Tuesday, April 13, 2021

 

  பன்னகாபரணர்


பாம்பு என்றால் படையும் அஞ்சும் என்பார்கள். ஒலி எழுப்பிக் கொண்டு சீறுவதால் அதற்கு அரவு என்றும் அரவம் என்றும் பெயர். அரா என்றும் சொல்வது உண்டு. அரனுக்கு ஆபரணமாக விளங்குவதால் அரவம் ஆயிற்றோ என்று கூடக் கற்பனை செய்து பார்க்கலாம். இதன் நஞ்சும் பணமும் ஒருவனை அழிக்க வல்லனவாதலின் பாம்புக்குப் பணம் என்றும் பெயர் உண்டு. சீறும் பாம்பைக்கண்டு அஞ்சாதார் யாரே உளர் ? புற்றுக்குள் அது வாழ்ந்தாலும் அப்புற்றுக்கு அருகே பயந்தே போக வேண்டியிருக்கிறது.

மேட்டுப்பாளையத்திலிருந்து  உதக மண்டலம் செல்லும் வழியில் அரவங்காடு என்ற ஊர் இருக்கிறது.ஒருவேளை அங்கு பாம்புகள் மிகுதியாக இருந்திருந்து  அப்பெயர் வந்திருக்கலாம். இப்போதும் சில கிராமங்களில் ஊரின் புறத்தில் யாருமே அணுக முடியாத அளவுக்குப் புதர்கள் மண்டி இருக்கும் இடங்களில் ஏராளமான பாம்புகள் காணப் படுவதாகக் கூறுகின்றனர். கோயில்களின் பாழடைந்த கோபுரங்களில் இவை தஞ்சம் அடைவதும் உண்டு. இவ்வளவு ஏன்? கிராமங்களிலும், வயல்கள் சூழ்ந்த சிறிய நகரங்களிலும் வீடுகளுக்குள்ளேயே  பாம்புப் பிரவேசம் நடைபெறுவதும் உண்டு. அவ்விடத்தை விட்டு அகலுவதற்கு முன்பாகத் தன் சட்டையை உரித்துவிட்டுச் செல்வதை இன்றும் காணலாம். மழைக் காலங்களில் ஒதுங்குவதற்காக வீடுகளில் தஞ்சம் அடைவதை அதிகமாகப்  பார்க்க முடிகிறது.

விந்தை என்னவென்றால், பாம்பானது சிவலிங்கப் பெருமானைச் சுற்றிக் கொண்டு படம் எடுத்து நிற்பது தான்! சில ஆண்டுகள் முன் குடந்தைக்கு அண்மையில் உள்ள தேப்பெருமானல்லூரில் ஒரு பாம்பு கருவறைக்குள் நுழைந்து சிவலிங்கமூர்த்தியைச் சுற்றிக் கொண்டதைப் படம் எடுத்து அதைச் சமூக வலைத் தளங்கள் வாயிலாகப்  பலரும் கண்டனர்.

பாம்புக்கும் பரமசிவனுக்கும் என்ன தொடர்பு என்று சிலர் சந்தேகிக்கலாம். காளஹஸ்தியில் பாம்பு சிவபிரானைப் பூஜித்ததாகக் கூறுவார்கள். மனிதர்களே மட்டுமல்லாமல் யானை,பாம்பு,சிலந்தி ,ஈ, எறும்பு, காக்கை, அணில், குரங்கு போன்ற எத்தனையோ உயிரினங்களும் இறைவனைப் பூஜித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இருந்தாலும் பாம்பை அதிகமாகவே தொடர்பு படுத்திக் கூறுவதன் காரணம், அதனை சுவாமி, தனது திருமேனியில் விருப்பத்தோடு அணிவதே  ஆகும் . அதனால்  பன்னகாபரணன் என்ற நாமமும் வந்து விட்டது.  திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ளதும், கருவூர்த் தேவரின் திருவிசைப்பா பதிகம் பெற்றதுமான முகத்தலை(பன்னத் தெரு) என்ற தலத்தில் மூலவருக்குப் பன்னகாபரணர் என்ற திருநாமம் வழங்கப்படுகிறது. பாம்பானது வெறுமனே திருமேனியின் மீது ஊரவில்லை. அது வழிபாடும் ஆகும் என்பதை ஞான சம்பந்தர் தனது திருநீற்றுப் பதிகத்தில், “ அரா வணங்கும் திருமேனி ஆலவாயான்” என்று அழகாக எடுத்துரைக்கிறார்.

