Saturday, September 12, 2020

பல பொருட் சொற்கள்


ஒரே பொருளைத் தருவதுபோலத் தோன்றினாலும் உண்மையில் பல பொருட்களைத் தரும் சொற்கள் தமிழில் இருக்கக் காணலாம். நாம் அடிக்கடிப்  பயன்படுத்தும் சொற்கள் பலவற்றுள், வேட்கை,ஆசை, அவா,பாசம்,அன்பு, நேசம், காதல் போன்றவை ஒரே பொருளைக் குறிப்பது போலத்  தோன்றினாலும் இடத்திற்கேற்ப வேறு வேறு பொருள் கொள்ளத்  தக்கவை ஆகும். 

ஏதேனும் ஒன்றைத் தனக்கு உரியதாக அடைய வேண்டும் என்ற எண்ணம் இதயத்தில் ஏற்படும்போது எழுவது வேட்கை. அதில் சுய நலம் ஓங்கி நிற்கும். சாதாரண ஒரு பொருளை வாங்குவது,கைப்பற்றுவது முதலாக நாடு பிடிப்பது வரையில் வேட்கை ஏற்படுகிறது. வேண்டுவதற்கும் வேட்கைக்கும் வித்தியாசம் உண்டு. தானும் பிறரும் உய்ய வேண்டும் என்று அருளாளர்கள் வேண்டுவது வேட்கை ஆகாது. அவர்கள், " வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம்,வேண்டேன் விண்ணும் மண்ணும் " என்ற கொள்கை உடையவர்கள். இறைவனே கருணை புரிந்து எதனை அளித்தாலும், அளிக்காவிட்டாலும் அவ்விரண்டையும் சமமாகப் பாவிப்பவர்கள். நமக்கு வேண்டுவதை இறைவன் நாம் சொல்லாமலே அறிவான் என்பதால், " வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்  அதுவும் உந்தன் விருப்பன்றே "  என்று இருந்து விடுவார்கள்.  பாமரர்கள் மட்டுமல்லாது தேவர்களும் தனக்கே அனைத்தும் வேண்டும் என்ற வேட்கை உடையவர்கள். " இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்" என்பதே அவ்வேட்கை. 

வேட்கை மேலிடுவதால் ஏற்படுவது ஆசை. இங்கும் அருளாளர்கள் எவ்வாறு ஆசைப்பட்டார்கள் என்று முதலில் நோக்குவோம். திருவாசகத்தில் ஆசைப் பத்து என்ற ஒரு பதிகம் அமைந்துள்ளது.மாணிக்க வாசகர் ஆசைப்பட்டதெல்லாம் இறைவனைக் காண வேண்டும் , அவனது பவளத் திருவாயால் அஞ்சேல் என்று சொல்ல வேண்டும் , அவனது ஆயிரம் பெயர்களால் போற்றித் துதிக்க வேண்டும் என்பதே.அவரது உள்ளக் கிடக்கையைக் கீழ்வரும் அவரது பாடலால் அறியலாம்: 

" கையால் தொழுது உன் கழற்சேவடிகள் 

கழுமத்  தழுவிக் கொண்டு 

எய்யாது என்றன் தலைமேல் வைத்து 

எம்பெருமான் பெருமான் என்று 

ஐயா என்றன் வாயால் அரற்றி 

அழல் சேர் மெழுகு ஒப்ப 

ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் 

கண்டாய் அம்மானே "  

என்பதால் இறைவன் பால் கொண்ட ஆசை அன்பு மீதூர , உள்ளம் அனலில் பட்ட மெழுகு போல் உருக மனம் நைந்து , வாய் அவனது நாமங்களைக் கூறி அரற்றுவதில் முடிகிறது. 

இத்தனை அன்புடைய தொண்டருக்கு இறைவன் இரங்காமல் இருப்பானா ? ஞானசம்பந்தர் அழகாகப் பாடுகின்றார் , " ஆசை தீரக் கொடுப்பார் " என்று. 

