Sunday, June 26, 2016

பொருந்தாத செய்கையும் பொருத்தமே

நம் போன்றவர்கள் பல்லாண்டுகள் நாத்தழும்பேற அழைத்தால் திருவருள் துணையின் காரணமாக சிவபெருமானது பெருமைகள் சிறிதளவாவது புலப்படக் கூடும். அவரவர்களது மெய்யன்பும், தவமும் இதற்கு மூல காரணங்கள் ஆகின்றன. ஆனால் மகான்களுக்கு ஏற்படும் அனுபவங்களே அலாதியானது. அவர்களுக்குப் பெருமான் துணைவனாகவும்,தொண்டனாகவும் தோழனாகவும் இருக்கிறான். காணாத காட்சிகளைக் காட்டுகின்றான். கலங்காதவண்ணம் நேரில் வந்து கோலம் காட்டி  அருளுகிறான். வழக்கத்திற்கு மாறான காட்சிகளாகவும் அவை அமைந்து விடுகின்றன. ஆனால் அவையும் அவனுக்கு அழகாகத்தான் பொருந்துகிறது.

சோமாஸ்கந்த மூர்த்தியின் இடது கரத்தில் மான் துள்ளிய நிலையில் இருக்கும். " மான் இடம் கொண்ட காழியார்"  என்றுசம்பந்தப்பெருமானும் , " மான் இடக்கை கொண்டானை" என்று கஞ்சனூர்த்  தேவாரத்தில் அப்பர் சுவாமிகளும் குறிப்பிடுகின்றனர்.. இந்த வழக்கத்திற்கு மாறாகத் தஞ்சை மாவட்டத்தில் வலங்கை மான் என்ற ஊரில் பெருமானது வலது கரத்தில் மான் இருக்கிறது. அதனால்தான் அந்த ஊருக்கு வலங்கைமான் என்று பெயர் வந்தது. 

சப்த விடங்கத் தலங்களுள் ஒன்றான திருவாய்மூருக்கு சம்பந்தருடன் வந்த அப்பர் பெருமான் தான் நேரில் கண்ட காட்சியைத் திருத் தாண்டகத்தால் பரவுகின்றார்.  அதில்                   " மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்" என்று வருகிறது. சோமாஸ்கந்த மூர்த்தி என்றாலே ஈசுவரன், அம்பிகை ஆகியோர் ,  தங்களுக்கு மத்தியில் ஸ்கந்தப் பெருமானுடன் இருக்கும் கோலமே ஆகும். ஆனால் இப்பாடலில் விநாயகனும் தோன்றுவதாகக் குறிப்பிடுகிறார். இதற்கு உரை ஆசிரியர்கள், விநாயகனும் என்பதால் எச்ச உம்மை ஆயிற்று என்றும் வழக்கம்போல முருகனோடு ஆனை முகனும் தோன்றுவதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும் என்றும் எழுதியுள்ளனர். இது மேலும் ஆராய வேண்டியதொன்று. 

ஒருவேளை அக் கோயிலில்  உள்ள மூர்த்தியில் ஸ்கந்தருக்குப் பதிலாக விநாயகர் இருக்கிறாறா  அல்லது இது தொடர்பான புராண வரலாறு அங்கு உள்ளதா என்பது புலப்படவில்லை. 

திருவாய்மூரில்  கண்ட இன்னொரு அதிசயக் காட்சியையும் அப்பர் பெருமானது  பாடல் குறிப்பிடுகிறது. வழக்கமாக நடராஜர், தக்ஷிணா மூர்த்தி ஆகிய மூர்த்தங்களில் பெருமானது மேல்  இடது கரத்தில் மட்டுமே அக்கினி இருக்கும். தக்ஷிணாமூர்த்தியின் வலது மேல் கரத்தில் பாம்பும் ஜப மாலையும் காணப்படுவன. சோமாஸ்கந்தரின் வலக்கரத்தில் மழு இருக்கும்.. " வலங்கைத் தலத்துள்  மழு ஒன்று உடையார் போலும்" என்பது இன்னம்பர்த் தேவாரம் ஆனால் திருவாய்மூர் தரிசனம் வித்தியாசமானது. " வலங்கைத் தலத்துள் அனலும் கண்டேன் " என்று  இப்பாடலில் வருவதால் பெருமானது வலது கரத்தில் அனல் ஏந்திய செய்தி நமது  சிந்தைக்கு விருந்தாகிறது. பொருந்தாத செய்கையும் பொருந்துகிறது. 

Tuesday, June 21, 2016

ஆரூர் ஆழித்தேர் வித்தகன்

ஆழித்தேர் 
மண்ணுலகில் பல அரசர்கள் உண்டு. விண்ணுலகிலும் தேவேந்திரன் இருக்கிறான். இந்த எல்லா அரசர்களுக்கும் மேலான அரசனாகப் பரமேசுவரன் இருப்பதை " விண்ணாளும் தேவர்க்கும் மேலாய வேதியனை, மண்ணாளும்  மன்னவர்க்கும்  மாண்பாகி நின்றானை.. " என்கிறது திருவாசகம். அரசர்களுக்கு நாடு, கொடி , தரிக்கும்  மாலை , தேர் என்று அவரவர்களை அடையாளப்படுத்தும் விதமாக  அமைந்திருக்கும். ஆனால் ஈசுவரனோ தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல்  எல்லாவற்றையும் அடியார்களுக்கே வழங்கும் தியாக வள்ளல். கடல் அமுதத்தை உண்ண  உரியவன் அவன் ஒருவனே  ஆனாலும்  அதனைத் தேவர்களுக்கு அளித்து  விட்டுத்  தான் கடல் நஞ்சை விரும்பி உண்டு  அண்டங்களைக்  காத்தான். ( "  ஆலம்  உண்டாய் அமுது உண்ணக் கடையவனே."  என்பார் மாணிக்க வாசகர்). அதே போன்று யானையிலும் குதிரையிலும் தேரிலும்  ஏறுவதைக் காட்டிலும்  ரிஷபத்தின் மீது  ஏறுவதை, 

" கடகரியும் பரி மாவும்  தேரும் உகந்து ஏறாதே 
இடபம் உகந்து ஏறியவா ..."  என்பன திருவாசக வரிகள். 

