Tuesday, February 14, 2012

"இறைவன் நீ"


  உலகத்தில் பிறக்கும் பொழுதே, சில உறவுகள் தாயார் வழியிலும், தகப்பனார் வழியிலும் அமைந்து விடுகின்றன. வயது ஆக ஆக, மேலும் பல உறவுகள் வந்து சேருகின்றன. இப்படிப்பட்டபல  உறவுகளில், அண்ணன்-அண்ணி,மாமன்-மாமி போன்றவை  காலம் காலமாகப் பரிமளித்து வருபவை. இதில் அண்ணன், அருகிலிருந்து அண்ணிப்பவன் . சிவபெருமானும் தனது பக்தனிடம் அணித்து அருள் புரிவதால், "ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்" என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். மேலும் அவரே, "அண்ணா" என்று பரம்பொருளான பரமசிவனை வாயார அழைக்கிறார். அண்ணனது மனைவியிடம் அம்பிகையைப்போல், அண்ணனது கருணையும் பிற நல்ல குணங்களும்  காணப் படுவதில் ஆச்சர்யம் இல்லை.  மன்னிப்பதிலும் அவள் தாயைப் போன்றவள். அதனால் தானோ என்னவோ  அவளைச்  சிலர் "மன்னி" என்று அழைப்பதும் உண்டு. வட இந்தியாவில் அவளைத் தாயாகவே பாவிப்பார்கள்.

                          தாய் வழி மாமனுக்கும் தனி இடம் உண்டு.   உபநயனத்தில், மாமனின் தோளிலே மருமகன் வருவதையும், அதேபோல் மருமகன்,மருமகள் ஆகியோர் அவ்வாறு தூக்கப்பட்டு திருமணத்தில் வருவதையும் நாம் பார்க்கிறோம். இந்த வைபவங்களில் மாமன்- மாமி அக்குழந்தைகளுக்கு  சீர் வரிசைகள் செய்வார்கள்.  மதுரையில் சிவபெருமான் செய்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் , மாமனாக வந்து வழக்கு உரைத்ததும் ஒன்று. திக்கற்ற தங்கையின் குழந்தைகளை உறவினர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக அக்குழந்தைகளின் மாமன் வடிவில் வந்து சோமசுந்தர மூர்த்தியானவர் சாட்சி சொல்வது அந்தத் திருவிளையாடல். அக்குழந்தைகளைத் தழுவிக்கொண்டு,"இப்படி வறியர் ஆகிவிட்டீர்களே" என்று கூறிக் கண்ணீர் விட்டான் இறைவன். மாமன் உறவு அவ்வளவு மகத்தானது.

                           உறவுகளைத் தந்ததோடல்லாமல் ,அந்த உறவுகளாகவே இறைவன் இருந்து அருள் பாலிக்கிறான் என்ற கருத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நல்ல தாயார் - தகப்பனார் வயிற்றில் பிறக்கச் செய்து, நல்ல உடன் பிறந்தோரையும் தந்து அருளுகிறான். " ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் " என்கிறார் அப்பர் ஸ்வாமிகள்.  குண- வதியான  மனைவியையும் மக்களையும் அமைத்துத் தருகிறான்  பரமன். அது மட்டுமா? நமக்கு வேண்டிய பொன்,பொருள், மணி, முத்து , தங்கும் ஊர் ஆகியவற்றையும் அமைத்துக் கொடுத்து அவற்றை அனுபவிக்கும் வரத்தையும் வழங்குகின்றான். இப்படி இறைவன் தந்த அனைத்தையும் இறைவடிவமாகவே பார்த்துப் பரவசத்துடன் அப்பர் பெருமான் பாடி அருளிய தேவாரப் பாடலை இங்கு சிந்திப்போமாக:

 அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
    அன்புடைய  மாமனும் மாமியும் நீ
 ஒப்புடையமாதரும்  ஒண்பொருளும் நீ
    ஒருகுலமும் சுற்றமும் ஒரூரும் நீ
  துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
     துணையாய் என்நெஞ்சம்  துறப்பிப்பாய் நீ
  இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
     இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே.

"எல்லா உலகமும் ஆனாய் நீயே " என்று பாடிய திருநாவுக்கரசர்  மேற்கண்ட பாடலில் சற்று விளக்கமாகவே நமக்கு உணர்த்துகின்றார். ஆகவே, அவன் தந்த அனைத்தையும் அவனுக்கே சமர்ப்பிக்கும் நோக்கத்துடன் அப்பொருள்கள் எதிலும் பற்றில்லாமல் , திருப்புகலூரில் உழவாரத்தொண்டு செய்துகொண்டிருந்த போது பூமியில் கிடைத்த ஒளிவீசும் மணிகளை , வேண்டாம் என்று ஒதுக்கித்தள்ளியதோடு , பரமேச்வரன் ஒருவனே தனித்துணை , அவன் அருள் பெறுவதே பிறவியின் நோக்கம் என்பதையும் தெளிவாக இப்பாடல் மூலம் உபதேசிக்கிறார்.                          
                                     

No comments:

Post a Comment