Tuesday, April 17, 2018

தானதருமம்

திருநாவுக்கரசர் 
உலகம் இருக்கும் வரை தானமும் தருமமும் இருக்கும். காக்கைக்குக் கூடக் கரந்து  உண்ணும் தன்மை இருக்கும்போது நமக்கு இருக்க வேண்டாமா ? அளவுக்கு அதிகமாகப் பொருள் ஈட்டியவனுக்கும் பிறருக்குக் கொஞ்சமாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை. அதேபோலத்  தனக்கு எவ்வளவு தான் பணம் வந்தாலும் அடுத்தவனுக்கு வருவதில் முழு அளவில்லாவிட்டாலும் அதில் ஒரு பங்காவது கொடுக்க மாட்டானா என்று   போராடும் மனோபாவம் இருப்பவர்களும் உண்டு. தனக்கு மிஞ்சியதை எல்லாம் தானம் செய்யாத மனநிலை வந்துவிட்டதால், பழமொழியைத்  தனக்கு வசதியாக, " தனக்கு மிஞ்சினால்தான் தான் தான தருமம் " என்று மாற்றிக் கொள்கிறார்கள். அதை ஆயிரம் கோடி சம்பாதித்தவனும் சொல்லலாமா? தானம்  செய்யத் தனக்கு இறைவன் தந்த உயர்ந்த வாய்ப்பாகக் கொண்டு தருமசாலியாக வாழலாமே ! 

ஒருவரிடம் சென்று யாசித்தலை " இரத்தல் " என்கிறோம். வறியவனாக இருந்து யாசிப்பவனைப் பிச்சைக் காரன் என்கிறோம். முன்பெல்லாம் இராப்பிச்சைக்காரனும், கையில் சொம்பு ஒன்றை ஏந்தியபடி சுடும்  உச்சி வெய்யிலில் சாலைகளில் உருண்டு வந்து பிச்சை எடுப்போரையும் பார்த்திருக்கிறோம். சிறுவயதில்  வீட்டு வாசலுக்கு வந்த  ஒரு இராப்பிசைக்காரன்  " அம்மா, பிச்சை போடுங்கம்மா " என்றவுடன், " எங்கம்மாவை நீ எப்படி அம்மா என்று கூப்பிடலாம் என்று நான் அவனிடம் சண்டைக்குப் போனதாக எனது தாயார் சொன்னது நினைவுக்கு வருகிறது.  இப்போது கோயில் வாசலிலும் மக்கள் கூடும் இடங்களிலும் பிச்சைக்காரர்கள் இருப்பதைப் பார்க்கிறோம். விடியற்காலையில் வரும் குடுகுடுப் பாண்டிகளையும் இப்போது காணோம். நரிக்குறவர்களைப் பார்ப்பதும் அரிதாகி விட்டது. ஆகவே பிச்சை எடுப்பது குறைந்தாலும், யாசகம் என்பது கடன் என்ற பெயரில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. 

பிச்சை புகினும் கற்கை நன்றே என்று சொன்னாலும் சொன்னார்கள், வங்கிகளில் கடன் வாங்கியாவது படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். கடன் என்பதும் ஒருவகையில் கௌரவப் பிச்சை தான். அதற்கு சமாதானமாக எவ்வளவு சொன்னாலும் கடன் கடன் தானே !அதில் ஒரே வித்தியாசம்  வட்டியுடன்  திருப்பித் தர வேண்டும் என்பதே. மனசாட்சி உள்ளவர்கள் திருப்பித் தருகிறார்கள். மற்றவர்களோ சட்டமே ஒன்றும் செய்ய முடியாதபோது நாம் ஏன் திருப்பித் தரவேண்டும் என்று ஏமாற்றத் தயாராக இருக்கிறார்கள். 

