Saturday, March 28, 2015

வினை நீக்கமும் இறை உணர்தலும்

" நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் " என்பது, திருநல்லூர் என்ற சிவ ஸ்தலத்தின் மீது திருநாவுக்கரசு நாயனார் அருளிய திருப்பதிகம் ஒன்றின் துவக்கம். இது, நினைதல்  உருகுதல் , நைதல் ஆகிய மூன்று நிலைகளைக் குறிப்பது. முதல் கட்டமாக இறைவனைப்பற்றிய நினைப்பு வர வேண்டும். அதன் பின்னர் அவனை எண்ணி எண்ணி உருக வேண்டும். மூன்றாவதாக, உருகி உருகி மனம் நைந்து குழைய வேண்டும். இது எல்லோருக்கும் சாத்தியமா என்று கேட்டால் இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

ஒரு ஆப்த நண்பர்  " எனக்கு ஆழ்ந்த பக்தி ஏற்படுவதில்லை " என்றார். அவர் நாத்திகர் அல்ல. கோயில்களுக்குக் குடும்பத்துடன் செல்பவர் தான். ஆனால் அவரது ஆன்மீகப்பயணம் அதோடு முடிந்து விடும். நாம் ஏதாவது ஆன்மீக சிந்தனைகளைச் சொன்னால் கேட்கும் குணமும் அவருக்கு உண்டு. அதற்கு அடுத்தபடிக்குச் செல்ல முடியாமல் அத்துடன் நின்று விடுவார்.

நினைப்பு என்பது சிந்தையில் எற்படுவது.இறை சிந்தனையோ தானாகவே         ஏற்படுவதில்லை  .வீட்டில் உள்ளவர்களோ ,பிறரோ  சொல்லிக்கொடுத்து வருவதில்லை. அவர்களால் சொல்லத்தான் முடியுமே தவிர சிந்தையைத் திருத்தி ஆள முடியாது. ஆன்மீக ஈடுபாடு உள்ள ஒரு குடும்பத்திற்குள்  எல்லோருக்கும் ஒரே அளவிற்குத் தெய்வ சிந்தனை இருப்பதில்லை. ஒரு சிலர் அதில் நாட்டம் இல்லாமலே போய் விடுவதும் உண்டு.

 தெய்வத்தைக் காட்ட முடியுமா என்று கேட்பவர்களுக்கு விடையாக, " அவரவர்கள் உணரத்தான் முடியும் " என்று சமாதானம் சொல்கிறார்கள். அவ்வாறு உணருவது என்பது எல்லோருக்கும் சாத்தியமா? நூலறிவால் உணர முடியுமா? நூலின் பொருளை வரிக்கு வரி உரை நூல்களின் துணை கொண்டு படிப்பதால் அறிய முடியுமா? முற்றோதுதல் செய்தால் உணர முடியுமா? அப்படியே செய்தாலும் இன்னும் எத்தனை மணித்துளிக்கு நிறைவு பெறும் என்றுதானே மனம் கணக்குப் போடுகிறது! பாடலின் கருத்தையே ஏற்க முனையாத மனம் எவ்வாறு அதன் உண்மைப் பொருளாக விளங்கும் இறைவனை உணரப்போகிறது?  அப்படி உணரத்துவங்கிவிட்டால் சிவப் பிரகாச சுவாமிகள் சொல்வது போல் கண்கள் நீர் பெருக்கி, மேற்கொண்டு படிக்க முடியாமல் தடை செய்யும் அல்லவா? இந்நிலை ஏற்படாதவரை நினைப்பதோ, உருகுவதோ நைவதோ எங்ஙனம் சாத்தியம் ஆகும் ?

நம்மால் உயரிய நிலையை எட்ட முடியாதபோது நம் சிந்தை எவ்வாறு திருத்தம் பெறும்? இதற்கு விடையாகத் திருவாசகம், " சிந்தையைத் திருத்தி ஆண்ட சிவலோகா " என்பதால் இறைவனது துணையும் அருளும் இல்லாமல் சிந்தை திருத்தம் பெறாது என்பது வெளிப்படை. இதற்குத் தடையாக இருப்பது அவரவர்களது வினை. யாராக இருந்தாலும் அவரவர் செய்த நல்வினை- தீவினைப் பயனை அனுபவித்தே தீர வேண்டும். " அவ்வினைக்கு இவ்வினையாம் " " முந்திச் செய்வினை இம்மைக் கண் நலிய " என்ற தேவார வரிகள் இதையே காட்டுகின்றன.

