Wednesday, May 22, 2013

ஆலந்துறை அதுவே


விண்ணகத் தேவர்களும் , கடும் தவம்  செய்யும் முனிவர்களும் காணவும் அரிய சிவபரம்பொருள்  அடியார்களுக்கு எளியவனாக, அவர்கள் குற்றம் செய்தாலும் குணமாகக் கொண்டு அருள் வழங்கும் தலங்களுக்கு எல்லாம் நமது சமயாசார்ய மூர்த்திகள் சென்று வழிபாட்டு, அடியார்களையும் நன்னெறி காட்டியுள்ளனர். அத்தலங்களை நாமும் நேரில் சென்று வழிபடவேண்டும் என்பது இதனால் அறியப்படுகிறது. இதனை வலியுறுத்துவதாகப் பல தேவாரப் பதிகங்கள் அமைந்துள்ளன. " நெய்த்தானம் அடையாதவர்  என்றும் அமர்  உலகம் அடையாரே" என்றும், " ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே" என்றும் வரும் திருமுறை வரிகளை நோக்குக. தல யாத்திரை மேற்கொள்ளாத காலத்தில், அத்  தலத்தின் பெயரைச் சொல்வதும் புண்ணியச்செயல் ஆகும்.அத்தலம் உள்ள திசையை நோக்கித் தொழுதாலும் பாவ வினைகள் அகலும் என்பதை, " தில்லை வட்டம் திசை கை தொழுவார் வினை ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே" என்கிறார் அப்பர் சுவாமிகள்.

அருளாளர்கள் தல யாத்திரை மேற்கொண்டபோது, தலத்தை அடியார்கள் தொலைவிலிருந்தே காட்டியவுடன், அந்த இடத்திலிருந்தே, கசிந்து உருகி, பதிகங்கள் பாடியுள்ளார்கள். தூரத்தில் சீர்காழி  தெரிந்ததும். மகிழ்ச்சி மேலிட்டு, " வேணுபுரம் அதுவே" என்று ஞானசம்பந்தப் பெருமான் பாடியதாகப் பெரிய புராணம் கூறும். அதேபோல், திருப்புள்ளமங்கை என்ற திருத் தலத்தின் சமீபம் வந்தடைந்ததும், ஆலந்துறையப்பர் அருள் வழங்கும் ஆலந்துறை அதுவே  எனப் பாடினார்.

எல்லா உலகங்களையும் ஆளும் அரசன் பரமேச்வரன். விண்ணாளும் தேவர்க்கும் மேலாய தேவன். மகாதேவன். மாணிக்கவாசகரும், "அரைசே பொன்னம்பலத்து ஆடும் அமுதே" என்று துதிக்கிறார். அவன் செங்கோல் வேந்தன் மட்டும் அல்ல. நீதியே வடிவான அரசன். பொய்யிலி.சத்திய மூர்த்தி மட்டுமல்ல. புண்ணியமூர்த்தியும் கூட. ஆகவே, பெருமானை,        "மன்னானவன் " என்று குறிப்பிடுவார் சம்பந்தர்.

மேகமாகி, மழை பொழியச்செய்பவனும் அப்பரமன். "ஒளிகொள் வெண் முகிலாய்ப் பரந்து எங்கும் பெய்யும் மா மழை.." என்பது சுந்தரர் தேவாரம். இப்படி மேகம்,மின்னல், மழை  ஆகியவைகளாக ஈச்வரன் இருப்பதை,
" நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச நம ஈத்ரியாய சாதப்யாய ச நமோ வாத்யாய ச.." என்று    ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது.
இதைதான் சம்பந்தரும், " உலகிற்கு ஒரு மழை ஆனவன்" என்கிறார்.

உலகியலில் பல உலோகங்கள் இருந்தாலும் பொன்னே போற்றப்படுகிறது. ஆனால் பொன்னிலும் மாசு இருக்கக் கூடும். இறைவனோ மாசற்ற பொன்னாவான். ஆகவே,  "பிழையில் பொன்னானவன்" என்று சம்பந்தரால் போற்றப்படுகிறான்.

