Sunday, February 14, 2016

மாசு நீக்கும் மகா மகம்

மகாமகத் திருக்குளம் 
புண்ணிய தீர்த்தங்களிலும் ,நதிகளிலும், கடலிலும் நீராடுவது புண்ணியச் செயலாகப் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. புண்ணிய மூர்த்தி,புண்ணியத் தலம் , புண்ணிய தீர்த்தம் ஆகிய மூன்றையும்  பிறவி ஈடேறுவதற்காக  தீர்த்த யாத்திரை செய்பவர்கள் அத்தியாவசியமாகக் கருதுவர். காசி- ராமேசுவர யாத்திரை போன்றவை இதில் அடங்கும். புண்ணிய நதிகள் சங்கமம் ஆவதால் கடல் நீராடுதலை விசேஷ நாட்களில் மேற்கொள்வர். மகோதய புண்ணிய காலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்வதும்,பித்ருக்களை வழிபடுவதும் மிகுந்த பலன்களை அளிக்கும்.

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மாசி மாத மகம் கூடிய நன்னாளில் மகா மக விழாவாகக் கொண்டாடப்படுவது எத்தனையோ நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. நதி தேவதைகளும் தங்களிடம் மக்கள் நீராடுவதால் ஏற்பட்ட பாவங்கள்  தீருவதற்காக  இந்த நாளில் கும்பகோணத்திற்கு வந்து இறைவனருளால் புனிதம் பெற்றதாகப் தல புராணம் கூறும். மகா மகக் கரையில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்தில் இந்நதி தேவதைகளுக்கென்று தனி சன்னதி உள்ளது. எனவே அன்றைய தினத்தில் கங்கை ,யமுனை போன்ற புனித நதிகள் இத் திருக்குளத்தில் வந்தடைவதால் அது மேலும் புனிதம் பெறுகிறது.

..."  தாவி முதல் காவிரி நல்  யமுனை  கங்கை
சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ் குடந்தை .."
என்பது தேவாரம்.

பல நேரங்களில் புனித நீராடுவதன் நோக்கத்தை நாம் மறந்து விடுகிறோம். அது உடல் அழுக்கைக் களைவதற்காக மேற்கொள்வது அல்ல. உள்ளத்து அழுக்கு நீங்குவதே அதன் தனிச் சிறப்பு என்பதை நீராடுபவர் ஒவ்வொருவரும் உணர வேண்டும். நான் மகாமகத்திற்குச் சென்று வந்தேன் என்று சொல்லிக் கொள்வதைக் காட்டிலும் அப்படிச் சென்றதால் ஏற்பட்ட ஆன்மலாப அனுபவத்தையே ஒவ்வொருவரும் சிந்தித்து மகிழ வேண்டும். நாம் அங்கு செல்வது கூட்டத்தை வேடிக்கை பார்ப்பதற்கோ, கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கோ நிச்சயமாக இல்லை.

ஒவ்வொரு நாளும் பாசிக் குளம் போல மீண்டும் மீண்டும் அழுக்குப் படியும் மனம் நமக்கு உண்டு. அப்பாசியை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அகற்றினால் போதாது. அன்றாடம் மேற்கொள்ளும் சிவ பூஜை,சிவ சிந்தனை ஆகியவை அவ்வப்போது மனத்தைத் தூய்மைப்  படுத்தி விடும். அப்படியானால் மகா மகம் எந்தவகையில் தூய்மை செய்யும் எனக் கேட்கலாம். அது பன்னிரண்டாண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் கும்பாபிஷேகம் போன்றது. மனமானது  மேன் மேலும் தூய்மை ஆகி இறைவன் அமரும் பெருங்கோயிலாக ஆக வேண்டும் என்பதே இதன் நோக்கம். அனுதினமும் இறைவனை எண்ணாதும்,மலரிட்டு வணங்காமலும் ஈசன் எங்கும் நிறைந்துள்ள அருமையை உணராமலும் இருந்து விட்டு கங்கை,காவிரி போன்ற நதிகளில் நீராடுவதால் ஏற்படப்போகும் பயன் தான் என்ன  என்று கேட்கிறார் திருநாவுக்கரசர்

கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்
கொங்கு தண் குமரித் துறை ஆடில் என்
ஓங்கு மாகடல் ஓத நீர் ஆடில் என்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.

இதனால்  எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஈசனை  நாள்தோறும் நினையாமலும்,வழிபடாமலும் நாட்களைக் கழித்து விட்டு, ஏனையோர் சொன்னார்கள், செய்தார்கள் என்பதற்காகப் புனித நீர் ஆடி விட்டு மீண்டும் பழையபடி தெய்வ பக்தி இல்லாமலே காலம் தள்ளுபவர்களுக்கு என்ன சொல்வது?

கும்பேசப்பெருமானைப் பாடும்போது நாவுக்கரசர் அருளிய நற்செய்தி ஒன்றை நாம் இங்கு நினைவு கொள்ளலாம்:

"சிரமம் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்
பரமனைப் பல நாளும் பயிற்றுமின் ..."
என்பதே அந்த நல்லுபதேசம்.

காசிக்குப் போனால் நமக்குப் பிடித்த காய் கறிகளில் ஒன்றை நீக்க ஆரம்பிக்கும்போது, குடந்தைக்கு மகா மக நீராடச் சென்றால் மன  அழுக்கை நீக்கி நற்குணங்களைப் பெற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால்தான் தீர்த்தமாடியது அர்த்தமுள்ளதாகிறது. அப்போதுதான் அந்த உண்மை இறை அருளால் புரிய வரும்.

2 comments:

  1. Thank you for a divine reminder to the typical pilgrim that it is the cleansing of our thought processes that is called for when we go to punita teerthas like kudanthai, rather than the physical dipping of our bodies, which we are anyway likely to do on holy occasions.

    ReplyDelete
  2. மன அழுக்கை நீக்கி நற்குணங்களைப் பெற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால்தான் தீர்த்தமாடியது அர்த்தமுள்ளதாகிறது.. very powerful line...thanks to share.

    ReplyDelete