ஆனால் நாம் எதற்கெல்லாம் ஆசைப் படுகிறோம் என்பது நமக்கே தெரியும். விளக்கம் தேவை இல்லை. 

ஆசை என்பது அன்பில் நம்மை செலுத்துவதாக இருக்க வேண்டும். அன்பே பக்திக்கு அடிப்படையாக அமைவது. அந்த அன்பும் இறைவன் தந்ததாகவே இருத்தல் சிறப்பு. அவ்வன்பு மாறாததாகவும் இனியதாகவும் தூய்மையாகவும் இருத்தல் அவசியம். அன்பின் வடிவமாகக் கண்ணப்ப நாயனார் திகழ்ந்தார் என்று பெரிய புராணம் கூறும். காரைக்கால் அம்மையும், " இறவாத இன்ப அன்பு " வேண்டினார் என்பார் சேக்கிழார் பெருமான். அப்படிப்பட்ட மேலான அன்பைத்  தனக்கு அருள வேண்டும் என்று பெருமானைத் துதிக்கிறார் மணிவாசகர்:

" மெய்யன்பை உடையாய் பெற நான் வேண்டுமே" என்பது பிரார்த்தனைப் பத்தில் வரும் அழகிய வரி. அத்தகைய அன்பே சிவானந்தம் பெறுவதற்கு வித்தாகிறது. அதன் விளைவை அவர் மட்டுமே கூற இயலும்:

" உள் உருகிப் பெருகி நெக்கு ஆடிஆடி ஆனந்தம் அதுவேயாக அருள்"  என்பது அவ்வுயரிய பிரார்த்தனை. அப்போதுதான் அன்பும் சிவமும் வேறல்ல என்ற ஞானம் பிறக்கிறது. அந்த ஞானம் கிட்டியவர்களது நிலையைத் திருமூலர்           " அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே  " என்பார். இல்வாழ்வுக்கும் அன்பும் அறனும் இன்றியமையாதது என்று திருக்குறளாலும் அறிகிறோம். அன்பு மேலிட்ட அற  வழியில் அமைந்த வாழ்க்கையே பண்பையும்  உயர்ந்த பயனையும் தர  வல்லது என்பது என்பது வள்ளுவர் வாக்கு. அன்புடைமை என்ற ஒரு அதிகாரத்தையே நமக்கு அருளியுள்ளார் தெய்வப்புலவர்.     அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்  சொல் ஆகிய நான்கையும் தவிர்க்க வேண்டும் என்பதே அவர் காட்டிய நன்னெறி. 

பாசமாவது நம்மை உலகியலில் சிக்க வைப்பது. அது மனிதர்கள் மீதோ, பறவை மற்றும் விலங்கினங்களின் மீதோ இருக்கக் கூடியது. அதிலிருந்து விடுபடமுடியாமல் வாழ்க்கை முழுதும் செலவாகிப் பயனற்றுப் போய், அப்பாசமே  மீண்டும் ஒரு பிறவிக்கு நம்மை ஆயத்தம் செய்கிறது. சைவ சித்தாந்திகள், பதி, பசு, பாசம் என்ற முப்பொருள் உண்மையை வலியுறுத்துவார்கள் . பசுக்களாகிய நம்மைப்  பதியாகிய பரம்பொருளிடம்  நாடவிடாமல் தடுப்பது பாசமே ஆகும். அதனைக் கடக்கும் ஆற்றலையும் பெருமானே தந்தருள வேண்டும். இதனைப், " பாசமான களைவார் " என்று சம்பந்தரும், " பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே  " என்று சிவபுராணத்தில் வரும் சிவபுராண வரியும் உணர்த்துவது காண்க. 

பாசத்தால் உலகியலோடு பந்தம் ஏற்படுகிறது. அதுவே முத்தி நிலை அடைவதற்குத் தடையாக இருப்பது. திருஞானசம்பந்தர், தனது அவதாரத்தை நிறைவு செய்யும் தருவாயில் அருளிச் செய்த நமசிவாயத் திருப்பதிகத்தின் முடிவில்  ,  " ஞானசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லாரெல்லாம் பந்த பாசம் அறுக்க வல்லார்களே " என்பதால் பந்தம் அறுந்தாலன்றி முத்தி நிலை கிட்டாது என்பது வலியுறுத்தப்பட்டது. 

