Monday, July 18, 2016

சங்கரா சய போற்றி

திருநாவுக்கரசர் 

மனத்தை ஒருநிலைப்படுத்துவது சாதாரண காரியம் இல்லைதான், அலைபாயும் மனத்தை நிலைப்படுத்த ஒருவேளை சிறிது முயற்சி செய்தாலும் அது நிலைத்து நிற்பதில்லை. " ஒன்றி இருந்து நினைமின்கள் " என்று அப்பர் சுவாமிகள்  உபதேசிக்கிறார். அப்படி நிலைபெறுவதால் அடையும் லாபம் தான் என்ன? அதற்கும் அவரே பதில் சொல்கிறார்:                     " உந்தமக்கு ஊனம் இல்லை" என்று. தியானம் செய்பவர்களுக்கு இது மிகவும் அவசியம் ஆகிறது, பெயருக்காகச் செய்யப்படும் தியானம் எவ்வாறு சித்தி தரும்? அப்படித்  தியானிப்பவர்களோடு கூடவே ஈசுவரன் இருக்கிறான் என்பதையும் அவரே, " உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி " என்கிறார். அவ்வாறு மனதை நிலைபெறச் செய்வதற்கான வழி வகைகளையும் நமக்கு அருளிச் செய்கின்றார் அப்பர் பெருமான்.

நம்மால் மனத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லையே என்று மிகவும் ஏங்குபவர்களுக்கு இந்த உபதேசம் ஒரு வரப்பிரசாதம். அதைப் பற்றிக் கவலைப்படாது மிருக வாழ்க்கை வாழ்பவர்களுக்கு என்ன சொல்ல முடியும்? பக்குவம் என்பது மனதைப் பொறுத்த விஷயம். பிறரையும் பக்குவம்  அடையத்தூண்டுவதாகவும் அது அமைய வாய்ப்பு உண்டு. நம்மை நாமே பக்குவப்படுத்த முடியாமல் இருப்பதால் அதற்கான வழியை குருநாதர் நம் மேல் உள்ள இரக்கத்தால்  காட்டுகிறார். அப்படி உபதேசம் செய்யும்போது அவரது உயர்ந்த நிலை வெளிப்படுகிறது. பிறருக்கு அறிவுரை வழங்குபவர்கள் முதலில் அதைக் கடைப்பிடிக்க வேண்டுவது அவசியம் அல்லவா? ஆகவே தனது நெஞ்சுக்கு உபதேசிப்பதுபோல இப்பாடலை வழங்கி அருளுகின்றார் நாவுக்கரசர்.

" நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா " என்று அறைகூவி அழைத்து அறிவுரை வழங்குகிறது அப்பாடல். பிறகு நாம் செய்ய வேண்டிவைகள் என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக உணர்த்துகிறது. வைகறையில் சிவாலய தரிசனம் செய்ய வேண்டுவதை முதலில் சொல்கிறார் அப்பர். அதை ஏதோ ஒரு நாள் செய்தால் போதாது. தினமும் செய்ய வேண்டும். அதனால் தான், " நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு" என்கிறார்.

கதிரவன் உதயம் செய்வதன் முன் திருக்கோயிலை அடைந்து எம்பிரானது சன்னதியைத் திருவலகால் தூய்மை செய்து, மெழுக வேண்டும். பூக்களால் ஆன மாலைகளைக் கொண்டு வந்து இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பெருமானது புகழை வாயாரப் புகழ்ந்து பாட வேண்டும் .
" புலர்வதன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப் பூ மாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடி" என்பன அவ்வரிகள்.

தரிசிக்கும்போது கைகள் தலை மீது ஏறியவாறு  தரிசிக்க வேண்டுவதைத்       " தலையாரக் கும்பிட்டு" என விளக்கும் பாங்கு அருமையானது.ஆனந்தக் கண்ணீர் மல்கத்  தரிசனம் கண்ட அனுபவத்தால் அடியார் கூத்தாடுவர். அதனைக் " கூத்தும் ஆடி " என்பார்.