எல்லார்க்கும் முன்னே தாமே தோன்றிய தான்தோன்றியப்பனை , பல்லூழிகளையும் கடந்து தோற்றமும் இறுதியும் இல்லாமல் இருக்கும் பராபரனை,தயாபரனை, தத்துவனை, முதலாய மூர்த்தி என்பதும் உபசாரமே என்றாலும் அதுவும் அழகாகத்தான் இருக்கிறது.
"நமோ அக்ரியாய ச  பிரதமாய ச ,,, " என்ற வேத வாக்கியத்தை, சம்பந்தப்பெருமான், "முதலானவன்" என்று அழகிய தமிழால் சிறப்பிக்கிறார். அது மட்டுமல்ல. நம் எல்லோருக்கும் வாழ்முதலாகவும் விளங்குகின்றான் என்பதும் ஒரு பொருள்.

இறைவனை சொந்தம் கொண்டாடுவதும் அவனது தலத்தை உரிமையோடு குறிப்பிடுவதும் தேவாரம் நம்மை ஆனந்த வெள்ளத்தில் திளைக்க வைக்கும் எண்ணற்ற செய்திகளில் சில." அவன் எம் இறையே" என்றும் "நம் திருநாவலூர்" என்றும் வரும்  தொடர்களைச் சில எடுத்துக் காட்டுகளாக இங்கு எண்ணி மகிழலாம். எனக்குத்  தலைவனாகவும், தலையின் உச்சி மீதும் இருப்பவனை, " சிந்தை இடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார் வந்து மாலை  வைகும் போழ்து என் மனத்து உள்ளார்.." என்று திருப்பாசூரில் அருளிய சம்பந்தர், ஒரே வார்த்தையில் " என்னானவன்" என்று அருளினார்.
பண்ணாகிப் பாட்டின் பயனாகி அருளும் பரம்பொருளைப் பாட்டான நல்ல தொடையாய்  என்றும், ஏழிசையாய்,இசைப்பயனாய் என்றும் துதிக்கப்படும் இறைவனைக் சீர்காழிக் கற்பகமாம் சம்பந்த மூர்த்திகள், "இசை ஆனவன்" என்பார்.

ஒளி மயமான இறைவனை எந்த ஒளியோடு ஒப்பிட முடியும்? இருந்தாலும், நம் கண்ணுக்குத் தெரியும் ப்ரத்யக்ஷ பரமேச்வரனாகிய சூரிய ஒளியை, அதுவும், உதய காலத்தில் இளம் சிவப்பு நிறத்தோடு ஒளிரும் ஆதவனை இங்கு நமக்குக் காட்டுகின்றார் திருஞான சம்பந்த சுவாமிகள்.
"இள ஞாயிறின் சோதி அன்னானவன்" என்பது அந்த அழகிய தொடர். இந்த வரி, நமக்கு,
 "நமஸ் தாம்ராய சாருணாய ச.." என்ற ஸ்ரீ ருத்ரத்தை நினைவு படுத்துகிறது. வேத வாயராகிய சம்பந்தர் வாக்கிலிருந்து இவ்வாறு வேத சாரமாக அமைந்த தேவாரப் பாடல் வெளி வந்தது நாம் செய்த புண்ணியம் அல்லவா?

இப்பொழுது, அந்த அற்புதமான பாடலை  மீண்டும் ஓதி வழிபடுவோம்:

"மன்னானவன்  உலகிற்கு ஒரு

 மழை ஆனவன் பிழை இல்

பொன்னானவன் முதல் ஆனவன்

பொழில் சூழ் பு(ள்)ள மங்கை  
                                            
என்னானவன் இசை ஆனவன்

இள ஞாயிறின் சோதி        
      
அன்னானவன் உறையும் இடம்

ஆலந்துறை அதுவே."

1 comment:

  1. This bought tears! Your writing is eloquent and versatile. I am pleasantly surprised to see the prayoga of Sri Rudram and the corresponding Tamil verses, just so naturally. I am thankful to have found your blog :)

    ReplyDelete