ஐந்து தலை நாக வடிவில் மூலவருக்குப் பல இடங்களில் கவசம் அணிவிக்கப்படுகிறது. அரச மர மேடைகளில் உள்ள நாகப் பிரதிஷ்டை களில், இரு புறமும் நாகங்கள் நிற்க, நடுவில் சிவலிங்கப்பெருமான் காட்சி அளிப்பதைப் பார்த்திருக்கலாம். பல கோயில்களில் சுவாமிக்கு நாக நாதர் என்ற பெயரும் உண்டு. திருநாகேசுவரத்திலும்,குடந்தைக் கீழ்க் கோட்டத்திலும், நாகேச்வரர் என்ற பெயர் உள்ளதைக் காணலாம். நாகை,  நாகூர் ஆகிய சிவத்தலங்களிலும் நாகத்தைத் தொடர்பு படுத்தியே ஊர்ப் பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருப்பாம்புரத்தை சர்ப்பபுரி என்பதும் நோக்கற்பாலது.

பெருமான் கச்சையாகக் கொண்ட பாம்புக்கு ஐந்து தலைகள் உண்டு என்பதை, “ ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த சந்த வெண் பொடி சங்கரனே”  என்ற ஞானசம்பந்தர் வாக்கால் அறியலாம். இக்கருத்தை, அவர் அருளிய திருவெழு கூற்றிருக்கையிலும், “ ஐந்தலை அரவம் ஏந்தினை” என்றமை காண்க.  பாம்பு கடித்து மாண்ட அப்பூதி அடிகளின் மகனை உயிர்ப்பிக்க அப்பர் சுவாமிகள்  பாடிய பதிகத்தில்,      “ பத்துக்கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல் “ என்று சற்று விரிவாகவே குறிப்பிடுகிறார்.

பாம்பானது இறைவனுக்கு ஆபரணமான புராண வரலாற்றையும் இங்கே நினைவு கூற வேண்டும். தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கி அவர்களுக்கு ஞானம் உபதேசிக்கும் பெருங்கருணையுடன் பிக்ஷாடன மூர்த்தியாக எழுந்தருளியதைக் கண்டு பொறாத முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து, அதிலிருந்து எழுந்த புலி, நாகம்,முயலகன், யானை ஆகியவற்றைப் பெருமான் மீது ஏவினர். புலியும் யானையும் அவருக்கு ஆடைகள் ஆயின. முயலகனைப் பாதத்தின் கீழ் வைத்தார். நாகமோ அவருக்கு ஆபரணம் ஆயிற்று. “ பூண்பதுவும் பொங்கரவம்” என்பது திருவாசகம்.

பாம்பாகிய இந்த அணிகலனோ பெருமானது சிரத்திலும், கரங்களிலும், மார்பிலும் இடையிலும் தவழ்கிறது. முடிமேலிருக்கும் பாம்பும் சந்திரனும் ஜன்மப் பகைவர்களானாலும் பகையே இல்லாத இடத்தை அல்லவா அடைந்து விட்டார்கள்! “ பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் ” எனப் பாடுகிறார் அப்பர் பெருமான். “ அரவும் பிறையும் பற்றி ஊரும் பவளச் சடையான்” என்பது சுந்தரர் வாக்கு.

