பயம் என்ற சொல்லுக்குத் தமிழில் அச்சம் என்று பொருள் சொல்வார்கள். அபயம் என்றால் அச்சம் இல்லாமல் அது நீக்கப் பெறும் நிலை. நம்மை அஞ்சேல் என்று அருள வல்ல இறைவனைத் திருவாசகம், "அச்சம் தீர்த்த சேவகன் வாழ்க" என்று போற்றுகிறது. அவ்வாறு அஞ்சேல் என்று அபயம் அளிக்கும் கரத்தை , அபய கரம் என்றும் அபய ஹஸ்தம் என்றும் போற்றுகிறோம். கடவுளர்களின் திருவுருவங்கள் இந்நிலையிலேயே இருக்கக் காண்கிறோம். மயிலாடுதுறையில் அம்பிகை, அபயாம்பிகை எனப்படுகிறாள். அஞ்சல் என்று பக்தர்களுக்கு அருள வல்ல நாயகியாதலால் இப்படி அழைக்கப்படுகிறாள்.
பயத்தில் தான் எத்தனை வகை! பிறப்பு முதல் இறுதி வரை ஏதாவது ஒரு காரணத்திற்காக பயப்பட வேண்டியிருக்கிறது. நோய் வாய்ப்படும்போதும், கடைசி காலத்திலும் இந்த பயம் அதிகரிக்கிறது. நாத்திகனும் இறைவனை அப்போது நினைக்க வேண்டியிருக்கிறது. இதைத் தான் ஞானசம்பந்தரும், "நோயுளார் வாயுளான்" என்றார். உண்மையில், இதுவும் ஒருவகையில் அருள் என்றே தோன்றுகிறது. " எனது உறு நோய் தொடரினும் உன கழல் தொழுதெழுவேன்" என்றார் சம்பந்தப் பெருமான். அந்த உறுதிப்பாடு நமக்கு எந்த காலத்திலும் வருவதில்லையே. "வேண்டாத தெய்வம் இல்லை ; கஷ்டம் இன்னும் தீர்ந்தபாடு இல்லை; தெய்வம் இன்னும் கண் திறக்கவில்லை" என்று சொல்லி, பழியைத் தெய்வத்தின் மீது தானே போடுகிறோம்! "வ்யாதிநீனாம் பதயே நம" என்று ஸ்ரீ ருத்ரம் சொல்வதால், நோய் அருளி அதன் தலைவனாகவும் ஆகி அதன் மூலம் நம்மை ஆட்கொள்கிறான் என்றே சொல்லவேண்டும். இந்த நினைப்பு வந்துவிட்டால் , நம்மை விட்டு மரண பயம் போய் விடும்.
செய்யும் தொழிலிலும் பயம் தேவைப்படுகிறது. அத்தொழில் இறைவனோடு சம்பந்தப்படும் போது பயத்தோடு பக்தியும் இணையவேண்டும். இதைத்தான் பயபக்தி என்றார்கள் போலும். கையில் செல்வமும் பிற பலங்களும் சேர்ந்துவிட்டால் ஆணவம் ஓங்கி, அச்சம் சிறிதும் இல்லாமல் போய்விடுகிறது. இராவணன் கூட இப்படித்தான். கைலை மலையையை அச்சம் இன்றி , ஆணவத்தோடு தூக்கினான். அதற்கான தண்டனையையும் பெற்றான். இதனால் கயிலைமலை சற்று அசையவே, உமா தேவி பயந்தாளாம். அப்போது, கயிலாயநாதன் தன் தேவியை நோக்கி, " காரிகையே, அஞ்சல்" என்று கூறித் தனது விரலால் அம்மலையைச் சற்றுஅழுத்தவே, அரக்கன் நிலைகுலைந்து , தலைகளும்,கைகளும் இழந்து வீழ்ந்தான். இக்காட்சியை அழகாக வருணிப்பார் ஞானசம்பந்தப்பெருமான். அம்பிகை மதுர பாஷனி அல்லவா? அதிலும் யாழை வென்ற மொழியாளும் ஆவாள்.
எனவே,
"பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் ..."
என்ற வரிகள் காட்டுகின்றன.
இப்படிப்பட்ட இறைவன் விரும்பி உறையும் திருவெண்காடு எத்தகையது தெரியுமா?
அருகிலுள்ள கடல் அலைகள் ,முழவோசை போல் முழங்க, மயில்கள் நடமாட, சோலைகளில் வண்டுகளின் ரீங்கார இசை ஒலிப்பச் சிறந்து விளங்குவது அத்தலம்.
திருவையாற்றுப் பதிகத்தில் சம்பந்தர் காட்டும் காட்சியும் இங்கு ஒப்பு நோக்கி மகிழத்தக்கது. நாடகசாலைகளில் மகளிர் நடனம் ஆடும் போது முழவு ஒலிக்கிறது. ( இங்குப் பெண்களாகிய மயில்களின் நடனம். அங்கோ, தோகை விரித்து ஆடும் மயில்களின் நடனம். இங்கு முழவின் ஓசை. அங்கோ, கடல் அலைகளே, முழவோசை என முழங்குகின்றன.) "மடவார்கள் நடமாட,முழவு அதிர" என்பது திருவையாற்றுக் காட்சி. அங்கு முழவோசையை மேகம் இடிப்பதாகக் கருதி, மழை வரும் எனக் கருதித் தோகை விரித்து மயில்கள் ஆடுகின்றன. ஐயாற்றிலோ , அவ்வோசையைகேட்ட சில மந்திகள், மழை வந்துவதாகக் கருதி , அவசரமாக மரத்தில் ஏறி, ஆகாயத்தைப் பார்க்கின்றன என்ற அருமையான வருணனையைப் பார்க்கிறோம்.
முழுப் பாடலையும் இப்போது பாருங்கள்:
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறை கோயில்
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசைமுரலும் வெண்காடே.
This comment has been removed by the author.
ReplyDeletevery nice, sir. I enjoyed reading your article.
ReplyDeleteplease do continue such narration.
thanks
vidhya sagar