகச் சான்றாக அமைகிறது. வைணவக் கோயில்களில் சடாரி சார்த்தப்படுவது போலவே நல்லூரிலும் சேவார்த்திகளின் சிரத்தில் திருப் பாதம் சார்த்தப்படுகிறது. 

இன்னம்பர்,திருவையாறு ஆகிய தலங்களில் அப்பர் பெருமான் அருளிய பதிகங்கள் பலவற்றுள் திருவடியைப் பாடல் தோறும்  போற்றுவதாக அமைந்துள்ளன. திருவதிகை வீரட்டத்துப் பதிகங்களில் ஒன்று திருவடித் திருத்தாண்டகம் என்பதாகும். அதில் ஒவ்வொரு வரியிலும் அப்பரடிகள்  சிவ பெருமானின் திருவடிகளைப் போற்றுவதாக உள்ளது அறிந்து இன்புறத்தக்கது. அதில் ஒரு பாடலை இங்குக் காணலாம்:

“அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி

அருமறையான் சென்னிக்கு அணியாம் அடி

சரவணத்தான் கை தொழுது சாரும் அடி

சார்ந்தார்கட்கு எல்லாம் சரணாம் அடி

பரவுவார் பாவம் பறைக்கும் அடி

பதினெண் கணங்களும் பாடும் அடி

திரைவிரவு தென் கெடில நாடன் அடி

திரு வீரட்டானத்து எஞ் செல்வன் அடி. “

{ அரவணையான்- பாம்பணையில் துயிலும் திருமால்; அருமறையான்- பிரமன்; சென்னி-சிரம்; சரவணத்தான்-முருகன்; சார்ந்தார்கட்கு – தன்னைச் சரண் என்று சார்ந்தவர்களை; பரவுவார்-துதிப்பவர்கள்; கெடில நாடன் – கெடில நதி அருகே கோயில் கொண்டுள்ள திருவதிகைப் பதி }

இப்பதிகத்தில் இறைவனது திருவடி, காலனைக் காய்ந்தது, அரக்கனான இராவணனின் ஆற்றலை அழித்தது, கணக்கு வழக்கைக் கடந்தது, அழகு எழுத முடியாத அருட் சேவடி, உரு என்று உணரப்படாத அடி, உரையால் உணரப்படாத அடி, மந்திரமும் தந்திரமும் ஆய அடி, மருந்தாய்ப் பிணி தீர்க்க வல்ல அடி என்றெல்லாம் திருவடியைப் பலவாறு போற்றுகின்றார் தாண்டக வேந்தராகிய அப்பர் பெருமான்.  

திருவடிகளே ஆதியும் அந்தமும் ஆவன.அவையே பல்லுயிர்களின் தோற்றத்திற்கும், போகத்திற்கும், மறைவுக்கும் கார்ணமாவன. திருமாலும் பிரமனும் காணாத அத்  திருவடிகளே நம்மை ஆட்கொண்டு அருளுவன. இவை அனைத்தையும் ஒரே பாடலில் தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்க வழங்குகிறது மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல். அப்பாடலின் மற்றுமோர் அழகாவது அத்திருவடிகளின்  வருணனையே. அதனைப் , பாதமலர், செந்தளிர்கள்,பொற்பாதம், பூங்கழல்கள், இணை அடிகள், புண்டரீகம் ஆகிய சொற்களால் சொற்பதம் கடந்த தொல்லோனுக்குச்  சொன்மாலை அணிவித்து அகமகிழ்கிறார் மாணிக்கவாசகர்:

“போற்றி அருளுக நின் ஆதியாம் பாத மலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். “

“ கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் “ என்ற அப்பர் வாக்கும் இங்கு சிந்தித்தற்குரியது.

2 comments:

  1. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்று தமிழ் மூதாட்டி என்றோ சொல்லிப் போயிருக்கிறார். இறைவனின் பொற்பாதங்களின் பெயரே தொண்டர்களையும் சாருகிறதல்லவா? அன்னாரை அடியார் என்றுதானே போற்றுகிறோம்?வைணவத்திலும் ஆழ்வார் பெருமானான நம்மாழ்வாருக்கும், இறைவன் திருவடி நிலையாக நம் தலையில் அமரும் சடாரிக்கும் ஒரே பெயரும் பதவியும் அளிக்கப் பட்டிருக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. இறைவனின் அடியைச் சேர்ந்ததால் அடியார் என்று இறையடியார்கள் அடையாளப் படுத்தப்படுகின்றனர் என்பது அற்புதமான விளக்கம். பிறவிப் பெருங்கடலை நீந்துபவரே அடியார்கள் என்பதையும், அவ்வாறு நீந்தாதவர்கள் இறைவனடி சேராதார் என்றும் திருவள்ளுவர் அருளியதை நினைவு கூறலாம். பாதுகா சஹஸ்ரம் என்ற நூலும் அப்பாதங்களின் பெருமையையே கூறுகிறது.சைவ-வைணவங்களுள் சித்தாந்த ரீதியில் வேற்றுமை காணப்பட்டாலும்,இவ்விரண்டின் அணுகுமுறையும் ஒன்றே. வேத நதியின் இரண்டு பெரிய உப நதிகள் இச்சமயங்கள். இரண்டுமே சேருமிடம் ஒன்றுதான்.

      Delete