Monday, July 13, 2020

தமிழ்ச் சொல்லும் பொருளும்
நம்மில் பலருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை. ஆங்கிலச் சொற்கள் பலவற்றுக்கு நேரான தமிழ்ச் சொல் இல்லை என்ற எண்ணம். இதையே நாமும் திரும்பிச் சொல்ல முடியும். தமிழில் உள்ள சொற்கள் பலவற்றுக்கு ஆங்கிலத்தில் நேரான சொற்கள் உண்டா என்று. சில வார்த்தைகளும் அப்படித்தான். உதாரணமாக, நீங்கள் உங்கள் தந்தைக்கு எத்தனையாவது மகன் என்பதை ஆங்கிலத்தில் சொல்லக் சொன்னால் தடுமாறுவர். சில சமயங்களில் நமக்குத் தெரியவில்லை என்றால் பழியை மொழியின் மீது போடுவோம்.

முதலில் தமிழ்ச் சொற்களைப்  பிரித்து வாசிப்பதிலேயே நமக்கு அடிக்கடித் தடுமாற்றம் வந்து விடுகிறது. சிலர் தேவை இல்லாதபோதும் எளிதாகப் புரிய வைப்பதாக நினைத்து மொழியைப் பிளந்து காட்டுகிறார்கள். இப்போது வெளியிடப்படும் சமய நூல்கள் பலவும் இந்த கதிக்கு ஆளாகின்றன. தேவை அற்ற இடங்களில் அபத்தமாகப் பிரித்துப் புத்தகம் வெளியிடுகிறார்கள். எதுகை, மோனை ஆகியவற்றோடு பாடப்பெற்ற பாடல்கள் இவ்வாறு சந்தி பிரிக்கத் தெரியாதவர்களால் சித்திரவதைக்கு உள்ளாகிறன.

அண்மைக்  காலத்தில் அச்சாகி வெளியிடப்பட்ட திருவாசகப் பிரதி ஒன்றைப்  பார்க்கையில் மேற்கண்ட கருத்து வலுப்பெற்றது. படிப்பவர்கள் அப்படி ஒன்றும் தமிழறிவு சுத்தமாக இல்லாதவர்கள் அல்ல என்பதை இப்பதிப்பாளர்கள் உணர வேண்டும். தாளிணை என்பதை வேண்டுமானால் தாள் இணை என்று பிரித்துக் கொள்ளட்டும். அருளியவாறு என்ற சொல் கூடத்  தெரியாதவர்களா நூலைப் படிக்கப் போகிறார்கள் ? எவ்வாறு பிரித்து அச்சிட்டிருக்கிறார்கள் தெரியுமா ? "அருளிய ஆறு "  என்று. எளிதில் விளங்க  வைப்பதாக நினைத்துக் கொண்டு  குழப்பி விடுகிறார்கள்.. ஆறு என்பது எந்த ஆற்றைக் குறிக்கிறது என்று ஒருவர் கேட்பார். அதற்கு ஒருவர் கங்கை என்றும் மற்றொருவர் காவிரி என்றும் உரை எழுதத் துவங்குவார். " ஐயன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் " என்று மணிவாசகர் பாடியுள்ளதை         " அருளிய ஆறு ஆர் பெறுவார் " என்று வெளியிட்டிருப்பது தற்காலத் தமிழ் அறிவு எவ்வாறு உள்ளது என்பதற்கு உதாரணமாக உள்ளது.

பல்லாண்டுகள் முன்னர் திருவாசக முற்றோதுதல் ஒன்று நடைபெற்றது. அதைக் காணச்சென்றிருந்தேன் . ஓதுவா மூர்த்திகள் ஒரு பாடலில் வரும் சொல் ஒன்றைப் பிரித்துப் பாடியபோது குழுமியிருந்தோர் அனைவரும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. " போனகமாக நஞ்சுண்டல் பாடி " என்பதை நஞ்சு உண்டல் பாடி என்று பிரித்துப் பாடியிருக்கலாம். ஆனால் அவரோ, " நம் சுண்டல் பாடி " என்று பாடினார். சிரிக்காமல் என்ன செய்வது !!

நிலைமை இவ்வாறு இருக்கும்போது, தமிழில் நேரான சொல் இல்லை என்ற கருத்தைக் கூற முன்வருவது பரிதாபம்.

