Thursday, April 12, 2018

சித்தமும் சிவமும்

திருஞானசம்பந்தர்_ முகநூல் படம் 
" பல ஆண்டுகளாக இப்படி இணைய தளத்தில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதுகிறீர்களே, இதனால் கண்ட பலன் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ? எல்லோரும் படிப்பார்கள் என்றும், இது ஏதாவது மாற்றத்தை அவர்களிடம் ஏற்படுத்தும் என்றும் நினைக்கிறீர்களா? எனக்கு என்னவோ உங்கள் நேரத்தை வீணாகச் செலவு செய்கிறீர்கள் என்றே தோன்றுகிறது '  என்று பொரிந்து தள்ளினார் ஒரு ஆப்த நண்பர்.  அவரது ஆதங்கம் நன்றாகவே புரிந்தது. அதில்  உண் மையும் இருந்தது. சுமார் நூறு பேருக்கு அனுப்பினால் பாதிப் பேர்  அதைத் திறந்துகூடப் பார்ப்பதில்லை என்று புள்ளி விவரம் மூலம் அறிகிறோம். மீதி வாசகர்கள் மேலோட்டமாகக் கதை படிப்பதுபோல படித்துவிட்டு மூடி விடுவார்கள் போல இருக்கிறது. சிலர் பார்த்த மாத்திரத்திலேயே இவருக்கு வேறு வேலை இல்லை, அரைத்த மாவையே அரைப்பார் என்று முகம் சுளித்து விட்டு அழித்து விடவும் வாய்ப்பு உண்டு.  ஐந்துக்கும் குறைவானவர்களே முழுமையாகப் படிப்பவர்கள். சில சமயம் அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பின்னூட்டமாக இடுவதும் உண்டு. 

நவீன உலகில் படிக்கவே நேரம் இல்லாமல் போய் விட வாய்ப்பு உண்டு என்பதால் கட்டுரைகளை மிகச் சுருக்கமாக அமைத்தும் படிக்கவில்லை என்றால் என்ன காரணமாக இருக்கலாம் ? கோவிலுக்குத் தினமும் போவதோ, வீட்டில் பூஜை மற்றும் பாராயணம் செய்வதோ குறைந்து விட்ட நிலையில் நம்மை அனுதினமும் காக்கும் கடவுளுக்காக ஐந்து நிமிடம் கூட ஒதுக்க நேரம் இல்லை என்றால் எப்படி நம்புவது ?  தமிழ் பேச மட்டுமே தெரியும், எழுதிப் படிக்கத் தெரியாது என்று சொல்லும் தற்காலத் தமிழ்க் குடும்பங்கள் ஆங்கிலத்தில் எழுதலாம் என்றும், பேசியதைப் பதிவு செய்யது அனுப்பலாம் என்றும் கேட்கத் துவங்கி விட்டன. அப்போதும் இவற்றைக் கேட்க எவ்வளவு பேர் முன்வருவர் என்பது கேள்விக் குறியே.

ஆனால் நண்பர் கூறியது போல் நேரம் வீணாவதாக ஒருபோதும் நாம் நினைப்பதில்லை. எழுத ஆரம்பிக்கும்போது என்ன எழுதுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும்போது நம் கூட இருந்து சொல்லித்தரும் சிவ கிருபைக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் ? எழுத்து அறிவித்த இறைவன் சொல்லுவதை  அப்படியே எழுதும் பணியாளாக இருப்பதை விட பாக்கியம் வேறு ஏது ? ஈசுவரனது வாக்கானபடியால் அது அவனருள் பெற்றோருக்கே போய்ச் சேரும் என்று எண்ணத் தோன்றுகிறது. எழுதி முடிக்கும் வரை சிந்தையை விட்டு சிவம் நீங்குவதில்லை அல்லவா ? ஆகவே நேரம் செலவாவதில்லை, சம்பாதிக்கப் படுகிறது என்று நண்பருக்கு விடை கூறினோம். நண்பரோ விடாக் கண்டர். " அப்படியானால் சிந்தை என்பது என்ன, மனம் என்பது என்ன? அது உடலில் எங்கே இருக்கிறது? மூளையிலா அல்லது இருதயத்திலா " என்று படபட என்று கேள்விகளை எழுப்பத் தொடங்கி விட்டார்.