தானம் என்பது இரக்கத்தின் வெளிப்பாடு. தனது கண்ணில்  குழிவிழுந் தவன் யாசகம் கேட்கும்போதும் மனம்  இர ங்காமல் முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்பவர்கள் உண்டு.  " கண் குழிந்து இரப்பார்க்கு ஒன்று ஈயேன் "  " சிறுச் சிறிதே இரப்பார்க்கு ஒன்று ஈயேன் " என்பன சுந்தரர் தேவார வரிகள். மண் தானம், பொன் தானம் , கன்னிகா தானம் ,கோ தானம் என்று எத்தனையோ தானங்கள் இருந்தாலும் அன்ன தானம் சிறந்தது என்பார்கள். அதிலும்  மதி சூடும் மகாதேவனின் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பதை அறுபத்து மூவரில் பலர்  செய்தருளியிருக்கிறார்கள். 

பிக்ஷாடன மூர்த்தியாக வந்த பரமேசுவரனை, " பிச்சைத் தேவா "  என்று அழைக்கிறது திருவாசகம். ஆனால் பெருமான் பிக்ஷைக்காக வந்தது உணவை ஏற்று உண்பதற்கல்ல. தாருகாவனத்தில் பிச்சை எடுத்தது போலத் தோன்றினாலும், அங்கிருந்த நாற்பத்தொன்பதாயிரம் முனிவர்களுக்கும் ஞானப்பிச்சை போட்டருளினான் அல்லவா ?   உண்ணாது உறங்காது இருக்கும் பிரான் இவ்வாறு ஞானோபதேசம் செய்ய எழுந்தருளியபோது, பிக்ஷாடனமூர்த்தியாகத்  தோன்றினான். 

எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் யாசகம் கேட்பவர்களுக்கு முடிந்த வரையில் உதவ வேண்டும். நான் கஷ்டப் பட்டு சம்பாதித்ததை தானம் செய்வதா என்று எண்ணுகிறார்கள். காஞ்சிப் பெரியவர்கள் ஒரு சமயம் சொன்னார்கள் " நான் சம்பாதித்தது என்று எண்ணாதே. அவை அனைத்தும் இறைவனுக்கு சொந்தம். அவனே எஜமானன். நீ முற்பிறவிகளில் செய்த நற்பயன்களின் பயனாக உன்னை ஈசுவரன் அதற்கு டிரஸ்டியாக நியமித்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம் . ஆயுள் முடிந்தவுடன் அதை விட்டுச் செல்லத்தான் வேண்டும்  அதை உன்னிடம் கொடுத்ததன் காரணம் நீ பிறரூக்கு அதைக் கொண்டு தான தருமங்கள் செய்ய வேண்டும் என்பதே. "   

" இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் 
   * கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார் ...." 

( * கரப்பவர்: பிறருக்குக் கொடாமல் தனக்கு மட்டுமே செல்வம் உரியது என்று அதனை மறைத்து வைத்துக் கொள்பவர்கள் )

என்று திருவையாற்றுத் திருப்பதிகத்தில் அருளிச்செய்கிறார்  திருநாவுக்கரசர்.   

1 comment:

  1. ஏற்பது இகழ்ச்சி என்ற பழமொழியை அறிந்தும் வேறு வழி காணாது எண்சாண் உடல் குறுகி நான்கே சாணாக வந்து நிற்பவரை அன்புமுகம் காட்டி ஐயமிட்டுப் பின்னரே மனையவர் உண்ணவேண்டும் என்னும் பொருள் பட, அதே பழமொழி வரிசையில் அடுத்ததாக ஐயமிட்டுண் என்ற பழமொழியும் அழகுற வாய்த்திருக்கிறதல்லவா? மாதா, பிதா, ஆசாரியருக்குப் பின் அதிதியையே கடவுளாகக் கருதச்சொல்லி உபனிடதங்கள் ஒலிக்கவில்லையா? உங்கள் கட்டுரை அருமையான கருத்தை அறிவுறுத்துகிறது.

    ReplyDelete