Wednesday, April 22, 2015

காஞ்சிப் பெரியவர்களும் தேவாரமும் - I

காஞ்சி காமகோடிப்  பெரியவர்களுக்குத் தேவாரத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஒதுவாமூர்த்திகளோ அல்லது தேவாரத்தில் ஈடுபாடு உடையவர்களோ தரிசனத்திற்காகச் செல்லும்போதெல்லாம் அவர்களைக் கொண்டு தேவாரம் சொல்லச் சொல்லிக் கேட்பது வழக்கம். அதற்குப்  பிறகு அப்பாடலுக்குப் பெரியவர்கள் தரும் விளக்கத்தை வேறு எங்கும் காண இயலாது.சில சமயங்களில், தேவாரத்தில் இருந்து ஒரு வாக்கியத்தைக் கூறி அதை யார் பாடியது என்று கேட்பார்கள்.

திருவீழிமிழலை,சீர்காழி போன்ற தலப் பதிகங்களில் அவர்களுக்கு இருந்த ஈடுபாட்டைப் பல முறை அனுபவித்தும், கேட்டும் மகிழ்ந்ததுண்டு. ஒருமுறை, "திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கே  சேர்கின்றாரே" என்ற வரியைக் கூறி அது யார் பாடியது என்று கேட்டார்கள்.  இன்னொரு சமயம்,        " சந்தோக சாமம் ஓதும் வாயானை " என்ற பகுதியைக் குறிப்பிட்டுக் கேட்டார்கள்.  சுவாமிக்கு இளநீர் அபிஷேகம் பற்றிய குறிப்பு எங்கே வருகிறது தெரியுமா என்ற கேள்வி தொடர்ந்தது. இவை எல்லாம் அப்பர் சுவாமிகள் அருளிய திருவீழிமிழலைப் பதிகங்களில் காணப்படுபவை. அப்பர் சுவாமிகள் பாடிய திருத்தாண்டகப் பாடல்களைப்  பாடச் சொல்லி மிகவும் விரும்பிக்கேட்பதும் வழக்கம்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் திருவாலங்காட்டில் நடைபெற்ற நவராத்திரியின் போது தேவாரம் முழுவதும் பாராயணம் செய்யச் சொல்லி உத்தரவு ஆயிற்று. ஒன்பது தினங்களிலேயே முடிந்து விட்டதால் எஞ்சியுள்ள பத்தாவது தினத்தில் திருவாசகப் பாராயணமும் செய்யச் சொன்னார்கள். மூவர் தேவாரத்தையும் ஒரே புத்தகமாக இருநூறு ரூபாய்க்கு வெளியிட்டபோது, அதன் விலையை நூறு ரூபாய்க்கு ஒதுவாமூர்த்திகளுக்குக் கொடுக்கும்படி கருணை பாலித்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்..

அண்மையில் ஒரு ஓதுவாமூர்த்திகள் கூறிய தகவலைக் படிக்க  நேரிட்டது. பெரியவரின் சிவிகைக்குப் பின் சென்று  கொண்டிருந்த ஒதுவாமூர்த்திகளை அழைத்து , காஞ்சியில் உள்ள ஏகம்பநாதர் மீதும்,கச்சி மேற்றளியின் மீதும்,திருமுதுகுன்றம் என்ற விருத்தாசலத்தின் மீதும் அமைந்துள்ள பாடல்களைப் பாடுமாறு சொன்னவுடன் ஓதுவாரும் அவ்வாறே பாடி, பெரியவரின் ஆசியைப் பெற்றார் என்பதே அத்தகவல். இம்மூன்று பாடல்களையும் விளக்கி உதவுமாறு நமது ஆப்த நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்கி, திருவருளும் குருவருளும் துணை நிற்க ,அவற்றை இங்கே தர முயல்கின்றோம்.

