ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த சங்கராசார்யர்களுள் செட்டி நாட்டிலுள்ள இளையாத்தங்குடியில் சித்தியான ஆசார்யரும் ஒருவர். அந்த மகான் நாள்தோறும் ஸ்ரீ சந்த்ர மௌலீசுவரருக்கு செய்த வில்வார்ச்சனையை நமது காஞ்சிப் பெரியவரும் வியந்து போற்றியிருக்கிறார்கள். அர்ச்சிக்கப்படும் வில்வ தளங்கள் ஒவ்வொன்றும் தவறாமல் சுவாமி பாதத்திலேயே சென்று விழுமாம். இது எதைக் காட்டுகிறது என்றால் மனம் ஒரே இடத்தில் லயித்திருந்து பொறிகளைத் தன் வசப்படுத்தி அவற்றை வென்றதையே குறிக்கும்.
நமக்கோ பொறிகள் நம் வசம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நாம்
செய்யும் வழிபாடோ, ஜபமோ பூஜையோ மனம் லயித்துச் செய்யப்படுவதில்லை என்பதை ஒப்புக்கொண்டே
ஆகவேண்டும். குரங்கு கிளைகளில் தாவிக் கொண்டே இருப்பதைப் போல மனமும் அக்கம்பக்கத்துக்
காட்சிகளிலும் , மனத்தால் எண்ணப்படும் காட்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டே
இருக்கிறது. ஆகவே தியானம், பூஜை போன்றவை பெயரளவுக்கே நடத்தப் பெறுவதால் எண்ணிய பலன்கள்
நிறைவேறுவதில்லை. நாமும் நம் குறையைப்
பார்க்காமல் பழியைத் தெய்வத்தின் மீது போடுகிறோம்.
பொறிகளை வெல்வது எப்படி என்று புத்தகத்தைப்
படித்தோ, பிறர் சொல்லியோ தெரிந்து கொள்ள முடியாது.இது தனிப்பட்ட ஒவ்வொருவரின்
அனுபவம். “ தனித்திரு, பசித்திரு, விழித்திரு” என்ற உபதேசங்கள் உயர்ந்தவைகள் என்று
ஏற்றுக் கொள்ளப் பட்ட போதிலும், நடைமுறைக்கு வருவதில்லை. வானப் ப்ரஸ்தம் மேற்கொண்டு வெளியுலகத் தொடர்பைக் குறைத்துக்
கொள்ளும் உபாயத்தையும் வகுத்துக் கொடுத்தனர் நமது முன்னோர்கள். ஆனால் நகர வாழ்க்கையே சுவர்க்கம் என்று
நினைத்துக் கிராமங்களைக் காலி செய்பவர்களே இப்போது பெருகி விட்டார்கள்.
நமக்கு ஒத்து வராது என்று மனத்தைப் பொறிகளின்
போக்கிலேயே விட்டு விடலாமா? புகைப்படக்காரர்கள் சில நிகழ்ச்சிகளிலும்,
ஸ்டூடியோக்களிலும் காமெராவை ஒரு ஸ்டாண்டில் பொருத்தி வைத்து விட்டு யாரது படத்தை
எடுக்க விரும்புகிறார்களோ அவர்கள்பால் அதைத் திருப்பி நிலைப்படுத்தி
விடுகிறார்கள். படம் எடுத்துக் கொள்பவர் நகர்ந்தாலே ஒழிய காமெரா நகர வாய்ப்பே
இல்லை. அதேபோலப் பூஜையின்போது இறைவனது திருவடிகளுக்காகச் செய்யப்படும் அர்ச்சனையை
அம்மலரடியின் பால் மட்டுமே நோக்குமாறு நமது கண்களாகிய காமெராவை நிலைப்படுத்தப்
பழகிக் கொண்டால் கண்கள் அத்திருவடிகளை மட்டுமே காண இயலும். ரோபோவை ஒரு செயல்
செய்யும்படி இயக்கிவிட்டால் அது அந்த இடத்திற்குச் சென்று கைகளால் குறிப்பிட்ட செய்கையைச் செய்வதைப் போல நமது வலது கரமும்
பெருமானது பாதங்களிலே வில்வத்தை அர்ப்பணிக்குமேயன்றி அந்த வில்வதளம் வேறு இடத்தில் சென்று விழாது. சிதம்பரத்தில் சுந்தரர் நடராஜப் பெருமானைத் தரிசிக்கையில்
அவரது கண்கள் அப்பெருமானை மட்டுமே நோக்கியதை , “ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள”
என்கிறார் சேக்கிழார்.
