Saturday, January 16, 2016

நம்மை ஆளும் பசுபதி

பசு என்ற வடமொழிச் சொல் பொதுச் சொல்லாக மனிதர்களையும் பிராணிகளையும் குறிப்பது. எல்லா உயிர்களையும் பசுக்களாகவும் சிவபெருமானைப் பதியாகவும் கூறுவது வழக்கம். ஆகவே," பசூனாம் பதிம்" என்று இறைவன் புகழப்படுகிறான்.  " அம்பிகாபதயே, உமாபதயே , பசுபதயே" என்று அவனைத் துதிக்கிறோம். அப்படி அப்பெயரிட்டு துதிக்கச் சொல்லித் தருவது வேதம். நான்கு வேதங்களுக்கும் நடுவிலுள்ள ஸ்ரீ ருத்ர மகாமந்திரத்தில் பஞ்சாக்ஷரம் வருகிறது. அதே அனுவாகத்தில் " நம: சங்காய ச பசுபதயே ச "  என்று வருகிறது. ஆகவேதான் சுவாமிக்குப் பல ஊர்களில் பசுபதீசுவரர் என்று பெயர் இருக்கக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக , ஆவூர், கரூர், திருக்கொண்டீசுவரம், பந்தநல்லூர் ஆகிய தலங்களைக் குறிப்பிடலாம். கும்பகோணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடையில் பசுபதி கோயில் என்ற ஊரே இருக்கிறது.

பசு என்ற சொல் விசேஷமாகப் பசு மாட்டைக் குறிப்பதாக இருக்கிறது. இதற்கு வடமொழியில் கோ என்ற மற்றொரு சொல்லும் உண்டு. கோகுலம்,கோகுலம்,கோவிந்தன் ஆகியவை அதிலிருந்து வந்தவை தான். அதை அப்படியே தாங்கி நிற்கும் ஊர்ப் பெயர்களும் உண்டு. அரியலூர் மாவட்டத்திலுள்ள கோவந்தபுத்தூரில் உள்ள சிவாலயம், தேவாரத்தில்    ,     " கொள்ளிடக்கரைக் கோவந்தபுத்தூர் " என்றே அழைக்கப்படுகிறது. தூய தமிழில் பசுவை " ஆ" என்ற ஒரே எழுத்து குறித்து விடும். வடமொழியில் கோ என்ற ஒரே  எழுத்து குறிப்பது போலத் தமிழிலும் ஆ என்ற ஒரே எழுத்து பசுவைக் குறிக்கும். ஆன்  என்ற ஈரேழுத்தாலும் குறிப்பர். கரூர் சிவாலயம் ஆனிலை என்றும் விழுப்புரத்தருகில் உள்ள சிவாலயம் ஆமாத்தூர் என்றும் வழங்கப்படுகின்றன. பசுக்கூட்டத்தை  " ஆக்கள் " என்றும் ஆநிரைகள் என்றும் கூறுவர்.. பசுக்களிளிருந்து பெருமானுக்கு அபிஷேகத் திரவியங்களாக ஆன்  ஐந்தும்  கிடைக்கின்றன.

அப்பர் தேவாரத்தில் பசுபதித் திருவிருத்தம் என்ற ஒரு பதிகமே இருக்கிறது. இதில் பாடல் தோறும் மகுடமாக "எம்மை ஆளும் பசுபதியே " என்று அமைத்துப் பாடி இருக்கிறார் அவர். அதில் வரும் ஒவ்வொரு பாடலும் பிறவித் துன்பத்திலிருந்து காக்கும்படிப் பெருமானை வேண்டுவதாக அமைவன. பசுக்களுக்கெல்லாம் பதியான பரமேசுவரனிடம் பசுபதியே என்று அவனைப் பெயரிட்டு அழைப்பதால் புகலிடம் வேறு எவரும் இல்லை என்பது உட்குறிப்பு. பிறரைத் தஞ்சம் என அடையாமல் உன் பாதமே மனம் பாவித்த அடியேனை உய்யக்கொள்வாய் என்பது இப்பதிகத்தின் திரண்ட கருத்து.

