பரிசு என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் உள்ள " Prize" என்ற சொல்லை உதாரணமாகச் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் இதைத் தாண்டியும் பல அர்த்தங்கள் இருக்கக் காண் கிறோம். இச்சொல்லைத் திருமூலரும், "அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே" என்று இறை அருளுக்குப் பரிசு என்ற பொருள் பட அருளியுள்ளார். இதுவே உயர்ந்த பொருளும் கூட. மனிதர்கள் வழங்கும் பரிசை "Prize" என்று சொல்வதைப் போல இறைவனது பரிசை அதே பொருளில் சொல்ல முடியாது ஏனென்றால், அது "அருட் கொடை" அல்லவா? அது மட்டுமல்ல. தனது மூல பண்டாரத்தையே திறந்து அருட் கொடையாக வழங்குகின்றான். அதைப் பெறுவதற்கு நாம் நல்வினைகள் பல செய்திருக்க வேண்டும். அது சாதாரணப் பரிசு அல்ல. " முத்திப் பரிசு" என்கிறார் மணிவாசகர். அவன் தருகின்ற பதமோ "பெரும் பதம்" . அவனது பேரின்ப வெள்ளத்துள் திளைக்க வேண்டுவோர், அவனது கழலடியே பேணுபவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சேவடியைச் சிக்கெனப் பிடித்த அடியார்களின் நையாத மனத்தினை நைவித்து,என்புருக்கி, முந்தைப் பழ மல வாதனை அகற்றி, அழிவில்லாததோர் ஆனந்த வெள்ளத்தை அருட் கொடை என வழங்குகின்றான் என்று சொல்லி நம்மையும் ஆற்றுப் படுத்துகிறார் குருநாதர். மேலும் கருணை ததும்பியவராய் , அக் கொடையைப் பெறுவதற்கு முந்திக் கொள்ள வேண்டும் என்று அருளுகிறார். இதுவே நாம் பெறும் நிகரற்ற முத்திப் பரிசு.
சிவத்யானத்தில் திளைத்தவராக ,ஆற்று மணலால் தான் செய்து வழிபட்ட லிங்க மூர்த்திக்கு, ஆநிரைகளின் பாலைக் கறந்து கொண்டு ஆட்டக் கண்டு பொறாமல், பால் கலசத்தைக் காலால் இடறிய தன் தந்தையின் சிவாபராதத்தைக் கண்டு சினந்தவராக அவரது காலை மழுவினால் துண்டித்த சண்டிகேச்வரரின் பக்தியை சிவபெருமான் மெச்சி எவ்வாறு அருட் கொடை வழங்கினான் தெரியுமா? அக்குழந்தையின் முன்னே தோன்றி , அச்சிறுவனது கன்னத்தை வருடிக் கொடுத்து, இனி உனக்கு அம்மையும் அப்பனும் நாமே ஆவோம். சண்டீச பதம் தந்தோம் என்று சொல்லித் தனது மதி சூடிய சிரத்தில் இருந்த கொன்றை மாலையை எடுத்து அக் குழந்தைக்குச் சூட்டினான் பெருமான். தாதையைத் தாள் அறுத்ததோ சாதாரண குற்றமல்ல. பாதகமும் கூட. ஆனால் அதுவே அச்சிறுவனது பக்திக்கு முன்பு பரிசை வாங்கி கொடுத்து விட்டது. இதைத்தான் , " பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே " என்பார் சேந்தனார்.
பரிசு என்ற சொல் , கீர்த்தி , தன்மை, கொள்கை என்ற பல பொருள்களில் திருவாசகத்தில் வருவதைக் காணலாம். இறைவனது தன்மை எப்படிப் பட்டது? தனதடி வழிபடும் அடியார் உள்ளத்துள் அன்பு மீதுரக் குடியாக் கோயில் கொண்ட கொள்கை உடையவன் இறைவன்.. அதுவே அவனது சிறப்பு வாய்ந்த தன்மையும் ஆகும். இப்புவனியை உய்யக் கூறுடை மங்கையும் தானும் எழுந்தருளி முழுவதையும் படைத்தவனாகவும், படைத்தவற்றைக் காப்பவனாகவும், மறைத்தல் தொழிலைச் செய்பவனாகவும், ஆறு சமயங்களுக்கும் வீடு பேறாக நின்று, பிரமன் மால் காணாப் பெரியோனாகி, கற்பமும் இறுதியும் காணும் சிவம், அடியார்க்கு எளியவனாவதை, மணிவாசகர், "கருணையின் பெருமை கண்டேன்" என்று வியந்து பாடுகிறார்.
