Saturday, May 2, 2015

காஞ்சிப் பெரியவர்களும் தேவாரமும் - 3

தனது சிவிகையின் பின்னால்  வந்துகொண்டிருந்த  ஒதுவாமூர்த்திகளிடம்  விருத்தாசலம் எனப்படும் திருமுதுகுன்றத்தின் மீது பாடப்பெற்ற தேவாரப் பாடல் ஒன்றைக் காஞ்சிப் பெரியவர்கள்  பாடச் சொன்னபோது, பின்வரும் பாடலை  ஓதுவார் பாடியதாக அறிகிறோம். அப்பாடலை  அருளியவர் திருஞானசம்பந்தர்.

தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய்
ஓவா உவரி கொள்ள உயர்ந்தா யென்றேத்தி
மூவா முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றே.

எல்லாத்தேவர்களுக்கும் மேலான தேவன் பரமேச்வரன் ஆதலால் அவன் ஒருவனே தேவன் எனப்படுகிறான். " விண் ஆளும் தேவர்க்கும் மேலாய வேதியன் " என்று திருவாசகத்தில்  காண்கிறோம். ஆகவே மகாதேவன் எனப்படுகிறான். சிவாஷ்டோத்திரத்தில்  இரண்டு நாமாக்கள் , தேவாய நம:  மஹாதேவாய நம: என்று அடுத்தடுத்து வருவதைக் காணலாம்.  எல்லாத் தேவர்களுக்கும் எந்தையாகவும் விளங்குவதை, " எந்தை இவன் என்று இரவி முதலா  இறைஞ்சுவார் சிந்தையுள்ளே கோயிலாத் திகழ்வான் " என்று இதே பதிகத்தின் மற்றொரு பாடலில் வருகிறது. அதாவது சூரியன் முதலான தேவர்கள் சர்வேசுவரனைத் துதிக்கும்போது , அவர்களது சிந்தையைக் கோயில் எனக் கொண்டு விளங்குகிறான் என்பது கருத்து. எதனால் இப்படி அவனை உயர்ந்த தெய்வமாகத்  தேவர்கள் வழிபாடு செய்கிறார்கள் என்பதைத்  தெரிந்து கொள்ள வேண்டாமா?

சிவபெருமானை " ஆறு சமயங்களுக்கு ஒரு தலைவன்"  என்பார் சம்பந்தர் இதே தலத்தின் மீது பாடிய வேறோர் பதிகத்தில்.  இதையே அப்பர் பெருமானும், " தாமரையான் நான்முகனும்  தானே ஆகி, மிக்கது ஓர் தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலான் " என்று இத்தலத்தில் பாடியருளிய திருத்தாண்டகத்தில் போற்றுவதைக் காண்க.   தேவாசுரர்கள் மந்தர மலையை மத்தாகவும், வாசுகியை நாணாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப்பட்டபோது எல்லாத் தேவர்களும் அதனை நெருங்கவே அஞ்சினர். " ஞாலம் உண்டானோடு நான்முகனும் நண்ணரிய "  ஆலாலம் அது என்கிறார் மாணிக்க வாசகர். எங்கு ஓடினாலும் தம்மை அவ்விடம் துரத்தக் கண்டு கயிலாய மலையை அடைந்து சரணடைந்தார்கள் தேவர்கள். அவர்களையும் எல்லா உலகங்களையும்  ஒப்பற்ற கருணையுடன்  அந்நஞ்சை அமுதமாக உண்டு காத்த கடவுள் ஆதலால் மகாதேவனாக , நீலகண்டப் பெருமான் எல்லா உலகங்களும் போற்றும் பெருங்கடவுளாகத் திகழ்கிறான். அனைவர்க்கும் அவன் ஒருவனே  பெரியவனானபடியால் தேவர்கள் அவனை வணங்கும்போது, " தேவா, சிறியோம் பிழையைப் பொறுப்பாய்  " என்கின்றனர்.  