ஆனால்  அடியார்களை உய்விப்பதற்காகப்   பல வாகனங்களில் உற்சவ காலங்களில் ஈசன் பவனி வருவதுண்டு. அவற்றில் குதிரை, யானை, ரிஷபம் ஆகியன அடங்குவன. தேரில் எழுந்தருளித் திருவீதியில் பவனி வருவதைப் பல தலங்களின்  உற்சவ காலங்களில் தரிசிக்கிறோம். 

திருவாரூரில் நடைபெறும் ஆழித் தேர்  விழா, தொன்மை வாய்ந்தது. தமிழகத்தின் உயரமான தேரான இதில் தியாகேசன் உலா வருவதைக் கண்டு அடியார்கள் பரவசத்துடன், " ஆரூரா,  தியாகேசா  "  என்று  கோஷமிடுவதை இன்றும் காணலாம். " திருவாரூத் தேரழகு " என்ற பழமொழி இன்றும் மக்களிடையே பிரபலமாக உள்ளது. 1748 - ல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை சரஸ்வதி மகால் ஆவணங்களின் மூலம் அறியப்படுகிறது. 

1926 - ம் ஆண்டு  நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது தீப் பற்றியதால் தேர் முழுதும் எரிந்துவிட்டது. அதன் பிறகு 1928- ம்  ஆண்டில் புதுத்தேர் செய்விக்கப்பட்டு 1948 வரை ஓடியது. 1970 ம் ஆண்டு புதிய சக்கரங்கள் பொருத்தப்பெற்று மீண்டும் ஓடியது. தேர் பழுதானதால் புதிய தேர் செய்யப்பெற்று 16.6.2016 அன்று தியாகேசப்பெருமான் சுந்தரருக்காக நிலத்தில் திருப்பாதங்கள் தோய நடந்து சென்ற திருவீதிகளில் ஆழித்தேர்  பவனி வந்தது. 

இதனை இழுக்க நான்கு வடங்கள்- ஒவ்வொன்றின் நீளம் சுமார்  425 அடி ஆகும். அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் முப்பது அடி. விமானம் வரை சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி. விமான உயரம் 12 அடி. தேரின் கலசம் 6 அடி; ஆக அலங்கரிக்கப்பட்ட தேர் 96 அடி உயரமானது. இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட தேரின் எடை சுமார் 300 டன் ஆகும். 

ஆழித்தேர் பற்றிய குறிப்பு தேவாரத்தில் காணப்படுகிறது. சிவபெருமான் அணிந்த இளம் பிறை ஒரு பிளவு போலக் காட்சி அளிக்கிறது. பிளவு என்பதைப் " போழ்" என்ற வார்த்தையால் அப்பர் பெருமான் குறிக்கையில், " போழொத்த வெண்மதியம் சூடி" என்கிறார். வெண்மையான வளையல்களை அணிந்த உமாதேவி அஞ்சும்படி, ஆவேசமாக வந்த யானையை அடக்கி அதன் தோலை உரித்துப் போர்த்துக்கொண்டு அந்த யானையின் தலைமீதுவீர நடனம் ஆடியதைப்   " பொலிந்திலங்கு வேழத்து உரி  போர்த்தான்  வெள்வளையாள் தான் வெருவ"  என்று கூறுவதால் அறியலாம். ஊழிக்காலத்துத் தீயைப் போன்றவன் பரமசிவன் என்பதை, "  ஊழித்தீ அன்னானை" என்ற வரிகள் காட்டுகின்றன. 

தியாகராஜப்பெருமானது தேரினை அழகிய உயர்ந்த குதிரைகள் இழுக்கின்றன. ஊழி முதல்வனாய் நின்ற பரம்பொருளை தேரில் எழுந்தருளும் காட்சியை எண்ணி எண்ணி உள்ளம் பூரித்தநிலையில், " ஆழித்தேர்  வித்தகனை  நான் கண்டது  ஆரூரே  "  என்று பரவசப்படுகிறார் திருநாவுக்கரசர்.  அத்திருப்பாடலைக் கீழே காண்போம்:

போழ் ஒத்த வெண் மதியம் சூடிப் பொலிந்து இலங்கு 
வேழத்து உரி  போர்த்தான் வெள் வளையாள் தான் வெருவ 
ஊழித்தீ அன்னானை  ஓங்கு ஒலி மாப் பூண்டதோர் 
ஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே. 

அப்பர் கண்ட அற்புதக் காட்சியை 1500 ஆண்டுகளுக்குப்பின்னர்  நாமும் காணும் பேறு பெற்றோம் எனும்போது " காண்பார் ஆர்  கண் நுதலாய்க் காட்டாக்காலே " என்ற வாக்கு நினைவுக்கு வர வேண்டும். தியாகேசனது திருவருள் இருந்தால் தான்  அக்காட்சி கிடைக்கும் என்ற உணர்வு அப்போது மேலோங்கும்.