 நமது துயரங்கள் தீர ஒரு வழியை அப்பர் பெருமான் உபதேசிக்கும் பாடலை முதலாவதாகக் காண்போம். துயரங்களுக்கு மூலகாரணம் பண்டு நாம் செய்த வினைகள் என்பதால் அவற்றிலிருந்து விடுபட்டால்தான் மீண்டும் வினைகள் செய்ய ஏதுவான பிறப்பை வெல்லலாம். அப்படியானால் அதை நாமே நீக்கிக் கொள்ள முடியுமா? ஒருக்காலும் முடியாது என்று திட்ட வட்டமாக அறிவிக்கிறது சைவ சித்தாந்தம். வினை நீக்கம் பெறும் பக்குவம் வரும்போது திருவருள் தானே முன்னின்று வினை நீக்கம் செய்து தூய்மை செய்யும். அப்போது உயிர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். இறைவனது திருவடியே துணை எனக் கொண்டு அதனைக் காண்டலே கருத்தாகி இருக்க வேண்டும். ஒருக்கால் பழவினை நல்லதாகவே இருந்து விட்டால் வினை நீக்கம் எளிதாகி விடுகிறது அல்லவா? அப்படிப்பட்டவர்களுக்கு ஆலய தரிசனம், குருவருள்,அடியவர் இணக்கம், ஆகியவை கிடைப்பது நல்வினைப்பயனால்தான். எனவே அப்பெருமானை மீண்டும் மீண்டும் கண்டு கண்டு, காதற் கசிவோடு களிக்க வேண்டும். அவன் சேவடிக்கீழ் நின்று இறுமாந்திருக்கும் பெருவாழ்வு பெற வேண்டும். இதற்கு என்ன புண்ணியம் செய்தோமோ என்று எண்ணி எண்ணி மகிழ்ந்து திருவருளைப் போற்ற வேண்டும். இதைத்தான் அப்பர் பெருமான் இப்பாடலில்,
" பண்டு செய்த பழ வினையின் பயன்
 கண்டும் கண்டும் களித்தி காண் நெஞ்சமே .."    எனப்பாடுகிறார்.

எனவே ஏகம்பநாதனுக்குத் தொண்டனாகத் திரிந்து பணி செய்ய வேண்டும். அப்பெருமானது ஜடை ,செஞ்சடையாக விளங்குகிறது. (அருண ஜடேச்வரர் என்று திருப்பனந்தாளில் சுவாமிக்குப் பெயர்.) அந்த ஜடாமுடியில் வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. அதாவது இயற்கையிலேயே மணம் வீசும் ஜடாபாரம் என்று  பொருள் கொள்ளலாம். ஏனென்றால் அவன் சூடும் மலர்கள் அத்துணை மணம் வாய்ந்தவை அல்ல. ஊமத்தை, தும்பை,ஆத்தி மலர்களை ஏற்றுக்கொண்டு மணம் வீசும் மலர்களை நமக்கு வழங்கிய தியாகராஜ வள்ளல் அவன்.   அச்சடையே மணம் வாய்ந்ததாக இருக்கும்போது மலர்களைத்தேடிப் போக வேண்டிய அவசியம் வண்டுகளுக்கு ஏது?  வண்டுகள் இறைவனை நாடுவதைப்போலத் தொண்டர்கள் அவனது திருவடிக் கமலங்களை நாடிப் பற்றவேண்டும். கண்டு கண்டு களிப்படைய வேண்டும். அதைக் குருமுகமாகக் காண்பதில் எத்தனை ஆனந்தம் ஏற்படுகிறது ! இதோ அப்பாடல்:

 பண்டு செய்த பழ வினையின் பயன்
 கண்டும் கண்டும் களித்தி காண் நெஞ்சமே
 வண்டுலாமலர்ச்  செஞ்சடை ஏகம்பன்
தொண்டனாய்த்  திரியாய் துயர் தீரவே.

என்பது அந்த அற்புதமான தேவாரப் பாடல்.
( தொடரும் )     

No comments:

Post a Comment