நாம் அனைவரும் நாள் தோறும் பிழை செய்யும் சிறுமை உடையவர்கள். ஆகவே சிறியோம் என்று சொல்வது முற்றிலும் பொருத்தம். ஆனால் அடியவர்களின் பிழையை மன்னிப்பதே பெருமானின் குணம் என்பதை, " குற்றம் செய்யினும் குணம் எனக் கொள்ளும் கொள்கை " என்ற  சுந்தரர் வாக்கு இதைத் தெளிவு படுத்துகிறது. சுவாமிக்குக் " குற்றம் பொறுத்த நாதர் ( அபராத க்ஷமாபநேசுவரர் ) என்று கருப்பறியலூர் என்ற ஊரில் பெயர்வழங்கப்படுகிறது. " அம்பலத்து எம் பெரியோனே, சிறியேனை ஆட்கொண்ட பெய்  கழற்கீழ் விரையார்ந்த மலர் தூவேன் " என்று மாணிக்கவாசகப் பெருமான் அருளுவார்.

 ஆகவே, பிழை பொறுத்தலே பெரிய தெய்வத்திற்கு அடையாளம் என்பதை,      " பிழைத்தவை பொறுக்கை  எல்லாம் பெரியவர் கடமை " என்று அவரே மேலும் அருளுவதால் அறியலாம்.  மன்னித்து அருளும் குணம் , பெருமான் உயிர்கள்பால் வைத்த இரக்கத்தைக் காட்டுகிறது.  அடியார்களிடம் இக்கருணையை அதிகமாகக் காட்டுவதால்  " அருள் நிதி தர வரும் ஆனந்த மலை " என்று திருவாசகம் சுவாமியைப் போற்றுகிறது. கருணைக் கடலாக       ( " க்ருபா சமுத்ரமாக ")  அவரைப் போற்றும்போது, " அலைகடலே " என்று அழைக்கிறார் மணிவாசகர்.

திருமுதுகுன்றத்தில் தவம் செய்யும் முனிவர்கள் அரும்தவசிகள். தவ மேன்மையால் மூப்பு அடையாதவர்கள். எனவே, மூவா முனிவர் என்று சொல்லப்பட்டது. அவர்கள் முதுகுன்றப்பெருமானை வணங்கும்போது, அந்தத் தல மகிமையைக் கூறி வழிபடுகிறார்கள். ஊழிக் காலத்திலும் அலைகளை உடைய கடலால் இத்தலத்தை  எதுவும் செய்ய முடியவில்லை என்பது தல புராணம். பிரளயத்திலும் நீரில் மூழ்காமல் மிதந்த ஊர் என்பதை சம்பந்தரும், " செழு நிலத்தை மூட வந்த மூவாத முழங்கு ஒலி  நீர் கீழ் தாழ மேல் உயர்ந்த முது குன்றமே "  என்பார்.

இவ்வாறு எல்லோர்க்கும் பெரியோனாகவும் தேவர்களுக்குத் தேவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் திகழும் முழு முதற்கடவுளான பரமேசுவரனை  பக்திமலர் தூவி அடியார்கள் வழிபடுவதை சம்பந்தர் வாக்கால் அறிந்து இன்புறலாம்.

சிவனடியார்கள் சுவாமியை மலர்கள் கொண்டு அர்ச்சித்தும் ,அபிஷேகித்தும் "  சிவனே என்றும், வைத்த நிதியே என்றும் , மணியே என்றும் அவனைப் போற்றி ,  உடலை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் வருத்திக் கொண்டும் , சித்தம் நைந்து வழிபடுகிறார்கள் என்றும் இதே பதிகம் குறிப்பிடுகிறது.    
இவ்வளவு அற்புதமான பொருள் நிரம்பிய பொக்கிஷமாகத் திகழ்வது இத் தேவாரப் படல். அதனை அனுபவித்துப் பெருமான் அருளை நாமும் வேண்டுவோமாக. 

No comments:

Post a Comment