பரமேச்வரனுக்குத்தான் எத்தனை எத்தனை
பெருமைகள் ! அவனது பெருமைகளை அவனே அறியமாட்டான் என்கிறார் மாணிக்கவாசகர். அவன் எதைச் செய்தாலும் அழகாகவும் பொருத்தமாகவும்
இருக்கிறது. கங்கையையும் சந்திரனையும் ஏற்ற முடியில் வன்னி, எருக்கு, கொன்றை,
ஊமத்தை ஆகியமலர்களைச் சூடிக்கொள்வதும் அழகுதான். இதற்கிடையில் சீறும் பாம்பையும்
தரித்திருக்கிறான். அதுவும் அவனுக்கு ஆபரணமாகத்தான் திகழ்கிறது. அந்தச் செக்கச்
சிவந்த மேனிக்கு வேறு நிறங்களும் அலங்காரமாகத்தான் அமைகின்றன. பால் போன்ற தூய
வெண்ணீறு உத்தூளித்த மேனியனாகத் தோன்றுகிறான். கொடிய விஷத்தைக் கண்டத்தில்
அடக்கியதால் அப்பகுதி நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது. இப்படி வண்ண வண்ண
மேனியனாகவும் வண்ண மலைகளைச் சூடியவனாகவும், கங்கையும், பிறையும் பாம்பும் சூடிய
செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியாகவும் திகழ்கிறான் பரமன்.
சிவபரம்பொருளின் பெருமைகள் அளவிடமுடியாதவை. நாம் உய்ய வேண்டும்
என்பதற்காகவே புராணங்களும் அருள் நூல்களும் சில பெருமைகளை நமக்கு உணர்த்துகின்றன.
இந்த வகையில், தேவார திருவாசகங்கள் மூலம் நாம் அறியக்கூடிய செய்திகள் ஏராளம்.
கலயநல்லூர் என்ற தலத்தின் மீது அமைந்துள்ள சுந்தரர் தேவாரத்தை எடுத்துக்காட்டாக
இங்கு கூறலாம். இத்தலம் கும்பகோணத்திற்கு அண்மையில் சாக்கோட்டை என்ற இடத்தில்
இருக்கிறது. இப்பதிகத்தில் பாடல் தோறும் புராண வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.
ஈசனை அடையவேண்டி அம்பிகை தவம் செய்தது
,சலந்தரனை வெல்ல வேண்டித் தன் கண்மலரால் சிவபிரானைப் பூசித்துத் திருமாலானவர்
சக்கரம் பெற்றது, மண்ணி ஆற்றங்கரையில்
மணலால் சிவலிங்கம் நிறுவிப் பசுக்களின் பாலால் அபிஷேகித்துப் பூஜை செய்த பாலன்
மீது அவனது தந்தை வெகுண்டு பால் குடத்தை உதைக்கவே, அவரது கால்களை வெட்டி வீழ்த்திய
பாலனுக்கு இறைவன் காட்சி அளித்துச் சண்டீச
பதம் தந்து அருளியது, உமாதேவியார் விளையாட்டாக இறைவனது கண்களை மூடியதால்
உலகங்கள் யாவும் இருளவே, மூன்றாவது கண்ணைப் படைத்து ஒளிதந்து அருளியது,
தேவர்களுக்காக முப்புரங்களை எரித்தது, தன்னை மதியாத தக்ஷனது யாகத்தைச் சிதைத்து,
தேவர்களைத் தண்டித்தது, கயிலையை எடுத்த இராவணனைக் காலால் அழுத்தியது, மாலயனும்
காண்பரிய நீண்ட தீச்சுடராய் நின்றது, காமனை நெற்றிக் கண்ணால் எரித்தது, முருகனைத்
தோற்றுவித்து அசுரர்களை அழித்துத் தேவர்களைக் காத்தது, பிரமன் வழிபட்டது ஆகிய
புராண வரலாறுகளை இப்பதிகத்தில் எடுத்துக் காட்டுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இறைவன் எல்லாமாகி நிற்பவன் என்பதைக்
கூறுமிடத்து,
“ நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று
ஆகாசம் ஆகி
நிற்பனவும் நடப்பனவாம் நின்மலன் ஊர் ...”
என்பார் சுந்தரர். பெருமானது
பெருமைகளைப் போலவே, அவன் உறையும் தலமும் பெருமை உடையது என்றும் காட்டுவார் அவர்.
அங்குள்ள சோலைகளில் குயில்கள் கூவுகின்றன. அழகிய மயில்கள் குதூகலித்து ஆடுகின்றன.
வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. பசுங்கிளிகள் கிரீச்சிடுவதை, “ சொல் துதிக்க”
என்று சொல்வது அழகிய வருணனை. இப்படிப்பட்ட தலத்தில் வசிப்போரும் பெருமை
உடையவர்களாகத்தானே இருக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் அமிர்தகலச நாதரைத்
தொழுது , தோத்திரம் சொல்லி, நெக்குருகி நின்று கசிந்த மனத்தவர்களாகத் திகழ்கிறார்களாம்
அத்தலத்து அன்பர்கள். இப்படிச் சொல்லும் தேனினும் இனிய தேவாரத்தை இப்போது
காண்போம்:
மால் அயனும் காண்பரிய மால் எரியாய்
நிமிர்ந்தோன்
வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் ;
மொய்த்து எழுந்த
வேலை விடம் உண்ட மணிகண்டன் விடை ஊரும்
விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில்
சோலை மலி குயில் கூவக் கோல மயில் ஆலச்
சுரும்பொடு வண்டு இசை முரலப் பசுங்கிளி
சொல் துதிக்கக்
காலையிலும் மாலையிலும் கடவுள்
அடிபணிந்து
கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர்
காணே .
இத்தலத்து இறைவரைத் தரிசித்து,
இப்பாடலைப் பாடிக் கொண்டிருக்கும்போது, குயிலும்,மயிலும்,கிளியும் குலாவிய ஊர்
இப்படி நிசப்தமாக இருக்கிறதே என்று ஏங்கியபோது மதிலை ஒட்டிய மரங்களிளிலிருந்து
கிளிகள் எழுப்பிய ஓசை கேட்டவுடன் சிலிர்ப்பு ஏற்பட்டது. ஆம்! கிளிகள் இன்னமும்
சொல் துதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. நாம் தான் கசிந்த மனத்தவர்களாக இல்லை.
No comments:
Post a Comment