  சித்தம்,சிந்தை என்ற வார்த்தைகள் சிந்தனைக்கு ஊற்றுக் கால்களாக விளங்குபவை. முக்தி அடைவதற்கு முதல் படியாக சித்த சுத்தியும்,இரண்டாவதாக பக்தியும் முக்கியமானவை . சித்தம் போக்கு,சிவம் போக்கு என்றும், சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் இல்லை என்றும் சிந்தனையை சிவத்தோடு சம்பந்தப்படுத்தியுள்ளார்கள் பெரியோர்கள். சித்தத்தில் தெளிவு ஏற்படாவிட்டால் பக்தி ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆகவே தான், சித்தத்தைக் கட்டும் மலவாதனை இறை அருளால் மட்டுமே நீங்கும் எனத் தெளிவு படுத்தியுள்ளார்கள். " சித்த மலம் அறுவித்துச்  சிவமாக்கி எனை ஆண்ட "  என்கிறார் மாணிக்கவாசகர்.  

சிந்தனை தூய்மையானதாக விளங்குவது மிகவும் கடினமானதுதான். ஒருவேளை சில மணித்துளிகள் நிர்மலமாக ஆனாலும் விரைவிலேயே அது  களங்கப்பட்டு விடுகிறது. எனவே தினந்தோறும் அதனைத் தூய்மைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு ஒரே உபாயம் இறைவனைப் பற்றிய சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ளுவதே. " சிந்தனை நின்தனக்கு ஆக்கி " என்று இதனைத் திருவாசகம் கூறும். 

ஆகவே பக்தி நெறிக்கு நம்மை ஆயத்தப்படுத்த முதலாவதாகச் சிந்தை தூய்மை பெறுதல் மிகவும் அவசியமாகிறது. அடுத்தபடியாக ஒன்றிய சிந்தையுடன் இறைவனை மலர்களால் அர்ச்சித்து வழிபடும்போது பக்தி மேலோங்குகிறது. எனவே அது பக்தி மலர்களாகி அர்ச்சனைக்கு உரியதாகிறது. பக்தியாகிய நாரினால் மலர்களைக் கட்டி திருப்புகலூர் வர்த்தமானிசுவரப் பெருமானுக்கு மாலை சார்த்தி வழிபட்டார் முருக நாயனார். புத்தமதத்தைச் சார்ந்த சாக்கிய நாயனார் எறிந்த சல்லிக் கற்களை அவரது பக்தித்திறம் ஒன்றையே கருதி,புது மலர்களாக ஏற்றுக் கொண்டான் சிவபெருமான். 

மனத்  தூய்மையால் விளைந்த பக்தியுடன்  இறைவனை வழிபட்டால் முக்தி எளிதாகும் என்பதைக் கண்ணப்ப நாயனார் புராணத்தாலும் அறிகிறோம். அகத்து அடிமை செய்ததால் அன்பின் வடிவாகவே ஆனார் கண்ணப்பர். இங்கு அகம் என்பது மனமாகிய சிந்தை எனக் கொள்ளலாம். இதைத்தான் சிவானந்தலஹரியில் ஆதி சங்கரரும் எடுத்துக் காட்டி, " பக்தி எதைத் தான் செய்யாது ?" என்றார். 

இவ்வளவு கருத்தாழ்வு கொண்ட ஒப்பற்ற கொள்கையைத்  திருஞானசம்பந்தப் பெருமான் நாமும் உய்ய வேண்டும் என்ற பெருங் கருணையினால் இரண்டே வரிகளில் கீழ்க் கண்டவாறு பாடியருளினார் :

" சித்தம் தெளிவீர்காள்  அத்தன் ஆரூரை 
  பத்தி மலர் தூவ முத்தி ஆகுமே. " 

தெளிந்த சிந்தையுடன் ஆரூர்ப்பெருமானைப் பக்தி மலர்கள் தூவி வழிபட்டால் முக்தி எளிதில் கிடைத்துவிடும் என்பது இதன் கருத்து. 

