Sunday, April 26, 2015

காஞ்சிப் பெரியவர்களும் தேவாரமும் - 2

 காஞ்சி மாமுனிவர்,  சிவிகைக்குப் பின்னால் வந்த   ஒதுவாமூர்த்திகளைக்  காஞ்சி ஏகம்பம்,காஞ்சி மேல்தளி, விருத்தாசலம் ஆகிய தலங்களின் மீது அமைந்த தேவாரப் பாடல்களைப்  பாடச் சொல்லிக் கேட்டதில் முதலாவதாகக் கச்சி ஏகம்பத்தின் மீது பாடிய பாடலையும் அதன் பொருளையும் நம் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் பார்த்தோம். இனி, இரண்டாவதாகக் கச்சி மேற்றளி என்னும் தலத்தின் மீது அமைந்த பாடல் ஒன்றைக் காண்போம்.  

காஞ்சிபுரத்தின் மேற்குத் திசையில் அமைந்துள்ள தலம் மேற்றளி என்ற பாடல் பெற்ற தலம். இங்கு,சிவசாரூபம் பெற வேண்டித் திருமால் சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு. இங்கு தரிசிக்க வந்த ஞானசம்பந்தர் பதிகம் பாடியபோது அதைக் கேட்டுத் திருமால் உருகியதால் சுவாமிக்கு ஓத உருகீசர் என்ற பெயர் உண்டு. அதைத் தவிரவும் மேற்கு பார்த்த சிவ சன்னதியும் கோயிலுக்குள் இருக்கிறது.இத்தலம், அப்பராலும் சுந்தரராலும் பாடப்பெற்றது. சம்பந்தரின் திருப்பதிகம் கிடைக்கும் பேற்றை நாம்  பெறவில்லை. இக் கோயிலை நோக்கியவாறு சம்பந்தருக்கென்று தனிக் கோயில் இருக்கிறது.

காஞ்சிப் பெரியவரிடம் ஓதுவாமூர்த்திகள் பாடிய இத்தலப் பாடல் எது என்று தெரியாததால்,அத்தலப் பதிகத்திலிருந்து ஒரு பாடலின் பொருளையாவது உணர சிவபரம்பொருள் அருளுவானாக.

தருமமே வடிவெனக் கொண்டவனே செல்வன்  என்று அழைக்க முற்றிலும் தகுதியானவன். செல்வத்தை உடையவன் என்று பொருள் காண்பதை விட இவ்வாறு பொருள் காண முற்படுவது பொருத்தமாகவும் இருக்கிறது.  பொய்யிலியாகவும் மெய்யர்  மெய்யனாகவும் விளங்குவதே பெருமானது தனி சிறப்பு. " செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே " என்ற சம்பந்தர் வாக்கையும் நோக்கலாம். எனவே தருமமும் செல்வமும் பிரிக்க முடியாதவைகள் ஆகி விடுகின்றன. செல்வனது பாகம் பிரியா நாயகி செல்வி எனப்படுகிறாள். அவளை " அறப் பெரும் செல்வி " என்றுதானே நூல்கள் போற்றுகின்றன !  அவளே காஞ்சியில் கம்பை ஆற்று மணலால் மாவடியின் கீழ் லிங்கம் அமைத்து ஆகம வழியில் நின்று சிவபூஜை செய்கிறாள்.  சேக்கிழாரும் அவளைப்  " பெருந் தவக் கொழுந்து "  எனப்போற்றுவார். அப்படிப்பட்ட செல்வியைப் பாகமாகக் கொண்ட மேற்றளி ஈசனை அப்பர் பெருமான்

" செல்வியைப் பாகம் கொண்டார் "  என்று நமக்குக் காட்டுகின்றார்.
முருகனுக்குச் சேந்தன் என்ற பெயர் உண்டு. " சேந்தனைக் கந்தனை செங்கோட்டு வெற்பனை " என்று கந்தர் அலங்காரம் கந்தவேளின் பெயர்களை அழகாகக் காட்டுகிறது. " சேந்தர் தாதை " என்று முருகனின் தந்தையாகச் சிவபெருமானை வருணிக்கப்படுகிறது. இதையே அப்பரும், "சேந்தனை மகனாக் கொண்டார் "என்கிறார்.

கொன்றை,ஊமத்தை,தும்பை ஆத்தி,எருக்கு போன்ற மணமில்லாத மலர்களை ஏற்கும் பெருமான், அடியார்கள் அன்போடு நகம் தேயும்படி விடியலில் கொய்த  மணம் மிக்க மலர்களையும் ஏற்கிறான். மல்லிகையும் முல்லையும் அவற்றுள் சில . எனினும் அவன் கொன்றை சூடுவதில் விருப்பம் உள்ளவன். " கொன்றை நயந்தவனே " என்று பாடுகிறார் சுந்தர மூர்த்தி சுவாமிகள்.  திருநாவுக்கரசரும், " மல்லிகைக் கண்ணியோடு  மாமலர்க் கொன்றை சூடி " என்பதால் மல்லிகை மாலையையும் ,சரக் கொன்றையையும் பெருமான் அணிகிறான் என்பது கருத்து.

நாலந்தா,காஞ்சி போன்ற இடங்களில் பெரிய பல்கலைக் கழகங்கள் இருந்தன என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடல் போன்றது கல்வி என்று சொன்னாலும், கல்விக் கடலைக் கரை இல்லாத ஒன்றாக வருணிப்பது நயம் மிக்கது. கடலின் ஆழத்தைக் கணிக்கலாம். கல்விக் கடலோ ஆழம் அறியப்படாதது. ஒவ்வொரு முறையும் புதுப்புது முத்துக்களையும், பவழங்களையும். அதுவரை  கண்டிராதவற்றையும் கிடைக்கச் செய்வது. உலகமாதாவான காமாக்ஷி தேவி அறம் புரியும் இத்தலம்  எல்லாக் கலைகளுக்கும் இருப்பிடமாகத் திகழ்வதில் வியப்பு ஏது?  " கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால் " என்ற வரி இதனைத் தெரிவிக்கிறது.

இரவில் காட்டில் ஆடுவதையும் பெருமான் விரும்புகிறான். " இரவாடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே " என்கிறார் நாவரசர்.  இரவு என்பதை " எல்லி " என்றும் குறிப்பதுண்டு.இவ்வாறு எல்லி  ஆட்டு உகந்த பிரான் செம்மேனியன். தீவண்ணன். ஆகவே ஆகவே துன்னிருள் அகன்று சோதி புலப்படுகிறது. அகஇருளையும் புற  இருளையும் நீக்க வல்ல பெருமான் அவ்வாறு ஆடுவதால் இரவும் விளக்கம் பெறுகிறது. எனவே, இப்பாடலில்  வரும்      " எல்லியை  விளங்க நின்றார் "   என்பது நோக்கி மகிழத்தக்கது. இப்போது பாடலை முழுவதுமாகக் காண்போம்:

 செல்வியைப் பாகங் கொண்டார்  சேந்தனை மகனாக் கொண்டார்                            
 மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக்                                                
 கல்வியைக் கரையி லாத  காஞ்சிமா நகர்தன் னுள்ளால்                                              
 எல்லியை விளங்க நின்றார் இலங்குமேற் றளிய னாரே.

கச்சி மேற்றளி என்னும் இத்தலம், காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியான பிள்ளையார் பாளையத்தில் உள்ளது.

1 comment:

  1. தேவார மூவரால் பாடல் பெற்ற ஸ்தலம் என்ற சிறப்புடையது.

    ReplyDelete