Wednesday, September 12, 2018

அன்னையும் அத்தனும் ஆவான்

யார் வரைந்த  ஓவியமோ தெரியவில்லை. தாயின்  கண்களில் எழுகின்ற  கருணை வெள்ளம் ,  தான் ஈன்றெடுத்த மகளின் மீது பாய்வதை அற்புதமாகக்  காட்டியிருந்தார் அந்த ஓவியர். அக்குழந்தையும் வைத்த கண் வாங்காமல் அன்னையை நோக்குவதாக அச் சித்திரம் உருவாகியிருந்தது. தான் ஈன்ற முட்டைகளைத் தாய் மீன் நினைத்த அளவில் அவை காக்கப்பட்டு, மீன்குஞ்சுகளாகி நீந்தத்துவங்கிப் பசியாறியதும் தாமே இரை தேடத் துவங்கும் எனப்  பெரியோர். கூறுவர். தற்காலச் சூழ்நிலையில், அன்னையை மறக்கும் தனயர்கள் இருப்பது ஆச்சர்யமில்லை. ஆனால் தனயரை மறக்கும் தாய்மார்கள் இருப்பதும் உண்டு. தாய்ப்பாசத்தை இழந்து தவிக்கும் அவர்களைப் பற்றி எத்தனை அன்னையர்கள் கவலைப் படப் போகிறார்கள் ?  அதனால் தான் உலகிற்கே அம்மையப்பராக விளங்கும் இறைவனைப் பாடும்போது,  "  தாயும் நீயே, தந்தை நீயே " என்கிறார் , அன்னையிடம் சிவஞான அமுதம் உண்ட ஞானசம்பந்தர். 


சீர்காழித் திருக்குளக் கரைக்குத் தந்தையுடன் வந்த அச் சிறு குழந்தை, சிறிது நேரத்தில் தந்தையார் நீரில் மூழ்கி அகமர்ஷன ஜபம் செய்து கொண்டிருந்தபோது. பசி மேலிட்டு அழத் துவங்கினார். அப்போது இறைவனது அருட்சக்தியாகிய சிவசக்தி அங்கு சென்று அக்குழந்தைக்குப் பால் தந்தவுடன் அப்பாலகனுக்குப் பசி தீர்ந்தது. பின்னர் கரை எறிய தந்தை,  "யார் தந்த பாலை உண்டாய் " என்று சினந்து கேட்க, அம்மையப்பர்களது அருட்கோலத்தை அடையாளங்களுடன் அவருக்குக் காட்டித் " தோடுடைய செவியன் " என்று தேவாரப் பதிகம் பாடினார் என்ற வரலாறு பலருக்கும் தெரிந்திருக்கும். அவ்வரலாற்றை சேக்கிழார் வாயிலாகக் காண்பதே பேரின்பம் தருவது. மூல நூலைப் படித்தால் இதன் அருமை பெருமைகள் விளங்கும். 

மேற்கண்ட நிகழ்ச்சியை விளக்கும்  அற்புதமான  பாடல்கள் அவை. இறைவனது பேரருளையும் இறைவியின் கருணையையும் ஒருசேர விளக்கும் அப்பாடல்களில் எத்தனை முறை    "அருள் " என்ற சொல் கையாளப் பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்:


அம்பிகைக்குப் பிள்ளையாரைக் கண்டவுடன் திருவுள்ளத்தில் அருட் கருணை எழுகிறது.   வேதங்களையும் ஏழுலகங்களையும் ஈன்றருளி அவ்வனைத்திற்கும் காரணமாய வடிவுடை நாயகி, சிவபெருமான் தம்மை அப்பாலகனுக்குத் திருமுலைப்பாலைப்  பொற்கிண்ணத்தில்  அளித்தருளுமாறு கூறியருளியவுடன், இமயவல்லியாகிய தேவியானவள், அச் சிறுவனிடம் சென்று பாலமுதைக் கறந்தருளினாள் என்கிறார் சேக்கிழார் பெருமான்

