பரமேசுவரன் கருணையே வடிவானவன். அதனால்தான் அவனைப் பெரிய புராணம், “
கருணையே வடிவம் ஆகி “ என்று போற்றுகிறது. தன்னைச் சரணாக அடைந்த தனது அடியார்கள்
வேண்டிய அனைத்தையும் வழங்கும் வள்ளலாக இருந்தாலும் தன்னிடம் எதுவுமே இல்லாதவனாக அத்தனையையும்
வழங்கிவிடுவதால் தியாகராஜன் என்று அப்பெருமானை அடியார்கள் நெக்குருகிப்
போற்றுகின்றார்கள்.
ஏழை அடியார்கள் மனம் உருகி அர்ப்பணிக்கும் அபிஷேக ஜலத்தையும்,
வில்வம்,தும்பை,கொன்றை ,ஊமத்தை போன்றவற்றையும் உவகையோடு ஏற்கும் பரமன் உன்மத்த
வேடம் கொண்டு பேயாடு காட்டில் கீதம் உமை பாட இரவில் ஆடுகின்றான். இப்படி எதுவும்
இல்லாதவன் போல் ஏன் நாடகம் ஆடவேண்டும் என்று பக்தர்கள் அவனுக்காக நெஞ்சம்
பதைபதைத்து உருகுகிறார்கள். ஆனால் அவனுக்கோ இவை யாவும் திருவிளையாடல் போலும் !
சங்கநிதியும் பத்ம நிதியும் கொண்ட குபேரன் சிவபிரானுக்கு உற்ற தோழன்.
அடியார்களுக்காகப் பரியும் இறைவனது
கண்ணசைவு கண்டு செல்வத்தை வாரி வழங்கத் தயாராக இருக்கிறான். பெருமானின்
திருவுள்ளக் குறிப்பறிந்து அன்னபூரணி தேவி, அடியார்களுக்கு எடுக்க எடுக்கக்
குறையாத அன்னம் அளிக்கக் காத்திருக்கிறாள். நவக்கிரகங்கள் பெருமானது ஆணைக்காகக்
காத்திருக்கின்றன. அவனை வணங்காத தேவர்கள் இல்லை.
ஆனால் அவனோ எல்லோருக்கும்
மேற்பட்டவன் ஆதலால் சேர்ந்து அறியாக் கையன். இத்தனை பெருமைகள் இருந்தும் ஏதும்
இல்லாததுபோல் ஸ்திரமாக இருப்பது விசித்திரம் தான்!
பரமேசுவர பத்தினியாகிய அம்பிகை காஞ்சியில் அரும் தவம் செய்தாள்.
முப்பத்திரண்டு அறங்கள் செய்தாள். பசிப்பிணியே இல்லை என்னும்படியாக அறம் செய்ததால் தர்ம சம்வர்தனி ஆனாள். உலகத்து
உயிர்கள்பால் அவள் கொண்ட கருணை ஈடற்றது.
ஆகவேதான் ஸர்வ ஜனரக்ஷகி என்றும் ஸர்வ லோக ஜனனி என்றும் அக்கற்பகவல்லிக்குப்
பெயர்கள் வந்தன.
பஞ்சாரண்ய க்ஷேத்ரங்களுள் ஒன்றான ஆலங்குடிக்குத் திருஞானசம்பந்தர்
எழுந்தருளுகிறார். பூளைச் செடியை ஸ்தல விருக்ஷமாகக் கொண்டபடியால் அத்தலம் திரு
இரும்பூளை எனப்பட்டது. இத்தலத்தின் மீது அமைந்துள்ள பதிகம் பல கேள்விகளை அடியார்களை
நோக்கிக் கேட்பதாக அமைந்துள்ளது. ஆகவே இதனை வினாவுரை என்பார்கள். ஞானமே வடிவான
ஞானசம்பந்தப்பெருமான் சிவபக்திச் செல்வர்களான அவ்வூர் அடியார்களைப் பார்த்து
இறைவனது பெருமைகளைக் கூறி வியந்தவர்போல் வினவுகிறார். இதேபோல் திருக்கண்டியூரிலும்
அடியார்களை நோக்கி வினவும்போது, “ வினவினேன் அறியாமையில் உரை செய்ம்மின் “
எனப்பாடுவார். இப்படிப் பாடுவதால் அவர் அறியாதவர் ஆகார். சிவ கீர்த்திகளை
அடியார்கள் வாயிலாகக் கேட்பதும் இன்பம் தர வல்லது என்பதால் அவ்வாறு வினவினார்.
இப்போது திருஇரும்பூளைப் பதிகப் பாடல் ஒன்றை சிந்திப்போம்.
“ நச்சித் தொழுவீர்காள்
நமக்கு இது சொல்லீர்
கச்சிப்பொலி காமக்கொடியுடன்
கூடி
இச்சித்து இரும்பூளை இடம்
கொண்ட ஈசன்
உச்சித்தலையில் பலிகொண்டு
உழல் ஊணே . “
நச்சுதல் என்பது என்றும் எப்போதும் மறவாது தொழுதலைக் குறிப்பது.
“ இச்சையாகி மலர்கள் தூவி
இரவோடு பகலும் தம்மை
நச்சுவார்க்கு இனியர்போலும்
நாக ஈச்சரவனாரே .” என்பது அப்பர் சுவாமிகள் வாக்கு திருக்குறள் உரையாசிரியர்களுள்
ஒருவர், நச்சினார்க்கு இனியர் என்பதும் இங்கு நினைவு கொள்ளத் தக்கது.
எனவே நச்சித் தொழும் அடியார்களது பணியையும் சம்பந்தர் இங்கு அமைத்துப்
பாடுகின்றார். அப்படிப்பட்ட அடியார்களே பெருமானது பெருமைகளையும்,கருணையையும் இரவு
பகலாக நினைந்து கண்ணீர்வார உருகுவார்கள்.
இனி, “ கச்சிப் போலி
காமகொடி” என்றதைப் பார்க்கும்போது மனம்
ஆனந்த வெள்ளத்தில் திளைக்கிறது. காஞ்சி என்பது கச்சி என்றும் வழங்கப்
படும். கச்சி ஏகம்பன் என்கிறோம் அல்லவா! காம கோட்டத்தில் அரும் தவம் இயற்றும்
அம்பிகை அன்னபூரணியாக அனைத்து உயிர்களுக்கும் பசிப்பிணியைப் போக்கும்போது இறைவனோ
ஏதும் இல்லாதவன்போல் நாடகம் ஆடி தாருகாவனத்தில் பிரம கபாலத்தில் பிக்ஷை எடுக்கச்
செல்வானேன் என்பதை கருத்தில் கொண்டு நமது ஆசார்ய மூர்த்திகள் வினவுகின்றார்.
இதே கருத்தை சுந்தரரும், “ தையலாள் உலகு உய்ய வைத்த காரிரும்பொழில்
கச்சி மூதூர்க் காமக் கோட்டம் உண்டாக நீர் போய் ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே “
என்று பாடுகிறார்.
ஏதும் இல்லாதவன் போல்
இறைவன் நாடகம் ஆடுவதையும், ஏதும்
அறியாதவர்போல ஞானத்தின் திருவுருவாகிய திருஞானசம்பந்தர் வினவுவதையும் பார்க்கும்போது இவ்விரு நாடகங்களையும் கண்டு
குதூகலிக்கும் நாம் அன்றோ பாக்கியசாலிகள் என்று நினைக்கத் தோன்றுகிறது.
No comments:
Post a Comment