எம்பெருமானது நாமங்களைச் சொல்வதால் நமது பாவ வினைகள் அகன்று தூய்மை பெறலாம். அவனது நாமங்களைப் பிறர் சொல்லக் கேட்பதிலும் ஆனந்தம் ஏற்படுகிறது.தோணிபுரத்து ஈசன் நாமத்தை ஒரு தரம் கிளியின் வாயால் சொல்லச்  சொல்லிக் கேட்க ஆவலோடு இருப்பதாக  ஞான சம்பந்தர் பாடுவதன்  மூலம் அறிகிறோம். எனவே, பெருமானை சங்கரா என்றும் ஜெய ஜெய போற்றி என்றும் அலை பாயும் கங்கையை சடையில் தாங்கியவன் என்றும், அருண ஜடாதரன் என்றும் ,ஆதி மூர்த்தி என்றும் , ஆரூர் ஆண்ட அரசே என்றும் ( ஆரூரா தியாகேசா என்றும்) அலற வேண்டும் . இப்படிப் பன்னாள் அழைத்தால் , இவன் என்னைப் பன்னாள் அழைத்தலைத் தவிராதவன் என்று இறைவன் வெளிப்படுவான்.
" சங்கரா சய போற்றி என்றும் அலைபுனல் சேர் செஞ்சடை எம் ஆதி என்றும் ஆரூரா என்றென்றே அலறா  நில்லே"    

இப்போது முழுப்பாடலையும் நோக்கலாம்:

நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா                                                        

நித்தலும் எம்பெருமானுடைய கோயில் புக்குப் 

புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப் 

பூமாலை புனைந்து ஏத்திப்  புகழ்ந்துபாடித்

தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடி 

சங்கரா சய  போற்றி போற்றி என்றும் 

அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ என்றும் 

ஆரூரா என்றென்றே அலறா  நில்லே .

காஞ்சி மகா பெரியவர்களுக்கு அப்பர் சுவாமிகளின் திருத்தாண்டகப் பாடல்களில் ஆர்வம் அதிகமாக இருந்தது. மேற்கண்ட பாடலில் வரும்                  " சங்கரா சய " என்ற  வரியை பக்தர்கள் அனைவரும் உச்சரித்துக் கடையேறும் வண்ணம்  "  ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர " என்று அமைத்துக் கொடுத்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மனம் ஒருமுகப்படும்போது பண் படுகிறது. ஆனால் இப்போது நாம் பண் படுகிறோமோ இல்லையோ பிறர் மனத்தைப் புண்  படுத்துகிறோம். பிறர் துன்பத்தைக் காணப் பொறாத மனம்; பிறருக்கு இரங்கி உதவும் மனம்; பிறரும் வாழ வேண்டும் என்று எண்ணும்  மனம்; பிறர் மீது பொறாமை கொள்ளாத மனம் ; நன்றி மறவாத மனம்; இறைவனை ஒருபோதும் மறவாத மனம் முதலிய பல்வேறு குணங்களைப் பெற்றால் தான்  மனிதன் என்று சொல்லிக்கொள்ள முடியும். நல்ல குணங்கள் குரு அருளாலும் இறை அருளாலும் நம்மை வந்து அடையும். மனத்திற்குத் துணையாகவும் அது கூட இருந்து நம்மைக் காக்கும். வலிவலம் என்ற தலத்தில் சுவாமிக்கு மனத்துணை நாதர் என்று பெயர் வழங்குகிறது. நாமும் மனத்துணையே என்றும் ஆரூரா என்றும் நித்தலும் போற்றி ஆலயதரிசனம் செய்து தொண்டாற்றினால் மனம் நிலைபெறும்; ஒருமுகப்படும் என்பது அருளாளர் வாக்கு.    




1 comment:

  1. மிகவும் அற்புதமான விளக்கம் ஐயா.
    🙏🌹🕉️
    தினசரி தாங்களது பதிவினை படித்தும் பகிர்ந்தும் வருகிறேன்.
    இப்பக்கியம் எம்பெருமான் திருவருள்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    சிவா திருச்சிற்றம்பலம்

    ReplyDelete