முத்தி நெறி அறியாத மூடர்களோடு திரியும் உயிர்கள் பால் சிவபெருமான் இரங்கி,கருத்திருத்தி,ஊனுள்ளே புகுந்து, சித்த மலத்தை அறுவித்துச் சிவமயமாக்கிக்  கருணை பாலிக்கிறான் என்ற சிந்தாந்தக் கருத்தும் இங்கு சிந்திக்கற்பாலது .  

9 comments:

  1. ஆய்ரத்தில் இரண்டு மூன்று பேர் நீங்கள் எழுதுவதைப் பிரியத்தோடு படிக்கட்டும். அவர்களில் ஒருவர் மந்த்தில் எழுந்ததை நம் எல்லோரோடும் பகிர்ந்து கொள்ள்ட்டும். அன்பு நிறை சிவ பெருமான் உள்ளம் குளிரவே செய்வார். எழுதும் பணியை அயராது தொடருங்கள்.
    அன்புடன் தேசிகன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஆசிகளும் நல்லாதரவும் அடியேனை மேலும் எழுதத் தூண்டுகின்றன. மிகவும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.

      Delete
  2. எந்த செயலுக்கு எப்பொழுது பயன் கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது.அவன் இட்ட கட்டளையை எதையும் எதிர்பாராமல் செயல் படுத்துவது தான் கடமை. என் கடன் பணி செய்து கிடப்பதே. தங்கள் பணி தொடர இறை அருள் கூடட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அப்பர் பெருமானின் வாக்கை முன்னிருத்திப் பணி செய்யத் தூண்டியமைக்கு மிக்க நன்றி. என்ன பயன் விளையும் என்று கவலைப் பட வேண்டாம் என்பது ஆயிரத்தில் ஒரு வார்த்தை.

      Delete
  3. Obviously,today's world has too many distractions and most are drawn to more of negative news. When we switch on the TV we are bombarded with repeat news some of which have become nauseating and each channel vies with the other to project themselves as the best investigators.It is quite unfair that much of good deeds are done by a few who remain anonymous.Is it not the duty of the news channels to bring out to the public the fair and positive side.
    You are doing a very commendable job and appreciate the goodness.With your wide knowledge in Aanmeegam you should continue the efforts which can enlighten the less fortunate.

    ReplyDelete
    Replies
    1. Dear Balu, I firmly believe that the writings are not mine. I really feel as if I am made to write something about which I rarely thought in the past. I am unable to explain His blessings , yet people call it as humility which, according to me is totally untrue. Thanks a lot for your encouraging words.

      Delete
  4. it is true that we are unable to obtain even a negligible quantity of matchless gems from the mine regardless of making several attempts in our entire life. Yet we desire to try more and more so that we collect few dust from the mine before we breath last. Thank you Chandru for your wonderful support.

    ReplyDelete
  5. மலவாதனை என்றால் என்ன என்று பொருள் தேட சென்றேன் அங்கே தங்கள் கட்டுரையை கண்டு மகிழந்தேன்

    ReplyDelete
  6. நமசிவாயம் ஐயா.
    🙏🌹🕉️🔥☸️
    தாங்களது மேலான பதிவினை தினம் ஒன்றாக எங்கள் பசுபதி ஈஸ்வரர் ஆலய குழுவில் பதிவிட்டு வருகிறேன்.
    🙏🙏🙏🙏🙏
    அடியார் பெருமக்கள் மிகுந்த மன நிறைவுடன் தொடர்ந்து வாசித்து வருகிறார்கள். தாங்கள் கூறியது போல இதைப் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

    ReplyDelete