Saturday, December 13, 2014

மாணிக்க வாசகர் கண்ட அதிசயம்

உலகில் இறைவனைப்பற்றிய சிந்தனை இல்லாதவன் வறியவன் ஆகிறான். ஏழ்மையன் ஆகிறான். இந்த ஏழைமை எதனால் வருகிறது என்பதை இவ்வாறு நமக்கு மாணிக்க வாசகப் பெருமான் அழகாக விளக்குகிறார்.  நாமோ செல்வம் இல்லாதவன் மட்டுமே ஏழை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதனால்தான் ,திருஞான சம்பந்தரும் ,"செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே" என்று அருளினார். ஏழைமை என்பதற்கு அறியாமை என்று பொருள் கொள்வோரும் உளர். சிவபெருமானைப் பற்றிய எண்ணம் முதலில் அவன் அருளாலே நமக்கு ஏற்படவேண்டும். அதிலும் அவனது பஞ்சாக்ஷரத்தை எண்ணி எண்ணி அனுதினமும் ஜபம் செய்ய வேண்டும்.

வேதம் நான்கில் நடுநாயகமாய் , மெய்ப்பொருளாய், எல்லாத் தீங்கையும் நீக்கும் அரு மருந்தாய், பந்தபாசம் அறுக்க வல்லதாய், இயமன் தூதர்களையும் நெருங்க விடாமல் செய்வதாய் விளங்கும் சிவ பஞ்சாக்ஷரத்தை ஜபிக்க நமக்கு நல்வினைப்பயன் இருக்க வேண்டும். அத்தகைய பேறு தனக்கு இல்லையே என்று உருகுவார்  மணிவாசகர்.

" எண்ணிலேன் திருநாம அஞ்சு எழுத்தும்  என் ஏழைமை அதனாலே "  என்பது அவ்வுயர்ந்த வரிகள்

கலைகளைக் கற்பவர்கள் எல்லோரும் ஞானிகள் ஆகிவிட மாட்டார்கள். தாம் கற்ற அக்கலைகளை  சிவார்ப்பணமாகச் செய்வோரே உண்மை ஞானிகள்.
" கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே; கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே." என்பது அப்பர் வாக்கு.

ஆகவே கலைகளைக் கற்ற சிவ ஞானிகள் பால் அணுகினால் நமக்கும் அந்த ஞானிகளின்  அருள் கிடைக்கும்.  அதற்கு நாம் நல்வினை செய்திருக்க வேண்டும் அல்லவா? இதைத்தான்,

" நண்ணிலேன் கலை ஞானிகள்  தம்மொடு நல்வினை நயவாதே " என்ற திருவாசக வரிகள் இந்தக் கருத்தை நமக்கு அறிவிக்கின்றன.

உலகத்து உயிர்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் உழல்பவை. உலக வாழ்க்கை முடிந்ததும் மண்ணோடு மண்ணாக ஆகும் தன்மை உடையவை. மீண்டும் பிறவா நெறி  தர வல்ல கடவுளை சிந்திக்காமலும், கலைஞானிகளைச் சென்று அடையாமலும் வீணே காலத்தைக் கழிப்பவை.  கடவுள் அருள் இருந்தால் மட்டுமே கரை ஏறக்கூடியவை. நமக்கும் அந்த அருள் கிடைக்குமா என்று ஒவ்வொரு நாளும் ஏங்குவோருக்கு நிச்சயம் சிவனருள் கிட்டும். பிறவிப் பிணி தீரும். இப்படி ஒன்றுக்கும் பற்றாத நமக்கும் அருள் வழங்கத் தயாராக இருப்பது அவனது வற்றாத மாப்பெருங் கருணையை அல்லவா காட்டுகிறது! இதை விட அதிசயம் ஒன்று இருக்க முடியுமா?

கருணைக் கடலான கலாதரன் தன்னை ஆட்கொண்டதோடு, தனது உயர்ந்த பழைய அடியார் கூட்டத்தோடு சேர்த்து வைத்தது அதை விட அற்புதம் தானே என்று நெகிழ்கிறார் குருநாதர்.

" மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை
அண்ணல் ஆண்டு தன்  அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே."

என்ற திருவாசக வரிகள் கல் நெஞ்சையும் உருக்குவதாக உள்ளன.

முழுப்பாடல் இதோ:
" எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும்  என் ஏழைமை அதனாலே
நண்ணிலேன் கலை ஞானிகள்  தம்மொடு நல்வினை நயவாதே
மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை
அண்ணல்  ஆண்டு தன்  அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே." 

No comments:

Post a Comment