குழு வேறு . கூட்டம் வேறு. கூட்டம் கூட்டமாகத் தொடர்ந்து வந்தபடி இருப்பது வேறு.  இதனை ஆங்கிலத்தில் முறையே group , crowd , swarm என்று ஓரளவு பொருள் காணலாம். swarm என்பதற்குக்  கூட்டம் கூட்டமாகத் தொடர்ந்து வருதலைக் குறிப்பதாகப் பொருள் காண்கிறோம். swarm of bees என்ற சொல்லாட்சி பிரபலமானது.  அதனைத் தமிழில் சுருக்கமாகக்  குறிப்பிட  முடியுமா என்று யோசிக்கலாம். பசுக்கூட்டத்தை ஆநிரைகள் என்று வழங்கப்படுவதை அறிவோம். கூட்டம் கூட்டமாகத் திரண்டு படைகள் போல் வருவதை எப்படிக் குறிப்பது? திருவாசகம் வழி காட்டுவதைப் பார்ப்போம்.

திருப்பள்ளியெழுச்சியில் ஒரு பாடல். உதயற்காலத்தில் கீழ்த்திசையில் அருணோதயம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சூரியோதயமும் நடைபெறுகிறது.இருள் அகல்கிறது. சிவபெருமானின் மலர்த் திருமுகம் போன்ற சிவந்த நிறத்தில் கதிரவன் உலகம் உய்ய வெளிப்படுகிறான். பெருமானது வலது கண்ணே ஆதித்தன் அல்லவா ? உயிர்கள் உய்யும்  பொருட்டாக மட்டுமல்லாமல், தாவரங்களும் மகிழ்ச்சியுற அவ்வாறு எழுகிறான். தாமரை மலர்ந்து பகலவனை வரவேற்கிறது. அம்மலரைக் கண்டு அதனிடம்  தேன் பருக வரும் ஆறு கால் வண்டினங்கள்  குதூகலிக்கின்றன. வைகறைக்காலத்தில் திருப்பெருந்துறை உறை  சிவபெருமானை அருள் நிதி தர வரும் ஆனந்த மலையாகப் பரவி அலைகடலாக அன்புடன் அழைத்துப் பள்ளியெழுந்தருளுமாறு துதிக்கிறார் மாணிக்க வாசகப் பெருமான்.

ஆறு கால்களை உடைய வண்டுகள் கூட்டம் கூட்டமாக வந்து மலர்களை மொய்ப்பதைத் திரள் திரளாக வருவன என்பார் வாதவூரர்.எனவே அவற்றை, " திரள் நிரை  அறுபதம் முரல்வன " எனப்பாடியருளுகிறார்.

அப்பாடல் முழுதும் வருமாறு:

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

அகன்றது ; உதயம் நின்  மலர்த்திருமுகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ நயனக்

கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்

திரள் நிரை  அறுபதம் முரல்வன இவையோர்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே

அருள்நிதி தரவரும் ஆனந்தமலையே

அலைகடலே  பள்ளி யெழுந்தருளாயே .


திரள் என்பது திரண்டு நின்ற தன்மையைக் குறிப்பதாகும். ஞானமே திரண்டு ஏக உருவில் நிற்பதால் அண்ணாமலையானை, " ஞானத் திரளாய் நின்ற பெருமான் "  என்று திருஞானசம்பந்தர் பாடியருளியது இங்கு நினைவு கூறத்தக்கது. 
.
  

4 comments:

 1. இரண்டாம் மொழிப் பாடமாக தமிழை பலர் தேர்வு செயவதில்லை.. தமிழ் பேசுவதோடு நின்று விட்டது...அதனால் படிப்பது மிகவும் குறைவு..

  ReplyDelete
 2. *செய்வதில்லை

  ReplyDelete
 3. திருப்பள்ளியெழுச்சிப் பாடல் விளக்கம் அருமையாக இருக்கிறது.மேலும் மேலும் திரண்டு வந்து நிரையாக வண்டினம் மலரிடம் தேன் பருக விரையும் மனக் காட்சி அழகிய சொற்சித்திரம். விடியற்காலையில் தொண்டர்தம் கூட்டமும் அவ்வாறே இறைவன் திருவடித்தாமரையிடம் சரண்புகுவது இத்ற்கிணைந்த தோற்றமல்லவா?

  ReplyDelete
  Replies
  1. பேரின்பப் பொருளை இதுபோல் விளக்கும் திறன் மிகச் சில ருக்கு இறைவன் தந்த அருட்கொடை.

   Delete