ஆரணமும் உலகேழும் ஈன்று அருளி அனைத்திற்கும்                                                                                                         
காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவான                                                                                                                     
  சீரணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து                                                                                                           
வாரிணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்து அருளி 

எப்படிப்பட்ட பாலமுது அது  தெரியுமா?  எண்ணுவதற்கே எட்டாத சிவஞானம் கலந்த பால் என்பதால், அதனை, " எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் " என்று சிறப்பிக்கிறார் தெய்வச் சேக்கிழார். சிவஞானத்தைப் பாலில் குழைத்து அருளினாளாம் சிவானந்த வல்லியாகிய ஞானாம்பிகை. இதனை உண்பாயாக என்று அப் பொற்கிண்ணத்தைக்  குழந்தைக்குத் தரும்போது அம்பிகையை வைத்தகண் வாங்காமல் பார்த்ததாம் அக்குழந்தை. 

தன்னை எதிர் நோக்கிய அக்குழந்தையின் கண்களில் பசியால் எழுந்த கண்ணீரைத் துடைத்தருளினாள் அக்கருணாம்பிகை . அக்குழந்தையின் கையில் பொற் கிண்ணத்தை அளித்தவுடன் பேரருள் பெற்ற பாலகனது அழுகை தீர்ந்தது. இவ்வாறு அங்கணனாகிய சிவபெருமான் அருள் புரிந்தார் என்று பக்திச் சுவை சொட்டுமாறு நமக்கு வழங்கி அருளுவார் சேக்கிழார் பெருமான் 

எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்து அருளி                                                                                                
 உண்ணடிசில் என ஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்                                                                                                         
 கண்மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொற் கிண்ணம் அளித்து                                                                                       
 அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள் செய்தார்

இவ்வாறு தந்தை அருளலும் தாய் விரைந்து சென்று தாமும் அருளுவதைக் காணும் போது   " அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்  " என்ற சைவ சித்தாந்த நூல் வாக்கியம் நினைவுக்கு வருகிறது. சுவாமிக்கு ஜகதீசுவரர், மாத்ரு பூதேச்வரர் என்று நாமங்கள் வழங்கப்படுவதுபோல், அம்பிகைக்கும் சர்வ ஜன ரக்ஷகி, சர்வலோக ஜனனி என்ற நாமங்கள் வழங்கப்படுகின்றன. திரு வலிதாயம் (பாடி) என்ற தலத்தில் தாயம்மை (ஜகதம்பிகை) என்று அம்பிகை வழங்கப்படுகிறாள். தாய் தந்தையர்களை இழந்தோ அவர்களது அன்பை இழந்தோ வாடுபவர்கள் பார்வதி-பரமேச்வரர்களை  வணங்கும்போது அத்துயர் நீங்கப்பெற்று மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவார் என்பதையும் நினைவு கொள்ள வேண்டும். 

" அன்னையும் அத்தனும் ஆவாய் அழல் வண்ணா நீ அலையோ ? "

- திருநாவுக்கரசர் தேவாரம். 

2 comments:

  1. அருமையான உரை, அன்புள்ள சேகர்.
    கல்லூரி நாட்களில் பிள்ளையாரப்பனைக் குறித்து அன்போடும் குறையறிவுடனும் கற்பனை செய்த ஒரு நாங்கு வரிக் கவிதை இன்று நினைவுக்கு வரவே, இப்போது ஜயந்தி நிவேதனத்தின் போது பாடக் கிடைத்தது. உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். குறைகளை மன்னித்து அனுபவிக்கவும்.
    அன்புடன் தேசிகன்.
    தாயென்றால் தந்தையருள் தம்பியுடன் போட்டிக்குப்
    போவென்றால் சுற்றத்தான் செய்தனையுன் பெற்றோரை!
    தங்கையமுதூட்டத் துதிக்கை பெற்றருளப்
    பொங்க வையுன் மாமி யருள்.

    ReplyDelete
  2. மிக மிக அழகு சிவாய நமஹா

    ReplyDelete