Tuesday, April 14, 2015

திருப்புகலூர்க் காட்சிகள்

திருப்புகலூர் கோயிலும் அகழியும் 
திருப்புகலூர் என்பது தேவார மூவர்களாலும் பாடல் பெற்ற தலம். மயிலாடுதுறையிலிருந்து சன்னாநல்லூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ளது. இங்குதான் அப்பர் சுவாமிகள் சித்தரை சதயத்தன்று சிவ முக்தி அடைந்தார். இங்கு  அக்னி பகவான் பூஜித்ததால் சுவாமி அக்னீஸ்வரர் எனப்படுகிறார். இந்த சன்னதியைத் தவிரவும் மற்றோர் சிவசன்னதி இக் கோயிலுக்குள் உண்டு. அங்கு சுவாமிக்கு வர்த்தமாநீசுவரர் என்று பெயர் வழங்கப்படுகிறது. இம்மூர்த்தியின் மீதும் சம்பந்தர் அருளிய பதிகம் இருக்கிறது. இந்த வர்த்தமாநீசுவர சுவாமியை நாள்தோறும் பல்வேறு மலர்களாலும் மாலைகளாலும் ஆராதித்து வந்தவர் முருக நாயனார் என்பவர். இவரும் அறுபத்து மூவருள் ஒருவர்.

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருப்புகலூருக்கு வந்தபோது அவர்கள் முருக நாயனாரது இல்லத்தில் தங்கியிருந்ததாகப் பெரிய புராணம் கூறும். அவர்களது வருகையைப் பற்றிக் கேள்வியுற்றவுடன் ,  அருகிலுள்ள திருச்சாத்த மங்கை என்ற தலத்தில் வசித்து வந்த திருநீல நக்க நாயனாரும், திருச்செங்காட்டங்குடியில் வசித்த சிறுத்தொண்ட நாயனாரும் திருப்புகலூரை வந்தடைந்து அவர்களை வணங்கி அளவளாவி மகிழ்ந்தனர். சம்பந்தருடன் யாத்திரையில் கூட வரும் திருநீலகண்டப் பாணனாரும், அவரது மனைவியாரான மதங்க சூடாமணியாரும் அப்போது உடன் இருந்தனர். இவ்வாறு, பல நாயன்மார்கள் சந்தித்த தலமாக விளங்குகிறது திருப்புகலூர்.

மலர் கொண்டு மகாதேவனை முருக நாயனார் அர்ச்சித்த சிறப்பைக் காட்ட வந்த சேக்கிழார் பெருமான், அந்த ஊரின் இயற்கை வருணனையை நயம் பட எடுத்துரைக்கும் பாங்கு அறிந்து மகிழத் தக்கது. அது சோலைகளும் பொய்கைகளும் சூழ்ந்த வளம்மிக்க ஊராக இன்றும் காட்சி அளிக்கிறது. கோயிலைச் சுற்றிலும் அகழி இருக்கிறது. அங்கு களங்கமில்லாதவைகளாகக் காட்சி அளிப்பவைகளுள்  நல்லவர்களது மனமும் ஒன்று. களங்கம் உடைய சந்திரன் , அரவு (பாம்பு) வந்து சூழும் போது மேலும் களங்கமாகத் தோற்றம் அளிப்பான் அல்லவா? ஆனால் இங்கோ வெள்ளை வெளேரென்று காட்சி அளிக்கிறானாம். அது தூய வெண்ணீற்றை நினைவு படுத்துவது போல் இருக்கிறதாம். வெண்ணீறு களங்கம் இல்லாதது. " சுத்தமதாவது நீறு " என்று  ஞான சம்பந்தரும்  பாடுவார்.    " பால் வெள்ளை நீறு" என்றும் சொல்வார்கள். அந்த ஒளியில் அங்கு இரவும் பகல் போல் தோற்றமளிக்கிறதாம். அது மட்டுமல்ல. பூக்களில் மகரந்தம் உண்ட வண்டுகளும் களங்கமற்றவை என்கிறார் சேக்கிழார் பெருமான்.

கதிரவன் உதயம் ஆனவுடன் பொய்கைகளில் இருக்கும் தாமரை மொட்டுக்கள் மலரும். அப்போது அவற்றோடு ஒட்டிக் கொண்டிருந்த தண்ணீர் விடுபட்டாலும் ஈரத்தன்மை சிறிது நேரம் இருக்கும். மலரும் மகிழ்ச்சியில் அவை ஆனந்தக் கண்ணீர் அரும்புவதுபோல் இருக்கும் தானே ! ஆனால் அதைக்காட்டிலும் கண்ணீர் வடிப்பன எவை தெரியுமா ? தேவாதிதேவனாகிய சிவபெருமானின் புகழ் பாடும் அமுத கானங்களை ( பாடல்களை ) க் கேட்டு நெக்குருகும் பக்தர்களது முகமாகிய தாமரைகளின் கண்களே.அவற்றில்  இருந்து பெருகும் ஆனந்த நீர் அரும்பும் என்கிறது பெரிய புராணம்.

வண்டு பாடப் புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன

கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல;                                                                                                  
அண்டர் பெருமான் திருப்பாட்டின் அமுதம் பெருகச் செவி மடுக்கும்                    

 தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்புமால்.                                                                                                              
என்பது அந்த நயம் மிக்க பாடல்.

பொய்கையில் மலரும் தாமரையும் நீர் துளிக்கும். தொண்டர்களின் முகமாகிய தாமரையும் பெருமான் புகழ் கேட்ட ஆனந்தத்தில் கண்ணீர்  பெருக்கும். திருப்புகலூரிலோ  பங்கயங்கள் நீர் அரும்பாமல், தொண்டர் முகத்
தாமரைகளே கண்ணீர் பெருக்குவன என்பது மிக்க நயம் வாய்ந்தது.

இத் தெய்வத்தமிழைப் படிக்கும் நமக்கும் ஆனந்த நீர் அருவி கண்களிலிருந்து பெருகவேண்டும். அத்துணைச் சிறப்பு வாய்ந்தது தெய்வச் சேக்கிழாரது வாக்கு. 

No comments:

Post a Comment