Friday, December 26, 2014

நஞ்சுண்ட தெய்வ நாயகன்

பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்துள்ள பிரபந்தங்களுள் ,பதினொன்றாம் திருமுறையில் உள்ள  " கோயில் நான்மணி மாலை "  என்பதும் ஒன்று. கோயில் என்பது சிதம்பரத்தைக் குறிக்கும். தில்லைச் சிற்றம்பலத்தே  நடம் புரியும் ஆனந்த சபேசனைப் பேசாத  நாட்கள் எல்லாம் பிறவாத நாட்களே என்பார் அப்பர் பெருமான். அவன் புகழை எப்படிப் பேசுவது? அது அளவிடமுடியாத, எவராலும் சொல்லமுடியாத புகழ் அல்லவா  என்றுகூடத் தோன்றும். அவனோ தோன்றாப் பெருமையன். வானோர்க்கும் அரியவன். மறைகளுக்கும் எட்டாதவன். அவன் புகழைப் பாடவோ பேசவோ புண்ணியம் வாய்ந்தவர்கள் உண்மை அடியார்கள் அல்லவா? அவர்கள் வாய் மூலமாவது ஒருசில புகழையாவது நாம் கேட்டு உய்யலாம். அது நமது பாவ வினைகளை ஓடச் செய்யும் சுலபமான வழிதானே! இதைத்தான் பட்டினத்தாரும், " வினை கெடக் கேட்பது நின் பெருங் கீர்த்தி"  என்றார்.

மனித உடல் அன்றாடும் பாவக் குப்பைகளை சேர்க்க வல்லது. இதற்குக் " குப்பாயம் " என்ற பெயர் திருவாசகத்தில் காணப்படுகிறது. ஒழுக்கமின்மை, பொய், சூது , கடும் பிணிகள் ஆகியவற்றை ஏற்றி வினையாகிய மீகாமன் , கலத்தைச்  செலுத்தும்போது, புலன்களாகிய சுறா மீன்கள் அதனைத் தாக்குகின்றன. பிறவியாகிய பெரும் கடலில் அதனைக் கொண்டு தள்ளத் துவங்குகின்றன. குடும்பம் என்ற நெடும் கல் விழுந்து அக்கலத்தின் கூம்பு முறிகிறது. உணர்வுகளாகிய பாய்மரம் கிழித்து எறியப்படுகிறது. கலமானது தலைகுப்புற விழ ஆயத்தமாகும்போது, " தெய்வ நாயகமே, தும்பை மாலையை விரும்பிச் சூடிய பன்னகாபரணா , தில்லை அம்பலவாணா , உனது அருளாகிய கயிற்றைப் பூட்டி , இக்கலம் கவிழாமல் காத்து அருள்வாயாக " என்று மனதாரப் பிரார்த்தனை செய்கிறார்  பட்டினத்து அடிகள்.

பெருமானது புகழ் எப்படிப்பட்டது? பட்டினத்தார் அருளுவதைக் கேட்போம்: "  எல்லா சராசரங்களும் உன்னிடத்துத் தோன்றி உன்னிடத்தில் அடங்குவன. ஆனால் நீயோ ஒன்றினும் அடங்காதவன். தோன்றும் பொருள் அனைத்திலும் நீயே நீக்கமற நிற்கின்றாய். நின்பால் எனக்கு அன்பு பெறுவதற்கு நீயே அருளல் வேண்டும். உன் அருட் செல்வம் கிடைத்துவிட்டால் வேறு எனக்கு என்ன வேண்டும்? நின் தெய்வக்கூத்தையும், எடுத்த பொற்பாதத்தையும் கண்ட கண்களுக்கு வேறு ஒரு பேறு  உளதோ? உன்னை நினைப்பதே சிறந்த தவம். { " தில்லை நகரில் செம்பொன் அம்பலம் மேவிய சிவனை நினைக்கும் தவம் சதுராவதே." }

எனினும் ,எளியேனது சிந்தையில் தேவரீர் தோற்றுவித்தபடி , " நான் முகனின் தந்தையாம் திருமாலுக்குச் சக்கரம் கொடுத்ததையும், குபேரனுக்குச் சங்கநிதியையும்,பதும நிதியையும் கொடுத்த வள்ளன்மையையும், மார்க்கண்டனுக்காகக் காலால் காலனைக் கடந்ததையும், உலகம் யாவற்றையும் ஆல நஞ்சு அழிக்க வந்தபோது, அதனை அமுதாக உண்டு காத்த கருணையையும் ஒருநொடியில் மூன்று புரங்களையும் எரித்த வீரத்தையும் , தாருகா வன முனிவர்கள் ஏவிய யானையைப் போர்த்த பெருமையையும் , பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்த திருவிளையாடலையும் , கயிலையை எடுத்த அரக்கனது ஆணவத்தை அடக்கி அவனுக்கு இரங்கியதையும், தாதையின் தாளைத்தடிந்த வேதியச் சிறுவனுக்கு அருளி, அவனுக்குச் சண்டீச பதம் தந்ததையும், சிறுத் தொண்டர் மனையில் உண்டு பேரருள் செய்ததையும்,வேதாரண்யத்தில் விளக்கைத் தூண்டிய எலியை அரசனாக்கிய கருணையையும், கங்கையும் பாம்பும் செஞ்சடையில் பகைதீருமாறு  ஒருசேர வைத்த பண்பையும் மலையான் மகளுக்குப் பாகம் ஈந்த பெருமையையும் , தில்லையில் " அம்பலத்து ஆடும் நாடகத்தையும்  "  போற்றுவதற்கு அடியேனுக்கு ஆற்றல் இல்லை . என்றாலும் ஆசையால் இவ்வாறு போற்ற எண்ணினேன். " என்கிறார் அடிகள்.

இத்தனை பெருமையும் ,கருணையும் வாய்ந்த ஒப்பற்ற கடவுளைத் தொழாது வேறு கடவுளர்களைத் தொழுவோரும் உளரே என்கிறார் அவர். அப்படிச் சொல்ல காரணம் இல்லாமல் இல்லை. ஆல நஞ்சு எழுந்தபோது எந்தத்தேவரும் அதனை எதிர்க்கவோ, பிறரைக் காக்கவோ முடியாதபோது, கயிலை நாயகனையே சரண் அடைந்தனர். அவ்வாறு நஞ்சுண்டு அவர்கள் காக்கப்பட்டிராவிட்டால் அப்போதே மாண்டிருப்பார்கள் அல்லவா? ஆகவே, கருணைக்கடலான நீல கண்டனைத் தொழுவதே நன்றியுடையவர்க்கு அடையாளம்.  மறைகளின் பிறப்பிடமாகவும், மறையோர்கள் தங்கள் கதி எனத் தொழப்படுவனுமான தில்லைக் கூத்தனை வணங்குவதே முறையாகும் என்று நம்மை எல்லாம் நல்வழிப்படுத்துவார்  பட்டினத்துப் பிள்ளையார்.

வாழ்வாகவும் தங்கள் வைப்பாகவும் மறையோர் வணங்க
ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்தாய் உன்னை அன்றி ஒன்றைத்
தாழ்வார் அறியாச் சடில நஞ்சுண்டிலை ஆகில் அன்றே
மாள்வர் சிலரையன்றோ  தெய்வமாக வணங்குவதே.
   

No comments:

Post a Comment