அங்கையற்கண்ணி தன்னோடு அமர்ந்த ஆலவாய் ஈசன் |
தேற்றம் என்ற சொல்லுக்குத் தெளிவு என்று பொருள். தேற்றம் இல்லாவிட்டால் குழப்பமே மிஞ்சும். மாற்று வழிகளில் செல்ல மனம் தூண்டும். ஆகவே அறிவு மேம்பட ஆண்டவனின் அருள் தேவைப்படுவதை நாம் அறிய முடிகிறது. " அறிவோடு தொழும் அவர் ஆள்வர் நன்மையே" என்று திருக் கருக்குடித் தேவாரத்தில் ஞானசம்பந்தர் பாடுகிறார். உயிர்களுக்கு நம்மை செய்வதையே கொள்கையாகக் கொண்டவன் இறைவன். " தொழுவாரவர் துயராயின தீர்த்தல் உன தொழிலே" எனப்பாடுகிறார் சுந்தரர். நன்மை செய்வதையே தொழிலாகக் கொண்ட நமையாளும் பெருமானுக்கு " நன்மையினார் " என்று பெயர் சூட்டுகிறார் நம்பியாரூரர். " நன்மையினார்க்கு இடம் ஆவது நம் திருநாவலூரே " என்பது அவரது வாக்கு.
இறைவனது செய்கைகள் எல்லாம் உலகம் உய்வதற்காகவே என்பதை உணர வேண்டும். அவனது இப்பேரருளைக் கண்டு வியந்து துதிக்கிறார் ஞான சம்பந்தர். நான்கு திசைகளுக்கும் முதல்வனாகவும் மூர்த்தியாகவும் நின்று நன்மை அருள்பவனாகிய சிவபரம்பொருளை ,
" நால் திசைக்கும் மூர்த்தியாகி நின்றது என்ன நன்மையே !!! " என்று மதுரை ஆலவாய்ப் பெருமானைப் பாடுகிறார் அவர்.
மனதில் தெளிவு ஏற்பட்டால் நன்மை விளையும். அதுவே புண்ணியச் செயல்களைச் செய்யத் தூண்டும். நின்ற பாவ வினைகளை நீங்கச் செய்யும். தீவினைச் செயல்களை மேற்கொள்பவர்கள் அப்புண்ணியத்தில் ஈடுபட மாட்டார்கள். இறைவனை ஏசவும் தயங்க மாட்டார்கள். தமது வழியே சிறந்தது என்றும் கூறத் தொடங்கி விடுவார்கள். இவ்வளவுக்கும் மூல காரணம் மனதில் தேற்றம் இல்லாமல் போவதுதான். அவ்வாறு வினைத் தொழில் வழி நின்ற சமணர்களையும் பௌத்தர்களையும் கண்டிப்பதோடு, மனதில் தெளிவு ஏற்பட வழியையும் சொல்லி அறிவுறுத்திகிறார் சீகாழிப் பிள்ளையார்.
" தேற்றம் இல் வினைத் தொழில் தேரரும் சமணரும்
போற்றி இசைத்து நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொ(ள்)ளார் "
சிவன் சேவடியைப் பற்றுவதோடு, பாணபத்திரனைப் போல் ஆலவாய் அண்ணலைப் புகழ்ந்து பாடினால் சிவ புண்ணியம் கிடைக்கும் என்பது இதனால் உணர்த்தப்படுகிறது.
அவ்வாறு சேவடி பற்றிய மார்க்கண்டேயன் என்ற பாலனது உயிரைக் கொள்ள வந்த காலனைக் காலால் உதைத்து வீழச் செய்து அச்சிறுவனைக் காப்பாற்றியதுபோல் அடியவர்கள் அனைவரையும் எம பயமின்றிக் காத்துத் தன் சீரடிக்கீழ் வைத்தருளுவான் என்றும் சம்பந்தப்பெருமான் அருளுகின்றார்.
" கூற்று உதைத்த தாளினாய் , கூடல் ஆலவாயிலாய் "
என்பது அப்பாடலின் அற்புதமான வரிகள் உணர்த்தும் கருத்து.
மதுரைக்குச் சென்று சமணர்களை வென்று பாண்டியனை மீண்டும் சைவனாக்கி அவை யாவும் ஈசன் திருவிளையாடலே என்பதால் பாண்டியனும்,மங்கையர்க்கரசியாரும்,குலச்சிறை நாயனாரும் உடன் வர, ஆலவாய் ஈசனது ஆலயத்தை அடைந்து பெருமான் முன்பு திருஞானசம்பந்தப்பெருமான் போற்றி இசைத்த அருமையான திருப்பதிகத்தில் வரும் பாடலே இது.
" தேற்றம் இல் வினைத் தொழில் தேரரும் சமணரும்
போற்றி இசைத்து நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொ(ள்)ளார்
கூற்று உதைத்த தாளினாய் , கூடல் ஆலவாயிலாய்
நால் திசைக்கும் மூர்த்தியாகி நின்றது என்ன நன்மையே."
சிவனருள் துணை நின்றாலொழிய அப்புண்ணியம் கிட்டாது என்ற சைவ சித்தாந்தக் கருத்தும் இங்கே புலப்படுகிறது. இதையே, " அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்றார் மணிவாசகப் பெருமான்.
No comments:
Post a Comment