சிரித்த முகம் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே |
சிரித்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். சிலரைக் குறிப்பிடும்போது அவர்கள் சிரித்த முகத்தோடு பெரும்பாலும் காட்சி அளிப்பதாகக் கூறக் கேட்டிருப்பீர்கள். சிலருக்கோ சிரிக்கவே தெரியாது. எள்ளும் கொள்ளும் வெடிக்கும் ! எப்போதும் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருக்கிறார் என்பார்கள் பார்ப்பவர்கள். சிடு மூஞ்சி என்ற பட்டமும் கொடுத்து அவரைக் கௌரவிக்கிறார்கள் !
சிரிப்பில் தான் எத்தனை வகை !! புன் சிரிப்பு, மென் சிரிப்பு, குமிண் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம். அகத்தில் உள்ளதை முகத்தில் தெரிந்து கொள்ளச் சிரிப்பும் ஒருவகையில் உதவுகிறது.
உதடு விலகாமல் சிரிப்பவர்களும், மிகவும் லேசாக முறுவலி ப்பவர்களும், இடி சத்தம் போல் சிரிப்பவர்களும் உண்டு. எப்படி ஆனாலும் பற்கள் தெரியச் சிரித்தால் அதுவும் ஒருவகையில் அழகு தான். அதற்கு அழகிய பற்கள் வேண்டுமே! சிலருக்குப் பற்கள் வரிசையாக இராது. சிலர் வாயைத்திறந்தால் காவி நிறமோ மஞ்சள் நிறமோ பிரகாசிக்கும். மற்றும் சிலர் வெற்றிலையை மென்ற வாயோடு சிவந்த பற்களைக் காட்டுவார்கள்.
பற்கள் கோணாமல் இருப்பதோடு வெண்மையாக இருந்தால் அது சிரிப்புக்கே அழகு சேர்க்கும். வெண்பற்களை முத்தொடு ஒப்பிடுவது வழக்கம். சிரித்தால் முத்து உதிர்ந்து விடுமா என்ன என்று சிரிக்கவே தெரியாதவர்களைப் பற்றிக் கூறுவதைக் கேட்டிருப்பீர்களே !
திருவெம்பாவையில் ஒரு பெண் மற்றொருத்தியை விளிக்கும்போது, " முத்தன்ன வெண்ணகையாய் " என்கிறாள். அது இருக்கட்டும். சாதாரண பெண் சிரிக்கும்போதே இந்த வருணனை பெறுகிறாளே , உலக நாயகியாகிய உமாதேவியே சிரிக்கும்போது எப்படி இருக்கும் என்று அருளாளர்கள் பாடும்போது அந்தக் காட்சியை நினைந்து மனம் உருகுகிறோம். " முத்திலங்கு முறுவல் உமை " என்று அப்புன்னகையை வருணிக்கிறார் சம்பந்தர். " தவள வெண்ணகையாள் என்று திருப்பாலைத்துறை என்ற தலத்தில் அம்பிகை அழைக்கப்படுகிறாள் .
சிரித்தல் என்ற சொல்லை நகுதல் என்று குறிப்பிடுவார் திருவள்ளுவர். இன்பம் வரும்போது நகைப்பது பெரிதல்ல. நம்மை நோக்கி வரும் துன்பம் கண்டும் அஞ்சாமல் நகைக்க வேண்டும் என்பார் வள்ளுவர். " இடுக்கண் வருங்கால் நகுக " என்பது அப்பொய்யா மொழி. இது நடக்கக் கூடியதா என்றே நாம் நினைப்போம். ஆனால் இறைவனே அச்செயலை முதன் முதலாக செய்து காட்டி நமக்கு வழி வகுத்திருக்கிறான் என்று சொல்லத் தோன்றுகிறது.
தாருகாவன முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து அதிலிருந்து எழுந்த கஜாசுரன் என்னப்படும் யானையை சிவபெருமான் மீது ஏவினார்கள். உலகே நடுங்கும் வண்ணம் சீறிப் பாய்ந்து வந்த அந்த யானையை உரித்து, அதன் தோலைத் தன் மேனியின் மீது பெருமான் போர்த்திக் கொண்டான் என்பது வரலாறு. கஜ சம்ஹாரத்தை நேரில் கண்டு கொண்டிருந்த உமாதேவி அச்சத்தால் நடுங்கினாளாம் . அப்படி அஞ்சும்போது, அச்சம் தீர்க்கும் முகமாக யானையை அடக்கி,தனது பற்கள் தெரியும் படியாகச் சிரித்தவாறே அதனை உரித்துப் போர்த்துக் கொண்டு அனைவருக்கும் அருள் செய்த வீரச் செயலை அப்பர் பெருமான் திருச் சேறை என்ற தலத்தில் பாடி அருளுவதைப் பாருங்கள்:
விரித்த பல் ; கதிர்கொள் சூலம் ; வெடிபடு தமருகம் ; கை
தரித்ததோர் கோல கால பைரவனாகி , வேழம்
உரித்து, உமை அஞ்சக் கண்டு ஒண் திருமணி வாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
என்ற பாடலில் , கஜாரியாக வந்த பரமேசுவரனது தோற்றம் சிறப்பாகக் காட்டப்பெறுகிறது. பற்கள் விரியச் சிரித்தவாறே சூலமும், தமருகமும் கைகளில் ஏந்தியவராக பைரவத் தோற்றத்துடன் எழுந்தருளும் பெருமான் , யானையின் வாய்க்குள்ளே அணுவாக உள்ளே சென்றவுடன் உலகை இருள் சூழ்கிறது. சூரிய சந்திரர்கள் சிவ பெருமானது திருக்கண்களாதலால், யானைக்குள் இமைப்பொழுதளவில் பெருமான் மறைந்ததால் உலகம் யாவும் இருண்டன. அதனைக் கண்டுதான் உமாதேவி அஞ்சி நின்றாளாம். மறுகணமே யானையை உரித்துப் போர்த்திக்கொண்டு அதன் மத்தகத்தின் மீது வலது பாதத்தை ஊன்றிய வண்ணம் பெருமான் வீர நடனம் புரிந்து சிரித்த முகத்தோடு அனைவருக்கும் அருள் செய்தான். மீண்டும் ஒளி பெற்றதால் அனைவரும் சிவானந்தம் பெற்று உய்ந்தனர். அந்தப்புன்னகை உலகம் யாவற்றையும் இன்னமும் உய்விக்கிறது.