Wednesday, May 20, 2015

திருமுறைகளில் ஆர்வம் ஏற்படுத்துவது எப்படி ?

இந்தத் தலைமுறையைச்  சேர்ந்த ஒரு பையன் கேட்டான்," எனக்குத் தேவாரம்,திருவாசகம், திருமந்திரம் ஆகிய நூல்களைப் படிக்க ஆவலாக  இருக்கிறது. அதெல்லாம் எனக்குப் புரியுமா , அப்புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டு நானாகவே படித்துத் தெரிந்து கொள்ள முடியுமா" என்று அவன் கேட்டபோது அவனது ஆர்வத்தை விட அவனது நிர்மலமான சிந்தனையைப்  போற்றத் தோன்றியது.  இதுபோன்ற சந்தர்பங்களில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்துவதே முக்கியம். அதற்கான வழி  முறைகளை நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு  செய்யுளைப்  பொருள் அறிந்து  படிக்கும்போது  அதன் சொற் சுவை , பொருட் சுவை புலப்படுவதால் இலக்கியத்தில் ஆர்வம் எற்படும். இவ்விரண்டு சுவைகளோடு பக்திச் சுவையையும் சேர்த்து வழங்குவன பக்தி இலக்கியங்கள். ஆகவே, இம்மூன்றும் ஒரே நேரத்தில் சென்று அடையும்படி தற்காலத்தவர்களுக்குக்  கற்பித்தால் அவர்கள் வரவேற்பார்கள்.

கற்பிக்கும் முறை எளிமையாக இருப்பது மிக மிக அவசியம். ஒவ்வொரு நூலுக்கும் ஓர் எளிமையான அறிமுகம் அவசியம். அதுவே,வாசகரைக்  கை பிடித்து நூல் முழுவதையும் காட்டுவதற்குத் துணையாக இருக்கும்.  எனவே புத்தகத்தில் காணப்படும் வரிசையில் படிப்பது எல்லா நூல்களுக்கும் பொருந்தாததுடன் தமிழறிவு சற்றுக் குறைந்தவர்களுக்குச்  சற்று அலுப்பு ஏற்படுத்த வகை செய்து  விடும்.  அப்புறம் அவர்கள் அந்நூலின் பக்கமே வரத் தயங்குவர். எனவே பள்ளிக்கூடங்களில் இவற்றில் மாணவர்களுக்கு நாட்டம் ஏற்படுத்தத் தவறிவிட்ட கல்விமுறையைக் குறை சொல்லிக் கொண்டு கையைக் கட்டியபடி உட்கார்ந்து இருப்பதை விட, மிகவும் எளிமையாகக் கற்பித்து ஆர்வம் ஏற்படுத்தும் முறையைக் கையாள வேண்டியிருக்கிறது.

சொல்லித்தரும் பாடலுக்குள் புகுவதன் முன் அதன் பொருளை எளிய முறையில் சொல்லிவிட்டு வரிக்கு வரி பொருள் சொல்வது ஒரு முறை. நிறைவாக முழுப் பாடலையும் சொல்லி விளக்குவது வழக்கம். இவ்வாறு காதால் கேட்கும்போதே, கேட்பவருக்கு அப்பாடல் எளிமையாகப் புரிவதோடு, அவ்வினிய வரிகள் ஆழமாகப் பதிந்து விடுகின்றன. அதோடு நின்றுவிடாமல், இதுபோன்ற எளிய பாடல்களை அந்த நூலில் தேடத் துவங்கி விடுவதும் இயல்பு. கடினமான பாடல்களை முதலிலேயே அறிமுகம் செய்து வைத்தால், இது நமக்கு ஒத்து வராது என்று விலகி விடுகின்றனர்.

சில பாடல்கள் முழுவதும் கடினமாகத் தோன்றலாம். ஓரளவு பொருள்  புரியும் பாடல்களும் உண்டு. நான்கு வரிகள் அமைந்த பாடல்களில் போதிய தமிழறிவு இல்லாதவர்கள் மூன்று வரிகளாவது புரியக் கூடிய  பாடல்களை முதலில் படிக்கத் தொடங்குவது எளிமையான வழி. அந்த வரிகளிலும் புராணச் செய்திகள் புதியதாகத் தோன்றக் கூடும். ஆகவே, வெளிப்படையாகப் பொருள் தரும் வரிகள் அப்படிப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும்.

எடுத்துக் காட்டாக ஒரு பாடலை இங்கு காண்போம்.   இது திருமூலர் அருளிய திருமந்திரத்தில் காணப்படுவது. அந்நூலில் உள்ள பல  பாடல்கள் சைவ நூல்களை பயின்றவர்களுக்குக்கூட முழுமையாக விளங்காமல் இருந்தாலும் , எளிமையாகப் புரியக்கூடிய பாடல்களும் இருப்பதால் அவற்றை முதலில் நுழை வாயிலாகக் கொண்டு பயிலுவதே சுலபமான வழி.அதன் மூலம் நூலில் ஆர்வம் ஏற்படுவதோடு, கடினமான பாடல்களும் ஓரளவு பொருள் விளங்க ஆரம்பிப்பதை அனுபவத்தால் அறியலாம்.

நாம் இப்போது சிந்திக்கும் பாடல் குருவின் மகிமையைக் குறிப்பது. சற்குருவை நேரில் காண்பதே நமக்குத் தெளிவைத் தந்து விடும் என்கிறார் திருமூலர். குருநாதர் நேரில் இல்லாதபோது அவரது நாமங்களே நமக்குத் துணையாக நின்று அத்தெளிவைத் தந்து விடும். குருநாதரது அருளுபதேசம் தெளிவைத் தரும்.  இவ்வளவு என்? குருநாதரைச்  சிந்தித்த மாத்திரத்திலேயே தெளிவு ஏற்பட்டு விடும் என்கிறது  இப்பாடல். குருவின் அருள் இருந்தால் இறைவனை எளிதில் அடையலாம். ஆகவே அஞ்ஞானம் தன்னை அகற்றும் ஞானமயமான    குருவைச்  சரண் அடைந்து தரிசனம் செய்வதும், அவரது திருவார்த்தையைக் கேட்பதும், அவரது திருநாமத்தை உச்சரிப்பதும், திருவுருவத்தைத் தரிசிப்பதும் தெளிவைத் தந்து விடும் என்பதை இப்பாடல் நமக்கு உணர்த்தி வழி காட்டுகிறது.

இப்பொழுது பாடலைக் காண்போம்:
                               தெளிவு குருவின் திருமேனி காண்டல்
                                தெளிவு குருவின் திருநாமம் செப்பல்  
                                தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
                                 தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
" குருவடிவாகிக் குவலயம் தன்னில் திருவடி வைத்துத் திறம் இது பொருள் என " என்று ஔவையின் விநாயகர் அகவலும் கூறுவதைக் காணும்போது, பக்குவம் வந்த உயிர்களுக்குக் குருவின் தரிசனமும்,உபதேசமும் கிடைப்பதை அறியலாம். எனவே,குருவருளும் திருவருளும் கிடைக்குமாறு நாம் பக்குவப்பட வேண்டியது அவசியமாகிறது. அதற்குத் துணையாகும் திருமுறைகளைப் பொருள் உணர்ந்து பாராயணம் செய்தால் இவ்விரண்டும் சித்திக்கும். 

No comments:

Post a Comment