வைகைக்கரையில், வந்தி என்ற அடியாளுக்காகப் பிட்டுக்கு மண் சுமந்து பாண்டியனின் கோலால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனிப் புண்ணிய மூர்த்தி , அவளுக்கு அருளியதை, "அடியவட்காகப் பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்" எனப் புகழ்வார் வாதவூரர். நாம் செய்யும் பாவங்களை நாசம்செய்வதும் அருட் கொடை தானே! அதனால், "பாவநாசம் ஆக்கிய பரிசும்" என்றார். "ஒரியூரில் உகந்து இனிது அருளி பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்" என்பதாலும் பெருமானது கருணையும், அதனை வெளிப்படுத்த வந்த திருவிளையாடலும் பரிசாகக் கொள்ளப் பட்டது. திருவிடைமருதூரில் பாத தீக்ஷை தரும் கருணையை, " இடைமருது அதனில் ஈண்ட இருந்து படிமப்பாதம் வைத்த அப்பரிசும்" என்கிறார் அடிகள்.
காஞ்சியம்பதியில் அன்னையின் தவத்திற்கிரங்கி, அருளியதை, ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்" என்பார் மாணிக்க வாசகப்பெருமான். அவன் புரியும் விளையாடல்கள் அநேகம். பலப பல வகையில் அமைவன. இப்படிப்பட்டவை என்று யாரால் அளக்க முடியும்? எனவே, ""பாவகம் பலப்பல காட்டிய பரிசும்" என்றார்.
அவனோ அந்தமில்லாதவன் .யாரறிவார் அவன் பெருமைகளை? "ஆரறிவார் இவர் பெற்றியே" என்றது ஞானசம்பந்தக் குழந்தையும். அப்படிப்பட்ட கருணாமூர்த்தி, தன்னைத் தேடிவந்து அருளிய கருணையை எண்ணி எண்ணிக் கரைந்து உருகும் மாணிக்க வாசகர், "அந்தமில் பெருமை அருள் உடை அண்ணல் எந்தமை ஆண்ட பரிசு" என நெக்குருகிப் பாடுவார். நாயேனையும் இவ்வாறு ஆண்டது எப்படி இருக்கிறது என்பதை, " எப்பெரும் தன்மையும் எவ்வவர் திறமும் அப்பரிசு அதனால் ஆண்டு கொண்டு அருளி" என விளக்கம் தருகிறார்.
நாயேனை "நல மலி தில்லைப் பொதுவுக்கு வா" என்ற வான் கருணையை வாயார வாழ்த்துகிறார் குருநாதர். எளிதாகக் கிடைக்கக்கூடியதா அப்பேரருள்? "நாத நாத என்று அழுதும் அரற்றியும் " ஏங்கினர் ஏங்கவும் காண மாட்டாத மலர்ச் சேவடிகள், பக்தி செய் அடியார்களைப் பரம்பரத்து உய்ப்பன அல்லவா? அதனால், ஏனோர்க்கு அரிய சிவன் மணிவாசகர்க்கு எளியோனாய் நின்றான். பதஞ்சலிக்கு அருளிய அப்பரமநாடகன் ,அருள் நிதி தர வரும் ஆனந்த மலை அல்லவா? அதனால் தான் , அவரை ஆட்கொண்டடருளியது, பரிசு ஆயிற்று. அதுவும் அந்தமில் ஆனந்தம் விளைக்கும் முக்திப் பரிசு ஆயிற்று.