அவனணியும் பாம்போ கண்டோரை அஞ்சுவிக்கும் கரு நிறம் கொண்டது போலும்! தில்லையில் நடராஜப் பெருமானைப் பாடும் சுந்தரரும், “கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும் பிடித்தாடி” எனப் பாடியருளுவார். இவ்வாறு கையைச் சுற்றியும் பாம்பு விளங்குவதை,” பலிக்கு ஓடித்திரிவார் கைப் பாம்பு கண்டேன் “ என்று தான் கண்ட காட்சியை அற்புதமாகப் பாடி மகிழ்வார் நாவுக்கரசர்.  மலைப்பாம்பையும் பரமன் ஏற்றுக்கொள்வார் என்பதை சம்பந்தப் பெருமான், “ பாலூறும் மலைப் பாம்பும்” என்பார் நாலூர் மயானப் பதிகத்தில்.        

பாம்போ அடிக்கடி இரைக்க (ஒலி  எழுப்ப) வல்லது. சீறும் தன்மையது.  திருப்புகலூர் மீதமைந்த ஓர் பாடலில், “ இரைக்கும் பாம்பும் எறிதரு திங்களும் “ என வரும் தொடர் இதனைச் சுட்டிக் காட்டுகிறது.

மூவேந்தர்களுடன் திருப்பரங்குன்றத்தை அடைந்த சுந்தரர், பரங்குன்ற நாதர் மீது பாடிய தேவாரத் திருப்பதிகம் மிக்க நயம் வாய்ந்தது. அதில் பெருமானது திருமேனியில் பாம்புகளைக் கண்டால் அச்சமாக இருக்கிறது என்றும் அதன் காரணமாக அவருக்கு ஆட்செய்யவே அஞ்சுகின்றேன் என்றும் பாடியுள்ளார். ( ஆனால் அவரே, திரு நாட்டியத்தான்குடியில் பாடுகையில், “ பூண் நாண் ஆவதோர் அரவம் கண்டு அஞ்சேன்” என்றும் பாடியமை ஒப்புநோக்கற்குரியது). 

“ ஆர்த்திட்டதும் பாம்பு கைக்கொண்டதும் பாம்பு

   அடிகேள் உமக்கு ஆட்செய்ய அஞ்சுதுமே .” என்பது அப்பதிகத்தில் காணப்படும் தொடர். நீலகண்டத்தைச் சுற்றி ஓர் பாம்பு. தோள்களைச் சுற்றிலும் பாம்பு.சிரத்தின் மீதும் , கச்சணிந்த இடையிலும் ,கரங்களிலும் பாம்புகள். இவற்றைத் தொகுத்து நாவலூர் பெருமான் அருளும் பாடலைக் காண்போம்.

பறைக்கண் நெடும் பேய்க்கணம் பாடல் செய்யக்

   குறட்பாரிடங்கள் பறை தாம் முழங்கப்

பிறைக் கொள் சடை தாழப் பெயர்ந்து நட்டம்

    பெருங்காடரங்காக நின்று ஆடல் என்னே

கறைக் கொள் மணிகண்டமும் திண் தோள்களும்

     கரங்கள் சிரம் தன்னிலும் கச்சும் ஆகப்

பொறிக் கொள் அரவம் புனைந்தீர் பலவும்

     பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.

அவன் ஏது உடுத்து, ஏது சூடி, ஏது அமுது செய்தால் என்ன?  அத்தனையும் அழகாகத்தான் இருக்கிறது என்று பரவசப் படுகிறார் அப்பர் பெருமான். அவனது சடை மீது  படமெடுத்து ஆடும் நாகம் இருப்பதும் அவனுக்கு அழகாகத்தான் இருக்கிறது என்பார் அவர்.

கடமணி வண்ணன், கருதிய நான்முகன் தானறியா

விடமணி கண்டம் உடையவன் தானெனை ஆளுடையான்

சுடரணிந்தாடிய சோற்றுத்துறை உறைவார்சடைமேல்

படமணி நாகம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே.  

என்பது அவ்வினிய பாடல்.    

No comments:

Post a Comment