நேசக் கரம் நீட்டுவதும் பயன் பெற்றவர்களது தற்காலிக மகிழ்ச்சிக்கே. பயன் பெற்றபின்னர் நேசத்திற்கு மோசம் வந்து விடுகிறது. நேசித்தவரை மறப்பதால் அந்த நற்செய்கை பயனற்றுப் போய் விடுகிறது. இது உற்றார் உறவினருக்கும் பொருந்தும்.  உதவி பெறும் போது காட்டும் முகமலர்ச்சி , பின்னாளில் முழுவதுமாக இற்றுப் போய் விடுகிறது. 

எஞ்சியுள்ள காதல் என்னும் சொல் பேரின்பப்பொருளுக்கே உரியது. இந்நாளில் ஆசை/அன்பு என்று பொருள் தருவதாகத் தவறாகப் பொருள் கொண்டு அதனைச் சிற்றின்பத்தைக் குறிக்கும் சொல்லாகக் கொள்வோர் அதன் அருமை தெரியாதவர்கள். 

ஒருவன் எவ்வளவுதான் , எத்தனை ஆண்டுகள் தான் ஆசைப்பட முடியும் ? ஆசைக்கும் ஒரு அளவு வேண்டும் அல்லவா? அற்பசுகத்தைக் காமம் என்றும் காதல் என்றும் நினைப்பவர்கள் அதன் மறு எல்லையைப் பற்றி எப்போதாவது சிந்திப்பதுண்டா? அந்த எல்லைக்குப் பெயர்தான் காம கோடி என்பது. அப்போது காமம் அழிந்து இறைவன் பால் காதல் ஏற்படுகிறது. அதன் விளைவாக உள்ளம் கசிகின்றது. நம்மை அறியாமலேயே கண்கள் தாரை தாரையாக நீரைப் பொழிகின்றன. நாத்  தழு தழுக்க அவன் நாமங்களை ஓத முற்படுகிறது. சிவஞானம் சித்திக்கிறது. நன்னெறியும் வாய்க்கிறது. இவ்வளவும் அடைய வேண்டுமானால் உலகப் பற்றுக்கள் முழுதும் நீங்கிப் பாச வேர் முற்றிலும் அறுமாறு உள் ஒளி பெருக்கப் பெற்று, உலப்பிலாத ஆனந்தம் பெறுமாறு  அவனது ஐந்தெழுத்தை மறவாது ஆயுள் முழுதும் உச்சரித்தால் நம்மை மெய் நெறியில் ஆட்படுத்தி நிறைவாகத் தனது  கழல் தந்தருளுவான் என்பதே அருளாளர்கள் உபதேசம்.

பாரோர் விண்ணோர் பரவி ஏத்தும் பரனே பரஞ்சோதீ 

வாராய் வாரா உலகம் தந்து வந்து ஆட்கொள்வானே 

பேராயிரமும் பரவித்திரிந்து எம்பெருமான் என ஏத்த 

ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே 

என்ற திருவாசகம் , ஆசை அன்பாக மாறுவதையும் அதுவே ஈசன் பால் நீங்காத காதலாவதையும் நமக்குக்  காட்டி, அந்நிலையை இறையருளே  நமக்குத் தந்தருள வேண்டும் என்பதையும், அதற்கு நம்மை ஆயத்தப்படுத்தவேண்டி, பெருமானின் பல்லாயிரம் நாமங்களையும் ஓத வேண்டும் என்பதையும் அருமையாக உணர்த்துகிறது.  
 

 

 

3 comments:

 1. பதி, பசு, பாசம், பக்தி, முக்தி பற்றிய தங்களின் சமயம் சார்ந்த விளக்கங்களுக்கு நன்றி. அதை ஒட்டிய என் கருத்துக்கள் வருமாறு.

