ஸ்ரீ காஞ்சி பெரியவர்கள் ஒரு சமயம் தருமபுர ஆதீனத்திற்குச் சென்றிருந்தபோது , அங்கிருந்த வேத பாடசாலை மற்றும் ஆகம பாடசாலைகளைப் பார்த்துவிட்டு , தேவார பாடசாலைக்கு விஜயம் செய்த போது, பாடசாலை ஆசிரியராக இருந்த ஸ்ரீ வேலாயுத ஓதுவாமூர்த்திகள் ஏதோ காரியமாக மடத்தின் வேறு பகுதிக்குச் சென்றிருந்தார்கள். பாடசாலை குழந்தைகளிடம் மிக்க மகிழ்ச்சியுடன் உரையாடிய ஸ்ரீ பெரியவர்கள், ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள் தேவாரத்தில் இருந்து ஒரு திருத்தாண்டகம் பாடிக்காட்டுமாறு ஒரு மாணவனிடம் கேட்டார்கள். உடனே அவன், திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி மீது அப்பர் பெருமான் பாடிய திருத் தாண்டகப் பதிகத்திலிருந்து ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தான். அவன் பாடிய அப் பாடலின் முதல் இரு வரிகள் பின்வருமாறு:
கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை
கடுநரகம் சாராமே காப்பான் தன்னை
யாரிடமும் கற்காமலேயே எல்லாக் கலைகளையும் மெய் ஞானத்தையும் உபதேசித்தவன். தனது அடியார்களை நரகம் புகாமல் காப்பவன் என்பதே அந்த வரிகளின் பொருள். அம்மாணவனுக்கு பயம் காரணமாக மேற்கொண்டு ஞாபகம் வரவில்லை. ஆனால் பெரியவர்களோ, அந்த இரண்டு வரிகளைத் திரும்பத் திரும்பப் பாடுமாறு கேட்டுக் கொண்டதால், அச்சிறுவனும் அதையே மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டிருந்தான். மெய்மறந்து பெரியவர்கள் இதைக் கேட்டுக் கொண்டிருந்ததை அங்கு வந்து சேர்ந்த பாடசாலை ஆசிரியர் பார்த்துப் பரவசப்பட்டவராக, மீதி வரிகளையும் பாடிக்காட்டினார். இந்நிகழ்ச்சியைப் பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ தருமபுரம் சுவாமிநாத ஓதுவாமூர்த்திகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அத்தகைய தாண்டகப் பாடல்களில் இருந்து ஒன்றை இங்கு சிந்திப்போமாக:
இப்பாடல் திருவையாற்றிற்கு அருகிலுள்ள திருப்பூந்துருத்தி ஸ்ரீ புஷ்பவநேச்வர சுவாமி மீது பாடப்பெற்றது. சத்திய ச்வரூபனான மூர்த்தியை பொய்யிலி என்று அழைக்கிறது இப்பதிகம். புண்ணிய மூர்த்தியாகவும் வர்ணிக்கிறது .
கடுமையான வேகத்துடன் வந்த கங்கையைத் தனது ஜடையில் தாங்கி கங்காதரன் ஆனவன் என்பதை,
"நில்லாத நீர் சடைமேல் நிர்ப்பித்தானை"
என்றார்.
அவன் அருளாலே மட்டும் அவன் நினைவு நமக்கு வரும். இதனை,
" நினையா என் நெஞ்சை நினைவித்தானை "
என்றார்.
கற்க முடியாதன எல்லாவற்றையும் கற்பிப்பவன் அக்கடவுள் என்பதை,
" கல்லாதான எல்லாம் கற்பித்தானை "
என்றார்.
கண்டு அறியாதன எல்லாவற்றையும் அப்பெருமானே காட்டுபவன் என்பதை,
" காணாதன எல்லாம் காட்டினானை"
என்றார்.
பரம கருணையினால் என்னைத் தொடர்ந்து வந்து, அடியவனாகக் கொண்டு , சொல்லாத பொருள்கள் எல்லாவற்றையும் சொன்னான் என்பதை,
" சொல்லாதன எல்லாம் சொல்லி என்னைத் தொடர்ந்து
இங்கு அடியேனை ஆளாக்கொண்டு "
என்றார்.
அப்புநிதனே, எனது பொல்லாத சூலைநோயையும், பிறவி நோயையும் தீர்த்தவன் என்பதை,
" பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்தி கண்டேன் நானே"
என்றார்.
முழுப் பாடலையும் இப்பொழுது காண்போமாக:
" நில்லாத நீர் சடைமேல் நிர்பித்தானை
நினையா என் நெஞ்சை நினைவித்தானை
கல்லாதான எல்லாம் கற்பித்தானை
காணாதன எல்லாம் காட்டினானை
சொல்லாதன எல்லாம் சொல்லி என்னைத்
தொடர்ந்திங்கு அடியேனை ஆளாக்கொண்டு
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே."
என்பது பதிகத்தின் முதல் பாடல்.
இதுபோன்ற பக்திச் சுவை மிக்க பாடல்களை ஏராளமாக நமக்கு அருளியுள்ளார்கள் அருளாளர்கள். அவற்றை பாராயணம் செய்யும் பாக்கியத்தை எல்லோருக்கும் சிவனருள் கூட்டுவிக்க வேண்டும்.
No comments:
Post a Comment