Saturday, October 11, 2014

உபாயம் செய்யும் உமை அன்னை

" ஸதாசிவ பதிவ்ரதை" யான பரமேச்வரியை ,  " சிவஞான ப்ரதாயினி" யாகத் துதிக்கிறது லலிதா சஹஸ்ர நாமம்.  சிவனருளே சக்தியாவதை சைவ சித்தாந்தமும் எடுத்துரைக்கிறது. பாலுக்காக சீர்காழி ஆலயக்கரையில் அழுத குழந்தைக்குப் பாலோடு சிவஞானத்து இன்னமுதத்தையும் சேர்த்து ஊட்டினாள் அம்பிகை என்று பெரியபுராணத்தால் அறிகிறோம். அதனால் சிவஞானசம்பந்தர் என்று பெயர் பெற்றது அக்குழந்தை.அதேபோல மூக கவிக்கு அருளியவுடன்  " முக பஞ்ச சதி " என்ற அற்புதமான தோத்திரங்கள் உருவாயின. அறிவு விளக்கம் பெறாத ஒருவன் திருவானைக்காவில் வாயிற்படியருகே உட்கார்ந்திருந்தபோது அவனை வாயைத் திறக்குமாறு கூறி, தனது தாம்பூலத்தை அகிலாண்டநாயகி வாயில்  உமிழ்ந்தவுடன், அவன் கலைகள் யாவும் சித்திக்கப்பெற்றுக் கவி காளமேகம் ஆயினான் என்று பெரியோர் கூறுவர் .

இப்போது திருமூலரது வாக்கைக் கேட்போம்: " தஞ்சம் என்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு இன்சொல் அளிக்கும் இறைவி"  என்பது திருமந்திரம்.  அவ்வாறு போற்றுபவர்களுக்குப் பவமாகிய துன்பம் நீங்கும் என்பதை, " பணிமின், பணிந்தபின் வெய்ய பவம் இனி மேவகிலாவே"  என்கிறார். "பவ நாசினி' என்று லலிதா சஹஸ்ர நாமமும் இவ்வாறே அம்பிகையைத் துதிக்கும்.

இவ்வாறு வினை கடிந்த மனோன்மனி நங்கை ,நம் தலைமீது மலர்ப்பாதம் வைத்து ஆண்டருளி, சிவஞானத்தை அருளுவதை, " மேலைச் சிவத்தை வெளிப்படுத்தாளே " என்று அருளினார் திருமூல நாயனார்.

உலகியலில் பார்த்தால் , தனது குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, அதனைப் பார் த்துப் பார்த்து மகிழ்வது   அன்னையின் இயல்பு. கண் விழித்தபிறகு, அதனை அரவணைத்துக் கொஞ்சி மகிழ்வது வழக்கம். ஆனால் தூக்கத்தைக் கலைக்கத் தயங்குவாள். ஆனால் அகிலங்களுக்கெல்லாம்  அன்னையாகிய சிவசக்தி என்ன செய்கிறாளாம் தெரியுமா? உறங்கும் அவ்வுயிரைத் தன்  வளைக் கரத்தால் கழுத்தோடு எடுத்து அணைத்து , தனது வாயிலிருந்து சிவஞானத் தாம்பூலத்தை வாயிலே உமிழ்ந்து, ," உறங்கியது போதும். " என்று அருளிச் செய்கிறாளாம். இது உயர்ந்த "உபாயம் " ஆகிறது என்கிறார் திருமூலர்.  இதைத்தான் மாணிக்கவாசகரும்,திருவெம்பாவையில், " கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" என்றார். இப்போது நாம் அவ்வுயரிய திருமந்திரப்பாடலை நோக்குவோம்:

உறங்கும் அளவில் மனோன்மனி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
உறங்கலையா என்று உபாயம் செய்தாளே.

இப்பாடலில் வரும் " உறங்கலையா" என்பதை உறங்கவில்லையா என்று பொருள் கொள்ளக் கூடாது. ஏனென்றால் ஏற்கனவே உறக்கத்தில் இருப்பவனை ஒருவரும் அவ்வாறு கேட்க மாட்டார்கள். ஆகவே அச்சொல்லை " உறங்கல் ஐயா " என்று பிரித்துப் பொருள் காண வேண்டும். உறங்கல் என்றால் உறங்காதே என்று பொருள்படும். இவ்வாறு நம்மை உய்யக்கொண்டு அஞ்சேல் என்று அபயம் அளித்து, சிவ  நெறி  காட்டுகிறாள் அம்பிகை. 

No comments:

Post a Comment