பனை மரத்தைத் தல விருக்ஷங்களாகக் கொண்ட ஊர்கள் பல உண்டு. திருப்பனையூர், வன்பார்த்தான் பனங்காட்டூர் , புறவார் பனங் காட்டூர், திருப்பனந்தாள் ஆகிய தலங்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். செய்யாறு எனப்படும் திருஒத்தூரிலும் தெய்வப் பனைமரம் ஸ்தல விருக்ஷமாகப் போற்றப்படுகிறது. இவற்றுள் , புறவார் பனங்காட்டூர் எனும் தலம் , தற்போது பனையபுரம் என்று வழங்கப்படுகிறது. இத்தலப் பெருமானை, ஞான சம்பந்தர் பாடிப் பரவிய ஒரு பதிகம் இரண்டாம் திருமுறையுள் உள்ளது. இப்பதிகத்தால் அறியவரும் செய்திகள் சிலவற்றை இங்கு சிந்திக்கலாம்.
"வையகமும் துயர் தீர்கவே" என்று, எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற பெரும் கருணை உடைய சம்பந்தர் , இத்தல இறைவனிடம் நமக்காக வேண்டுகிறார். அதிலும், இறைவனிடம் அன்பு கொண்டவர்களுக்கு அருள வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார். எப்படி அதனை முன்வைக்கிறார் தெரியுமா? " நள்ளிருளில் ஆடும் சங்கரனே, நீ நான் மறைகளையும் பாடிக் கொண்டே ஆடுபவன்; மாதொர் பாகனாகிய பிஞஞகனும் நீயே. கங்கையும் மதியமும் கமழும் சடையில் கொன்றை மலரும் ஊமத்தை மலரும் சூடியவன் நீ. உன் அடியார்கள் உன்னை எப்படியெல்லாம் துதிக்கிறார்கள் தெரியுமா? நால் வேதங்களையும் பாடி ஆடுபவனே என்று பலமுறை நல்ல மலர்களை உன் பாத கமலங்களில் தூவித் துதிக்கிறார்கள். முழு முதற்கடவுள் நீயே என்று கை கூப்பி நாள்தோறும் வணங்குகிறார்கள். இராவணனை அடர்த்துப் பின் அவன் பாடலுக்கு இரங்கியவனே என்கிறார்கள். திருமால்,பிரமன் எனும் இருவரும் அறிய முடியாத அக்னிப் பிழம்பாக நின்றவனே என்று போற்றுகிறார்கள். பிரம கபாலம் ஏந்தும் பிக்ஷாடன மூர்த்தியே என்று துதிக்கிறார்கள்.இத்தகைய அடியார்களுக்கு அருளுவாயாக."
"நீ விரும்பிக் கோயில் கொண்டிருக்கும் புறவார் பனங்காட்டூரின் அழகே அலாதியானது. அங்கே வண்டுகள் ரீங்காரம் செய்வது, நேரிசைப் பண்ணில் யாழில் எழுப்பும் ஒலியைப் போல் இருக்கிறது. நீர்வளம் மிக்க இவ்வூரில் வைகறையில் எருமைகள் செந்நெற் கதிர்களை மேய்ந்துவிட்டு குளிர்ந்த நீர் நிலைகளில் குளிக்கின்றன. வய ற்கரைகளில் பாளைகளை உடைய கமுகு மரங்கள் உயர்ந்து நிற்கின்றன. தாமரைப் பொய்கைகளில் அன்னங்கள் விளையாடுகின்றன "
" காந்தள் மலர்களின் தோற்றம், பெண்களின் கை விரல்களைப் போலவும் , பாம்பின் படத்தைப் போலவும் தோற்றமளிக்கின்றன. உமா தேவியும் காந்தள் போன்ற விரல்களையும், இயற்கையாகவே நறுமணம் கமழும் கூந்தலையும் உடையவள் தானே! இப்படிப் பல்வேறாகப் பாடிப் பரவும் மெய்யடியார்களுக்கு நீ அருள்வாயாக" என்று துதிக்கிறார் சம்பந்தப்பெருமான். இதில், அம்பிகையைக் குறிப்பிடும் இடத்தில், "மெய்யரிவை " என்று சொல்வதை, உரை எழுதுபவர்கள் , இறைவனின் மெய்யில் பாகம் கொண்டவள் என்று விளக்கம் தருகிறார்கள். இவ்வூரில் அன்னைக்குப் புறவம்மை என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. வடமொழியில் சத்யாம்பிகை என்று வழங்கப்படுகிறாள். இத்தேவியின் முன்னர் பொய் சத்தியம் செய்பவர்கள் பெரும் கேடு அடைகிறார்கள் என்று இவ்வூர் மக்கள் முழுமையாக நம்புகிறார்கள். ஆகவே, சத்தியத்தின் முழு வடிவமாக அம்பிகை இங்கு கோயில் கொண்டுள்ளாள். இதைத்தான் "மெய் அரிவை " என்று சம்பந்தர் சொன்னாரோ என்று தோன்றுகிறது. "மெய்" என்பதன் பொருள், சத்தியம் அல்லவா? "அரிவை " என்பது பெண்களின் பல பருவங்களில் ஒன்று. இத்தலத்தில் அரிவை வடிவில் காட்சி அளிக்கிறாள் போலும்! இப்போது பாடலைப் பார்க்கலாம்:
கை அரிவையர் மெல் விரல் அவை காட்டி அம் மலர்க் காந்தள் அம்குறி
பை அரா விரியும் புறவார் பனங் காட்டூர்
மெய் அரிவை ஓர் பாகமாகவும் மேவினாய் கழல் ஏத்தி நாள் தொறும்
பொய் இல்லா அடிமை புரிந்தார்க்கு அருளாயே.
தனது பதிகத்தின் பாடல்களை , தமிழ் மாலை, செந்தமிழ், பாமாலை போன்ற சொற்களால் குறிப்பிடும் சம்பந்தர், இத்தலப் பதிகத்தில், "செய்யுள்" என்று குறிப்பார். இப்பதிகப் பலன், சிவலோகம் கிட்டும் என்பதே. இதுவே பிறவியை வேர் அறுக்கும் உபாயம் அல்லவா? "நான்மறை ஞானசம்பந்தன் செய்யுள் பாட வல்லார் சிவலோகம் சேர்வாரே." என்பது அவரது ஞான வாக்கு.
இப்படிப்பட்ட உயர்ந்த கருத்துக்களோடு, தமிழ் இன்பத்தை வழங்கும் இத்தலப் பதிகம், இதனைப் பாராயணம் செய்வோர்க்கு சிவலோகத்தையும் வழங்கும் ஆற்றல் உடையது. சுயம்பு மூர்த்தியாக ,சத்யாம்பிகையுடன் அருள் வழங்கும் பனங்காட்டீசனின் திருக்கோயில் சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது. சித்திரையில் சூரியனின் கதிர்கள் இறை வன்- இறைவியின் திருமேனிகளில் தோய்வதைக் காணப் பல ஊர்களிலிருந்து அடியார்கள் வருகிறார்கள். கண் நோய் தீர்க்கும் கண் கண்ட தெய்வமாக இறைவனை வழிபடுகிறார்கள்.
No comments:
Post a Comment