Wednesday, July 1, 2015

தோன்றும் துணையாகும் கயிலை நாயகன்

திருக்கயிலாய மலை 
எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் நம்மோடு துணையாகக்  கூடவே   இருக்கிறானா என்று சந்தேகம் வரும்போதெல்லாம் ஒரு விஷயத்தை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். கனவிலாவது நனவிலாவது நாம் வணங்கும் தெய்வத்தைக் காணும் அளவிற்கு நாம் தகுதி வாய்ந்தவர்களா   என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வது நல்லது. " உரியேன் அல்லேன் உனக்கு.." என்று மாணிக்க வாசகர்  கூறியது நமக்கே பொருத்தமாக இருக்கிறது. அப்படி இருந்தும் நமக்குத் தெய்வம் எப்பொழுதும் நாம் கேட்டதை எல்லாம் அருள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. நாம் அனுதினமும் பாவங்களே செய்பவர்களாக இருந்தாலும், தன்னைச் சரண் என்று அடைந்துவிட்டால் குற்றங்களைப் பொறுத்து அருள் செய்வது தெய்வத்தால் மட்டுமே முடியும். திருக்கடவூருக்கு அருகில் உள்ள தில்லையாடி என்ற தலத்துக் கோயிலில் சுவாமிக்குச்  சார்ந்தாரைக் காத்த பெருமான் (சரணாகத ரக்ஷகர்) என்று  பெயர்.

சார்தல் என்பது ஒரு நாளோ அல்லது ஒரு குறிப்பிட்ட பலன் கருதியோ சார்தல் அல்ல. "இடையறா  அன்பு எனக்கு உன் ஊடகத்தே நின்று உருகத்தந்து அருள் " என்று திருவாசகம் துதிப்பதால் இறைவனைப் பன்னாள் இடைவிடாது அழைத்தால் ஒருநாள் வெளிப்பட்டு அருளுவான் என்பது கருத்து. அப்படியானால் நம்போன்றவர்கள் அவன் கூட இருப்பதை உணரவாவது முடியுமா என்பது அடுத்த கேள்வி. இதற்குமுன்பு சொன்ன அதே விடையைச் சற்று மாற்றிச் சொல்லி  விளங்க வைக்க வேண்டியிருக்கிறது. அதாவது, நமக்கு " இடையறா அன்பு " இல்லாவிட்டாலும்  அன்பாவது இருக்கிறதா என்பது மிகவும் முக்கியம். அப்படி அன்பு செய்யும்போது மனம் உருகி நியமத்துடன் அவனை எண்ணித் துதிக்கிறோமா என்பது அதைவிட முக்கியம். அந்நேரத்தில் பிற எண்ணங்கள் செயலற்றுப் போய் விடுவது சாத்தியம் ஆக வேண்டுமே!!

அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்ளும்போது சிலருக்கு அது விளங்குவதோடு பயன்படவும் செய்யக்கூடும். எத்தனையோ மைல்கள் கடந்து வந்து விட்டு, உன் தரிசனம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்துடன் மாலையில் வடக்கு நோக்கியவாறு ஜபம் செய்து கொண்டிருந்தபோது அந்த அற்புதக் காட்சி ஆகாயத்தில் தெரிந்தது. வேகமாகச் சென்று கொண்டிருந்த மேகங்கள் நீல வானப் பின்னணியில் ஓரிடத்தில் நின்று அற்புத வடிவம் பெற்றன. படங்களில் மட்டுமே பார்த்துவிட்டு நமது வாழ்நாளிலும் இத்தரிசனம் கிடைக்குமா என்று ஏங்கச் செய்யும் கயிலாய மலையின் அற்புதக் கோலமே அது!!  மாலைக் கதிரவனின் கதிர்கள் அம்மலை (மேகத்தின்) மீது படவே வெள்ளிப் பனிமலையாக அது தோற்றம் அளித்தது. மயிர்க் கூச்செறியச் செய்த  அக்காட்சியைக் கண்டவுடன் வேறு எதையும் காணும் எண்ணம் இல்லாமல் கண்ணீர் மல்க ஜபத்தைத்  தொடர்ந்து பூர்த்தி செய்யும் வரை அக்காட்சி அங்கேயே நிலைகொண்டு இருந்தது. ஆனால் மற்ற மேகங்கள் அதனை மறைத்துவிடாமல்   சென்றது இன்னமும் பிரமிப்பை அதிகரித்தது. உடனே  சுந்தரர் தேவாரத்திலுள்ள  நொடித்தான் மலைப் பதிகத்தை வாய் முணு முணுத்தது. பதிகம் முடிந்த அதே நேரத்தில் எங்கிருந்தோ வந்த கரு மேகங்கள் கயிலாயக் காட்சியை மறைத்து விட்டன.

ஆனால் அடுத்த நிமிடமே, வானில் அக்காட்சி தெரிந்த இடத்திற்குச் சற்றுக் கீழே மட்டும் மற்றும் ஓர் அற்புதம் தெரிந்தது. சுற்றிலும் கரு மேகக் குவியல்களோடு நடுவில் மட்டும் தெரிந்த  நீல வானம் ஒரு பரந்த ஏரி  போலக் காட்சி அளித்தது. கண்களை நம்பவே முடியவில்லை. சக்தி வடிவான மானச ரோவர்  ஏரி எத்தனை அழகாகத் தோன்றியது என்பதை வருணிக்க வார்த்தைகளே இல்லை. அரை நிமிஷ நேரத்தில் இக்காட்சியும் மறைந்து வேகமாக வந்த  கருமேகங்கள் வானில் நீல நிறமே இல்லாதபடி மழைக்கு ஆயத்தம் செய்து விட்டன. "தவமே புரிந்திலன் தண்  மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன்  அவமே பிறந்த அருவினையேன் " என்று மணிவாசகர் கூறியது  நமக்கு மிகவும்  பொருத்தமாக இருந்தும், இறைவன் இவ்வாறு  கருணை செய்வதைக் காணும் போது மனத்தை நெகிழச் செய்தது.
"கருவாகி ஓடு(ம்) முகிலே* போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி"
(*  முகில்= மேகம்) என்ற திரு நாவுக்கரசரது வாக்கு எத்தனை சத்தியமானது என்று அப்போது திருவருள் மூலமாக உணர முடிந்தது.

அப்போது நினைவுக்கு வந்த  சுந்தரர் தேவாரப் பாடல் இதோ:

எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து  என்னோடும் உடனாகி நின்றருளி
இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.

எங்கே சென்றால் என்ன ?  சிவ சிந்தனை நீங்காதிருந்தால்  பெருமான் கூடவே இருப்பதை என்றாவது நமக்கு உணர்த்துவான். அதற்கு நாம் பாத்திரர்களாக வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகச்  சிவனருள் நமக்குக் கூட வேண்டும். நாம் பெற்ற இறை அனுபவம் பிறரும் பெற வேண்டும். அப்போதுதான் நமக்கு இறைவன் தோன்றாத்துணை மட்டுமல்ல , தோன்றும் துணையாகவும் நம்முடன் இருந்து அருள் புரிகிறான் என்பது புரிய வரும்.

1 comment:

  1. அன்புடன் ஆண்டவனைச் சார்ந்திருப்பதால் மட்டுமே ஏற்பட்டிருக்கிற, மனத்தை ஆனந்தத்தில் ஆழ்த்துகிற அனுபவம். உங்கள் சிவ பக்தியும் தொண்டர்சேவையும் அயராது தொடரட்டும்.

    ReplyDelete