வினை முழுவதும் நீங்கியவர்களுக்குத் தான் இறையருள் கிட்டுமா எனக் கேட்கலாம். பல்பிறவி எடுத்து, ஓரளவு வினை எஞ்சி நிற்பவர்கள் பால் இரக்கம் ஏற்பட்டு, அவர்களது சிந்தையைத் தாயைக் காட்டிலும் தயை உடைய பரமன் திருக்கண் நோக்கம் செய்கிறான். ஆன்மீக வாதிகளின் முதல் படி இதுவே. அந்தப் பேரருளைத் தந்த இறைவனை மீண்டும் நினைக்காமல் நம் மனம் அதோடு நின்று விடுகிறது. எதை  எதையோ சிந்திக்கத் தொடங்கி விடுகிறது. ஆழ்ந்த பக்தி ஏற்படாததன் முதற் காரணம் இதுதான்.

திருப்பெருந்துறையில் தனக்குத் தரிசனம் தந்த இறைவனை மீண்டும் காண வேண்டி மாணிக்க வாசகர் விண்ணப்பம் செய்கிறார். அவனை எண்ணி எண்ணிக்  கரையவில்லையே, உருகவில்லையே, அவன் புகழ் பாட வில்லையே, பாடி ஆடிக் கூத்து ஆட வில்லையே, பன் மலர்களை  அவனடிக்கு அர்ப்பணிக்க வில்லையே, அவனது நாமம் சொல்வோரும் கசிந்து உருகுவோரும்  எத்தனையோ அடியார் இருக்கும் போது தன்னை ஆட்கொண்ட பெருங்கருணையை எண்ணி,நையாமல் , விழி நீர் பெருக்காமல் மரக் கண் உடையவனாகியும், சிவநாமங்களைக் கேளாத இரும்பு போன்ற செவியனாயும் அலறும் எனக்கு அருள் செய்தமைக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் "  என அகம் குழைந்து பாடுகிறார்.

புராணங்களையும் பிற அற நூல்களையும்  படிப்பது என்பது நல்ல அடித்தளம் எற்படுத்துவது போன்றது. பள்ளங்களைச் சமன் செய்து மண்ணாலும் கல்லாலும் நிரப்புவது போன்றது. ஆனால் அதுவே, பயணம் செய்வதற்கு ஏற்றதாகி விடாது அல்லவா? அதற்கு மேல் செம்மண், ஜல்லி, தார் போன்ற பொருள்களை இட்டு ஏற்றதாகச் செய்வது போல நாமும் முதல் கட்டத்திலேயே நின்று விடக்கூடாது. மணி வாசகர் சொல்வது போல் நாம் அரிய வாய்ப்பை நழுவ விடலாகாது. பின்னால் பார்த்துக்கொள்வோம் என்று தாமதித்தால் அந்த அருள் மீண்டும் கிடைக்குமா என்று சொல்ல முடியாது  அவனது பாத மலர்களை விடாது பற்றினால், அடுத்த இரு நிலைகளும் வினை நீக்கம் பெற்றுப் பிறவா நிலைக்குக் கொண்டு  சென்று விடும்.அதனால் தான் இம்மூன்று நிலைகளையும் குறிப்பிட்ட நாவுக்கரசர், " நில்லாமே தீ வினைகள் நீங்க வைத்தார் " என்று அடுத்த வரியில் விளக்கமாக அருளிச் செய்கிறார்.

உணர்ந்து ஓதுதல் என்பது பாட்டின் பொருளை உணர்ந்து ஓதுதல் அன்று. பாட்டின் பேரின்பப்  பொருளாகிய பரமனை உணர்ந்து பாடுதலே ஆகும். " ஓதி யாரும் அறிவார் இல்லை " " யார் உன்னை அறியகிற்பாரே "  " இவர் தன்மை அறிவார் ஆர் " " சான்று காட்டுதற்கு அரியானை "  "இன்ன தன்மையன் என்று அறி வொண்ணா எம்மான் " முதலிய திருமுறை வரிகள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. எல்லா உலகத்து உயிர்களுக்கும் இது பொருந்தும். சந்திர சேகரனும் கங்காதரனுமாகிய சிவ பரஞ்சுடரின் குஞ்சித பாத மலர்களை இடையறாது நினைந்து ,உருகி, நைவதே முழுவதுமாக மலநீக்கம் பெற்றுச்  சிவானந்தம் பெற ஒரே வழி. : "நையாத மனத்தினனை நைவிப்பான்  " என்று திருவிசைப்பாவும் இந்த சைவ சித்தாந்த சாரத்தையே காட்டுகிறது.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவுலாவிய நீர் மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.                                                                                                        
   ,                                                                              - பெரிய புராணம் 

No comments:

Post a Comment