  பல பிராணிகள், அன்பின் ஒரு வெளிப்பாடான ஆன பக்தி காரணமாக ஈசன் கருணையால் மறு பிறப்பு அடைந்து முன் ஜென்ம வாசனையால் மேம் பட்ட தொண்டு செய்து முக்தியும் அடைந்தது பற்றிய புராண வரலாறுகள், நமக்கு அன்பு, பக்தி, முக்தி, மற்றும் மறு பிறப்பு தவிர, மனம் என்னும் தத்துவம் சகல ஜீவராசிகளுக்கும் உண்டு எனவும் காட்டுகின்றன. முன் ஜென்மத்தில் சிறந்த தொண்டுகள் செய்திருந்தாலும் அடுத்த ஜென்மத்தில் மேலும் சிறப்பான தொண்டுகள் செய்து அந்த மனதில் இருந்த ஆசா பாசங்கள் முற்றிலும் நிறைவேறிய பின்னால் மட்டுமே முக்தி கிட்டும் என்பதும் கிடைக்கிறது.

  எனவே, பெயர் மறைந்து, பின் பூத உடலும் மறைந்த பின்னால், கொண்ட ஆசா பாசங்களுடன் அலையும் மனம் அவைகளை நிறைவேற்றுவதற்காகத்தான் மறு பிறவி எடுக்கிறதா?

  அப்படியானால் முக்திக்கு வழி?

  பெயர் மறைந்து பின் பூத உடலும் மறைந்த பின்னால், ஸ்தாவர ஜங்கம சொத்துக்களை விட்டு, இந்த உலகக்தில் கற்றுக்கொண்ட எல்லா அறிவு பூர்வமான சொத்துக்களையும் தகுந்தவாறு தகுந்த இடத்தில் இறக்கி வைத்து எந்தவிதமான ஆசா பாசங்களும் உணர்வுகளும் நினைவுகளும் இல்லாமல் நிச்சலனமாக அனைத்தையும் நீத்து செல்லும் மனம் என்னும் ஆத்மா மட்டுமே ஆகாச பூதத்தில் கரைந்து அங்கிங்கு என்னாதபடி எங்கும் நிறைந்த பரம்பொருளுடன் கலந்து முக்தி அடைகிறதா?

  தெரியவில்லை!

  ReplyDelete
 2. ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் முடிவே இல்லை என்பது இந்துமதக் கோட்பாடு. பிறப்பு எடுப்பதே, முற்பிறவிகளில் செய்த நல் வினை- தீவினைப் பயன்களை அனுபவிப்பதற்காகவே ஆகும். இதை சஞ்சித வினை என்பார்கள்.அவ்வாறு பிறவிப்பயனை அனுபவிக்கையில் இப்பிறவியில் செய்த தீவினைகள் அத்துடன் சேர்வதால் அதையும் இன்னொரு பிறவி எடுத்தே கழிக்க வேண்டியுள்ளது. ஏழுகடல் மணலை எண்ணினாலும் எணண முடியாதது எடுத்த பிறவிகளின் எண்ணிக்கை என்பார் அருணகிரிநாதர்.அப்படியானால் இப்பிறவிப் பிணியிலிருந்து விடுபட வழி இல்லையா என்றால், இறைவனை நாடுவது ஒன்றே வழி என்ற விடை கிடைக்கிறது. இறைவனது கருணை பெறும்வரை பிறவிகள் தொடரும்.அப்பொழுதுதான் பாசம் -பந்தம் ஆகியவை நீங்கப்பெறும். வினைப்பிறவியை வேரறுத்தால் அன்றி முக்தி பெற இயலாது என்பது இதிலிருந்து அறியப்படும். விரிக்கிற் பெருகும் என அஞ்சி இத்துடன் அமைகிறேன்.

  ReplyDelete
 3. Dear Sekar, Mani and Krishna,
  It is a real pleasure to read this significant and well written article and the enlightened comments. May our respective paths towards realization, through devotion and surrender to the divine, be blessed by the divine!
  Desikan.

  ReplyDelete