மனம் ஒன்றுதலைக் குறிக்குமிடத்து,ஒரு
திருவாசகப் பாடலையும் நினைவு கூர்வோம்.
நமது சிந்தனையை இறைவன் பால் செலுத்துதல்
இதற்கான முதல் படி. அதுவே நடைபெறாவிடில் எவ்வாறு தவமும்,ஜபமும், பூஜையும்
சாத்தியமாகும்? அடுத்தது, புறத்தே நோக்காமல், கண்கள் அவன் திருவடிகளைக் காண்பதே
கருத்தாகக் கொள்வது அடுத்த படி. இனி வந்திக்கும்போதும் அம்மலரடிகளை எண்ணி
வழிபடுவது மூன்றாவது படி. ஐம்புலன்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கரை சேர்த்த
கடவுளை வாயார அர்ச்சிப்பதும் தோத்திரம் செய்வதும் நான்காவது படி. அப்படி வழிபடுவோர்
மனத்தில் புகுந்து கருணைக் கடலெனவும், மலை எனவும் நீங்காது இருந்து தன்னையே
தருகிறான் பெருமான். இவ்வளவும் , ஒன்றி இருந்த மனத்தின் மூலம் பெறப் படுவது.
எனவேதான் அப்பர்பெருமானும், “ ஒன்றி இருந்து நினைமின்கள்” என்று அருளிச் செய்தார்.
இனி மாணிக்க வாசகரின் அவ்வழகிய பாடலைக் காண்போம்:
சிந்தனை நின்றனக்கு ஆக்கி, நாயினேன் தன் கண்ணிணை
நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி,
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி, வாக்கு உன்
மணிவார்த்தைக்கு ஆக்கி , ஐம்புலன்கள் ஆர
வந்தெனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனை செந்தாமரைக் காடனைய மேனித்
தனிச் சுடரே இரண்டுமிலித் தனியனேற்கே “
அன்புள்ள சேகர்,
ReplyDeleteஇரண்டுமிலித் தனியனேற்கே என்ற சொற்களின் பொருளை தயவு செய்து விளக்குக.
தேசிகன்
பக்திப் பனுவல்களுக்குப் பொருள் கூறுதல் தமிழ்ப் புலமை இருந்தால் மட்டும் சாத்தியம் ஆகாதபடியால் வெகு நாட்கள் வரை தேவாரத் திருவாசகங்களுக்குப் பொருள் இன்னதென்று கூறுவதைப் பெரியோர் தவிர்த்து வந்தனர். இப்பாடலில் வரும் "இரண்டுமிலித் தனியனேற்கே" என்பதன் பொருளை ஒருவாறு ஊகிக்கலாமே தவிர உறுதிப் படுத்த முடியாது. திருவாசகத்தில் பிறிதோர் இடத்தில் வரும் " நுந்து கன்றாய்" என்ற தொடருக்குப் பொருள் விளங்காமையால், தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் இருந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் மாணாக்கர்கள் கேட்டதாகப் பிள்ளையவர்களின் சீடரான ஸ்ரீ உ.வே.சாமிநாதையர் அவர்கள் தனது " என் சரித்திரம்: என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். எனினும் திருவருள் துணை செய்தால் என்றாவது ஒருநாள் நமது ஐயம் நீங்கும் என்று உறுதியாக நம்புகிறேன். தங்களது அரிய வினாவுக்கு நன்றி.
ReplyDeleteமேலெழுந்தவாரியாக அவரவர்கள் தமக்குத் தெரிந்தததைக் கூறலாகாது என்பர் பெரியோர். பொருளாய் நிற்பவன் இறைவனே ஆதலால் அவ்வாறு ஆராய்வதைத் தவிர்த்தனர் போலும்.
ReplyDelete