“இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு புத்தி கூர்மை அதிகம்.” என்றார் ஒரு நண்பர். ஒரு விதத்தில் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். அவர்கள் வளரும் சூழ்நிலையும் கல்வி கற்கும் முறையும் காரணம் எனலாம். ஒரு தலைமுறைக்கு முன்பாகப் பள்ளிக் கூடங்களுக்குக் குழந்தைகளை அனுப்பாததற்கு முக்கிய காரணம் கட்டணம் செலுத்த இயலாமையே. அந்தக் கவலையைப் போக்கி அரசாங்கமே முன்வந்தபோது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் துவங்கினர். மதிய உணவுத் திட்டமும் மாணவர் சேர்க்கைக்குத் துணை புரிந்தது. இப்படி மாணவர்களைச் சேர்த்த பிறகும் ஆங்கிலப் பாடங்கள் ஆறாம் வகுப்பு முதலே துவங்கியது. ஆங்கிலமும் கணிதமும் அக்காலத்தில் வேப்பங்காயாக இருந்தன.
தமிழின் துணை கொண்டே ஆங்கிலப் பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
அப்போதும் மாணவர்களிடையே குழப்பமே மிஞ்சியது. மொழியாக்கம் செய்யும்போதும் தடுமாறினர்.
இரு மொழிகளையுமே சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லை.
இந்நிலையில் மாணவர்களிடையே நகைச்சுவை நிரம்பிய மொழியாக்கங்களும் உண்டு. தமிழாசிரியர்
கூட்டிப் பொருளுரைத்தலைப் பற்றிப் பாடம் எடுத்துவிட்டுச் சென்றபின் மாணவர்களின்
மொழியாக்கம் வகுப்பைக் கலகலக்கச் செய்யும்.
ஒருவன் மற்ற மாணவர்களைப் பார்த்து, “ பிள்ளையார் கோயில்
உப்புமா ஊசிப் போச்சு “ என்பதை மொழி பெயர்க்க முடியுமா” என்பான். குறும்புத்தனமான
ஒரு பையன் உடனே, “ Sun Who Temple Salt Flour Needle Gone”
என்பான். வகுப்பறையே சிரிப்பில் ஆழ்ந்து
விடும்.
அதே
மாணவன் மீண்டும், “ It, but, what, meaning” ஆகிய சொற்களை வைத்து ஒரு வார்த்தை சொல்ல
முடியுமா ? “ எனக் கேட்பான். மீண்டும் அக்குறும்புப் பையன், “ It
அது but ஆனால் what என்ன meaning அர்த்தம்” என்று சர வெடியைக் கொளுத்திப்
போடுவான். மூன்றாவதாக ஒருவன், “ நமது ஆசிரியர் , வடமொழிக் கீர்த்தனை ஒன்றை சொல்லி
அதில் வரும் “ த்யாகராஜ யோக வைபவம்” என்ற வார்த்தையை , ராஜ யோக வைபவம்,
யோக
வைபவம், வைபவம்,பவம்,வம் என்று சாதுர்யமாகக் கையாண்டு இருப்பதையும் அதை சங்கீத
வித்வான்கள் அழகாகப் பாடுவதையும் சுட்டிக் காட்டிவிட்டுக் கூட்டிப் பொருள் காண்பதைத் தேவார ஒதுவா
மூர்த்திகள் பாடுவதைக் கொண்டு விளக்கினார் அல்லவா? அதே போல எதாவது ஒரு வார்த்தையை
நாமும் சொல்லிப் பார்க்கலாமா “ என்றான். இது கொஞ்சம் கடினமான சவால் தான். சிறிது
நேர மௌனத்திற்குப் பின் ஒருவன் சமாளித்த படியே, “ ஆனந்த விகடன்,னந்த விகடன்,இந்த
விகடன், விகடன்,கடன்,டன், ன்” என்றானே பார்க்கலாம். வகுப்பே அதிர்ந்தது. ஆரவாரம்
கேட்டபடியே அடுத்த வகுப்பு ஆசிரியர் நுழையவே அனைவரும் பெட்டிப் பாம்பு போல் சுருட்டிக்
கொண்டு ஒன்றுமே நடவாதது போல் வெகுளியான முகத் தோற்றத்துடன் இருந்தனர்.
மேற்கண்ட
நகைச்சுவை நிகழ்சிகள் அக்காலச் சிறுவர்களின் அறிவு கூர்மை எப்படி இருந்தது என்பதன்
எடுத்துக் காட்டுகள்.அவ்வளவே.
சீர்காழியில்
கோயில் கொண்டுள்ள சிவபெருமானைப் பாடிய இளம் பாலகனாகிய திருஞானசம்பந்த மூர்த்திகளோ
தமிழும் தமிழிசையும் மேலோங்கவும், சமண் - சாக்கிய ஆதிக்கத்தை அகற்றி சைவத்தை நிலை
நாட்டவும் திருவவதாரம் செய்தருளியவர். அந்த ஞானக் குழந்தை அருளிய பனுவல்களில்
ஒன்றின் மூலம் பொருள் விளங்கக் கூட்டிப் பாடுவதை அறியலாம்.
சிறையாரும்
மடக் கிளியே இங்கேவா தேனொடு பால்
முறையாலே
உணத்தருவன் மொய் பவளத்தொடு தரளம்
துறையாரும்
கடல் தோணி புரத்தீசன் துளங்கும் இளம்
பிறையாளன்
திரு நாமம் எனக்கொருகால் பேசாயே.
எனவரும்
அப்பாடலைப் பாடுகையில் ,
“ முறையாலே,
பால் முறையாலே, தேனொடு பால் முறையாலே,இங்கேவா தேனொடு பால் முறையாலே, மடக் கிளியே
இங்கே வா தேனொடு பால் முறையாலே , சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடு பால்
முறையாலே “ என்று நயம் படப் பாடி
அப்பாடலின் அருமையை நமக்கு உணரச் செய்வார்கள் ஒதுவா மூர்த்திகள். இதேபோல்,
பிறையாளன்,இளம் பிறையாளன், துளங்கும் இளம் பிறையாளன், புரத்தீசன் துளங்கும் இளம்
பிறையாளன், கடல் தோணி புரத்தீசன் துளங்கும் இளம் பிறையாளன் “ என்று பாடி அப்பாடலை
நிறைவு செய்வார்கள்.
இதுபோன்ற
பாடல்களைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிறுவர்களுக்குப் பயிற்றுவித்தால்
நுண்ணறிவு மேம்படும். தமிழார்வமும் இறைவன்பால் பக்தியும் மேலோங்கி உயர் நிலைக்குச்
செல்ல வித்திடும்.
No comments:
Post a Comment