கடல் நஞ்சு எல்லா உலகங்களையும் அழிக்குமாறு வெளிப்பட்டபோது தஞ்சமென அடைந்த தேவர்களையும் மற்று எல்லா உயிர்களையும் கலங்காமல் காத்தருளி அதனை உண்டருளி நீலகண்டன் ஆன முழுமுதற்கடவுள் தான் தஞ்சம் என அடையத் தக்கவன் என்பதால், அனைவரும் உன் பாதத்தை இறைஞ்சுகின்றார்கள். அப்படிப்பட்டவர்களது பந்த பாசங்களை அகற்றிப்  பிறப்பிறப்பு இல்லாத பேரின்ப நிலையைத்  தருவாயாக என்று வேண்டுகிறார் நாவுக்கரசர்.

" ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய்  "  என்பன அவ்வரிகள்.

கஜ சம்ஹாரர் 
தவவலிமையால் இறைவனைத் துதியாமல் தாங்களே எல்லாம் சாதித்து விட முடியும் என்ற இறுமாப்புடன்  இருந்த தாருகாவத்து முனிவர்களது அறியாமையை அகற்ற வேண்டி பிக்ஷாடனக்  கோலம் பூண்டு எழுந்தருளிய  பரமன் மீது அம்முநிவர்கள் ஆபிசார வேள்வி மூலம் எழுந்த யானையை ஏவினர். தனது கைச்சூலத்தை  அந்த யானையின் மத்தகத்தின் மீது பெருமான் செலுத்தியவுடன் தன்னை ஏவிய முனிவர்கள் மீதே அந்த யானை சீறிப் பாய ஆரம்பித்தது. வேறு புகலிடம் இல்லாததால் முனிவர்கள் பெருமானையே தஞ்சம் என அடைந்தனர். அவர்களுக்கு அடைக்கலம் தந்த இறைவன் , வானளாவிய மலை போல எழுந்த அந்த யானையை உரித்துப் போர்வையாக்கிக் கொண்டான். யானையால் சற்று மறைக்கப்பட்டபோது எல்லா உலகங்களும் இருள் சூழ்ந்தன. காரணம் சூரிய சந்திரர்கள் பெருமானது திருக்கண்களாக விளங்குவதுதான். அப்போது பெருமானைக் காணாமையால் உமாதேவியே அஞ்சினாளாம். அதனைக் கண்டவுடன்  புன்னகைத்தானாம் பரமன்.          " சிரித்து அருள் செய்தார்" என்பது தேவாரம். அதன்  பின்னர் அம்முநிவர்களுக்குக் க்ருத்திவாசனான ஈசுவரன் ஞானோபதேசம் செய்தான். இவ்வாறு அடைக்கலம் என்று அடைந்தோரைக் காக்கும் காரணம் பற்றியே அப்பரும் மேற்கண்டவாறு விண்ணப்பித்தார்.

" அண்டமே அணவும் பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்து வேய்த்தோளி அஞ்சப் பருவரைத் தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே"

" பெருவரைக்குன்றம் பிளிறப் பிளந்து" என்றது  மலை போல் திரண்டு வந்த யானை ஓலமிட்டுப் பிளிற அதனைப்  பிளந்து என்று  பொருள் படும்.
எம்மை என்றதால் நம் எல்லோரையும் பசுபதி ஒருவனே ஆளுபவன் என்பது தெளிவாகிறது.

சிவ நாமங்கள் ஆயிரமாயிரம் இருந்தாலும் நீலகண்டன்,சந்திரசேகரன், கங்காதரன்,பசுபதி போன்றவை தனித்தன்மை வாய்ந்தவை சிவபரத்துவத்தை விளக்குபவை. நிகரற்றவனாகவும் மிக்கார் எவரும் இல்லாதவனாகவும் இறைவன் விளங்குவதைப் பறை சாற்றுபவை. இந்த   நாமங்களால் துதிப்போரை என்றென்றும்  காப்பவை. ஆகவே இறைவனைச் சரணடைந்தபோது அப்பரும் பசுபதியே என்று பெருமானைப் பாடல் தோறும் அழைக்கிறார்.

 " ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய் அண்டமே அணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்து வேய்த்தோளி அஞ்சப்

பருவரைத் தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே.

5 comments: