வலிவலம் திருக்கோயில் |
திருச்சிராப்பள்ளியில் ரத்னாவதி என்ற பெண்ணுக்காக அவளது தாயாக எழுந்தருளி பிரசவம் பார்த்ததும், கர்ப்பவதியாக வந்த பெண்ணுக்கு வட குரங்காடுதுறையில் தென்னங் குலையைச் சாய்த்துத் தாகம் தீர்த்ததும் போன்ற தல வரலாற்றுச் செய்திகள் மூலமாகத் தாயுமாகி அருளியதை அறிகிறோம். சிற்றுயிர்களுக்கு இரங்கித் தாயாக எழுந்தருளியது அதைக் காட்டிலும் உயர்ந்த கருணை. மதுரையைச் சார்ந்த காட்டில் தாய் தந்தையரை இழந்து கதறும் பன்றிக்குட்டிகளுக்கு இரங்கி அவற்றின் தாய்ப் பன்றி வடிவில் எழுந்தருளிப் பாலூட்டி அவற்றின் துன்பம் தீர்த்த கருணையைத் திருவிளையாடற் புராணத்தில் காணலாம்.
" தாயிற் சிறந்த தயாவான தத்துவனே " என்கிறார் மாணிக்க வாசகர். பால் தர வேண்டிய நேரம் உணர்ந்து குழந்தைக்குப் பாலூட்டும் தாயைக் காட்டிலும் தயை புரிவது இறைவன் ஒருவனே. நாம் எடுக்கும் அத்தனை பிறவிகளுக்கும் தாய் தந்தையராக உடன் வருபவன் அவன் ஒருவனே. நாம் எடுத்துள்ள இப்பிறவியில் யார் மூலமாகப் பிறக்கிறோமோ அவர்களைத் தான் நாம் பெற்றோர் என்கிறோம். அதாவது ரத்த சம்பந்தம் இருந்தால் அந்த உறவு அமைகிறது. பந்தமும் பாசமும் கூடவே தொடர்கின்றன. உண்மையில் எத்தனையோ பேருக்கு இந்த பந்தம் இருந்தும் பாசத்துக்காக ஏங்குவதைப் பார்க்கிறோம். எதிர் காலத்தில் இந்த பந்தங்கள் எல்லாம் மேற்கத்திய கலாசாரம் போலப் பட்டதும் படாததுமாக ஆகி விடும் போலத் தோன்றுகிறது. அந்த வெற்றிடத்தை யாரால் தீர்க்க முடியும்? இறையருள் இருந்தால் இறைவன் ஒருவனால் மட்டும் முடியும்.
அநேகருக்குச் சிறு வயதிலேயே தாயையோ அல்லது தந்தையையோ அல்லது இருவரையுமோ இழக்கும் துர்பாக்கியம் ஏற்படுகிறது. அவர்களின் வாழ்க்கை முழுவதும் இந்த இழப்பின் சோகம் தொடர்கிறது. அதனை ஈடு செய்யும் கருணையுடன் சிலருக்கு இறை அருளால் பல ஆண்டுகளுக்குப் பிறகு அன்னையோ அல்லது தந்தையோ அமையக் கூடும். இறைவனே நேரில் வந்து அவ்வடிவில் அருளினால் நிரந்தரமாக அமையமுடியாது அல்லவா? மறுபடியும் பிரிவு ஏற்பட்டு ஏக்கம் வந்து விடும். ஆகவே, ஏதாவது ஒரு அருள் பெற்ற அன்பரைக் கொண்டு தாயாகவோ தந்தையாகவோ அமையச் செய்கின்றான் பெருமான். அந்த அருளின் ஆற்றல் எப்படிப்பட்டது தெரியுமா? உண்மையிலேயே அமைந்த பெற்றோரைக் காட்டிலும் உயர்ந்தவரையே பெருமான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறான். அதற்கு இருபாலாரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.இது எல்லோருக்கும் எளிதில் புரிந்து கொள்ள முடியாததும் பந்தம் என்பதைத் தாண்டியதுமான உயர்ந்த நிலை. அதற்கு அடுத்த படிதான் பெருமானே தாய் தந்தையராக அமைவது. இருவரும் அந்த எல்லையற்ற பெருங்கருணையை நினைத்து நினைத்து உருகுவர். இப்படி இவ்வுலகில் எவ்வளவு பேருக்குக் கிடைக்கும்? பிறவியே பயனடைந்து விட்டதால் மீண்டும் பிறவாத நிலையை இருவரும் அடைந்து விடுகின்றனர்.
எல்லாவுயிர்க்கும் சுகத்தை வழங்க வல்ல சங்கரனைத் தாயும் நீயே, தந்தை நீயே என்று துதிக்கிறார் ஞானசம்பந்தர். மாயமே ஆகிய உடலை ஐம்புலன்கள் ஆட்டுவிக்கின்றன. அவற்றிலிருந்து விடுபடும் உபாயம் அறியாமல் அஞ்ச வேண்டியிருப்பதால் இறைவனையே தஞ்சம் அடைய வேண்டும். இறைவனை வணங்க வேண்டி உள்ளம் ஆதரித்தாலும் மாயை அதனைத் தடுக்கின்றபடியால் இவ்வாறு அஞ்ச வேண்டியிருக்கிறது. வலிவலம் என்ற தலத்தில் ஞானசம்பந்தர் பாடியருளிய தேவாரப்பாடல் வருமாறு:
தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே.