Sunday, May 5, 2013

திருக்கோயில் இல்லாத ஊர் காடே


ஒரு ஊர் என்றால் அதில் என்னவெல்லாம் எங்கெங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்று வரையறை இருந்தது. திருவிளையாடல் புராணத்தில் , ஆலவாய் அண்ணலின் ஆலயத்தைச்சுற்றி வீதிகளும் பிறவும் பாங்குடன் அமைக்கப்பட்டதைப் பரஞ்சோதி முனிவர் அழகாக வருணிப்பார். தில்லை போன்ற ஊர்களை நோக்கும்போது ஆலயம் நடுநாயகமாகத் திகழ்வதைக் காணலாம். இது நமது கலாசாரம், திருக்கோவிலைச் சார்ந்தே வளர்ந்து வந்தது  என்பதைக் காட்டுகிறது. திருக்கோவில் இல்லாத ஊர் "திரு இல்லாத ஊராகக்" கருதப்பட்டது.

திருவெண்ணீறு அணியாதவர்கள் இருக்கும் ஊர் "திரு இல்லாத ஊராகக்" எண்ணப்பட்டது. வெண்ணீறு அணிவதால் நோய்கள் நம்மை அணுக மாட்டா. "நீறு அணியப்பெற்றால் வெந்து அறும் வினையும் நோயும்" என்றார் அப்பரும். நோய் வந்தாலும் தீர்க்கும் மந்திரமும் மருந்தும் ஆவதும் திருநீறே ஆதலால், " அரு நோய்கள் கெட வெண்ணீறு ..." என்றார் .

பக்தி மேலிட்டு இறைவன்மீது பாடாத ஊர்களும் ஊர் அல்ல .காடு தான். ஊரில் ஒரு கோவில் மட்டுமல்லாமல் பல ஆலயங்களும் இருக்க வேண்டும். "கச்சிப் பல தளியும் " என்று தேவாரம் காஞ்சிபுரத்தில் இருந்த பல ஆலயங்களை ஒருங்கே குறிப்பிடுவதைக் காணலாம்.

மிகுந்த விருப்பத்தோடு சங்கு ஒலிக்க வேண்டும். இன்னிசை வீணையும், யாழும் , தூய மறைகளும்,தோத்திரங்களும் ஒலிக்காத ஊரெல்லாம் காடு அல்லவா? விதானமும் வெண்கொடிகளும் திகழ வேண்டியதும் அவசியம் தானே?

இவ்வளவு இருந்தும், மிக முக்கியமான ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இறைவனின் பஞ்சாட்சரத்தை ஓதி , வெண்ணீறு அணிந்தவர்களாய் ,ஒருக்காலாவது ஆலயம் சூழ்ந்து,வீடு திரும்பியதும்,உண்பதன் முன் மலர் பறித்து , ஆத்ம பூஜை செய்துவிட்டு அதன் பின்னரே உணவு அருந்தும் நியமம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யத் தவறியவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பதே தொழிலாக இறக்கின்றார்கள் என்கிறார் அப்பர்  பெருமான்.
இக்கருத்தோவியம் கொண்ட அப்பர் தேவாரப் பாடல் :

திருக்கோவில் இல்லாத திருவில் ஊரும் திருவெண்ணீறு அணியாத திருவில் ஊரும்
பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும்
விருப்போடு வெண்  சங்கம் ஊதா  ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும்
அருப்போடு மலர் பறித்திட்டு உண்ணா ஊரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.

காட்டிலும் எந்த உயிரினங்களுக்கும் உதவாத காடும் உண்டு. ஆதலால் அதனை அடவி என்ற சொல்லால் குறித்தார் திருநாவுக்கரசர்.

எனவே, கோவில் இருந்த ஊர்களிலேயே முன்பு குடியிருந்தார்கள். தற்போது ஜனத்தொகைப் பெருக்கத்தினால் புதிய குடியிருப்புப் பகுதிகள் தோன்றி வருகின்றன. அவற்றிலும் சிறிய அளவிலாவது ஒரு ஆலயத்தைக் கட்டியுள்ளார்கள்.

ஆனால், அரசாங்கத்தின் தேசீய நெடுஞ்சாலைத் துறை செய்வதைப் பாருங்கள். சாலையை அகலப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு, சாலை அருகே இருக்கும் மிகப் புராதன ஆலயங்களை இடிப்போம் என்கிறார்கள். சென்ற ஆண்டில் விக்கிரவாண்டிக்கு அருகிலுள்ள பனையபுரம் ஆலயத்தை இடிக்கத் திட்டமிட்டார்கள். மக்களது எதிர்ப்பினால், இதுவரை அதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை.

தற்சமயம் , கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் (NH45C)மேல்பாடி என்ற ஊரிலுள்ள ஸ்ரீ நாகநாத சுவாமி ஆலயத்தை இடிக்கத் திட்டம்வகுத்திருக்கிறார்கள். 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டதும், அழகிய தேவகோஷ்டங்களைக் கொண்டதும்,ராஜேந்திர சோழனால் திருப்பணி
செய்யப்பட்டதுமான இக்கோயில் காப்பாற்றப்பட வேண்டும். தேசீய நெடுஞ்சாலைத் துறையின் கீழ்க்கண்ட படிவத்தில் தங்களது கருத்தைப் பதிவு செய்து அனுப்பி  எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டியது அன்பர்களது கடமை ஆகும்.
http://www.nhai.asia/register/rgr/traffic.asp

சித்திரைச் சதயமான அப்பர் குருபூசைத் திருநாளை ஆலயத் தூய்மை காக்கும் தினமாக அரசு அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் பல்லாண்டாக இருந்து வருகிறது. இக்கோரிக்கை அரசின் கவனத்திற்கு வருகிறதோ இல்லையோ, ஊரில் இருக்கும் ஒரே  கோவிலை இடிப்பதையாவது கைவிடக் கூடாதா?  நிலங்களைக் கையகப்படுத்தும் போது, அதில் ஆலயங்கள் இடிக்கப்படுவதை முற்றிலும் தடுக்கும் விதிமுறையைக் கொள்ளாமல்,   இந்த அச்சுறுத்தல் நடவடிக்கை எத்தனை ஆண்டுகள் தொடரப்போகிறதோ தெரியவில்லை.

No comments:

Post a Comment