Tuesday, October 28, 2014

"அடியேற்கு முன்னின்று அருள்"

தமிழிலும்,வடமொழியிலும் பல கடவுளர்கள் மீது கவசம் பாடப்பெற்றிருப்பது பலரும் அறிந்ததொன்றாகும். இவை கவசம் போல இருந்து,ஓதுபவர்களை இன்னல்களிலிருந்து காப்பாற்றுவன. தமிழ்மொழியில் உள்ள விநாயகர் கவசம்,கந்த சஷ்டி கவசம்,ஷண்முக கவசம்,சிவ கவசம் ஆகிய நூல்கள் அன்பர்களால் பாராயணம் செய்து வரப்படும் நூல்களுள் சிலவாகும்.

செந்திலாண்டவனின் பெருங்கருணையினால் ஊமைத்தன்மை நீங்கப்பெற்ற குமரகுருபர சுவாமிகள் அப்பெருமான் மீது பாடிய கந்தர் கலி வெண்பா என்ற நூல் 122 கண்ணிகளால் ஆன அற்புதமான தோத்திரம். இதனை அனுதினமும் பாராயணம் செய்யும் அடியார்கள் பலர். இதில் சிவபெருமானின் பரத்துவமும், கந்தப்பெருமானின் தோற்றமும் , சூர பதுமாதிகளைப் போரிட்டு வென்றமையும் கூறுவதோடு,சைவ சித்தாந்தக் கருத்துக்களையும் நிரம்ப அமைத்திருக்கிறார் அடிகள். செங்கமலப் பிரமனும்,பழ மறையும் இன்னமும் காண மாட்டா பரஞ்சுடராய் ஒளிரும் பரமசிவம் , அனாதியாகவும், ஐந்தொழிற்கும் அப்புறத்தனாகவும்,எவ்வுயிர்க்கும் தஞ்சம் அளிக்கும் தனிப்பெரும் கடவுளாகவும் ,உயிர்கள் மேல் வைத்த தயாவினால் மலபரிபாகம் வரும் காலத்தில்,குருபரனாகி, ஆணவ மலத்தை நீக்கி ,மெய்ஞ்ஞானக் கண் காட்டி, ஆட்கொண்டருளும் தன்னிகரற்ற கருணையைப் பரவுகிறார் குமரகுருபர அடிகள்.

ஆறு தாமரை மலர்கள் மீது மட்டுமா எழுந்தருளினான் கந்தன்? அடியார்களின் மனமாகிய தாமரையிலும்  எழுந்தருளி இருக்கிறான் அல்லவா?  "அன்பர் அகத் தாமரையின் மீதிருக்கும்  தெய்வ விளக்கொளியே " என்று பாடுகிறார் குமரகுருபரர். அப்பெருமான் ஐந்தொழிற்கும் நீங்காத பேருருவாய் நிற்பவன். ஐந்தொழிலையும் நடத்துபவன். அட்டமூர்த்தியாகவும் விளங்குபவன். மெய்ஞானத்தைத் தரும் அட்ட யோகத் தவமெனப் பொலிபவன். செந்தூரில் கருணை வெள்ளம் என வீற்றிருப்பவன். பானுகோபன்,சிங்கமுகன் ஆகியோரை வென்று வாகை சூடியவன். சூரனைத் தடிந்த சுடர் வேலவன். தேவர் சிறை மீட்ட தேவதேவன்.மறைமுடிவாகிய சைவக் கொழுந்தும், தவக்கடலும் அவனே. தெய்வக்களிற்றையும், வள்ளிக்கொடியையும் மணந்து ஆறு  திருப்பதிகளைப் படைவீடுகளாகக் கொண்டவன். ஆறெழுத்தும் சிந்திப்பவர் சிந்தையில் குடி கொள்பவன்.  இவ்வாறு கந்தன் கருணையைப் பரவுகிறது கலிவெண்பா.
 
நூலின் நிறைவில் காணப்படுவது கந்தவேளிடம் செய்யப்படும் பிரார்த்தனை. நமக்குப் பகையாகி  நிற்கும் பலகோடிபிறவிகளிலிருந்தும், பலகோடி துன்பங்களிலிருந்தும் , பலப்பல பிணிகளிலிருந்தும் செய்வினை, பாம்பு, பிசாசு,பூதங்கள், தீ,நீர், ஆயதங்கள் , கொடிய விஷம், துஷ்ட மிருகங்கள், முதலியவற்றால் வரும் தீங்கிலிருந்தும் காப்பாற்றவேண்டி, பச்சை மயிலேறி, பன்னிருதோளனாய், ஈராறு அருள் விழி காட்டி, இடுக்கண் எல்லாவற்றையும் பொடியாக்கி, வேண்டும் வரம் யாவும் தந்தருளி, உள்ளத்தே உல்லாசமாக வீற்றிருந்து பழுத்த தமிழ்ப்புலமையை  அருளி, இம்மை,மறுமையில் காத்தருளி, பழைய அடியாருடன் கூட்டிப் பரபோகம் துய்ப்பித்து பூங்கமலக் கால் காட்டி ஆட்கொண்டு அடியேனுக்கு முன் நின்று அருள்வாயாக என்று வேண்டுகின்றார் குமர குருபர சுவாமிகள்.

இந்நூலை அவசியம் ஒவ்வொருவரும் தினந்தோறும் பன்னிரு திருமுறை- திருப்புகழ்  பாராயணத்தோடு ஓதிவரின், சிவனருளையும் குகனருளையும் ஒருசேரப் பெறுவது திண்ணம். அவசர கதியில் இயங்கும் இவ்வுலகில் நேரமின்மை காரணமாகக் கூறப்படும் போது ,இந்நூலில் கவசமாக அமைந்துள்ள  கடைசி 12 கண்ணிகளையாவது ஓத வேண்டும். எனினும் முழுவதும் ஓதுதலே சிறப்பு.

   '' பூங்கமலக் கால் காட்டி ஆட்கொண்டு அடியேற்கு முன்னின்று அருள். " 

No comments:

Post a Comment